பழைய கதையாகவே இருந்தாலும் அதையும் நவீன பாணியில் இப்போதைய ஜெனரேஷனுக்கு பிடித்தாற்போல் மாற்றிக் கொடுத்தால் ரசிகர்கள் நிச்சயம் பார்க்கத்தான் செய்வார்கள். பாராட்டத்தான் செய்வார்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அறிமுக இயக்குநர் ஆனந்த், தன் கன்னி முயற்சியிலேயே வெற்றி கண்டிருக்கிறார்.
இவரைப் போலவே ஹீரோ விஜய் ஆண்டனிக்கும் ஹாட்ரிக் வெற்றி இந்தப் படத்தின் மூலமாகவே கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே அவர் நடித்த ‘நான்’, ‘சலீம்’ ஆகிய படங்கள் கதையின் தொடர்ச்சியாக வந்து வெற்றி பெற்றிருப்பதால் இந்தப் படமும் அதன் தொடர்ச்சியாக வந்திருக்குமோ என்ற ஐயப்பாடு இருந்த்து. நல்ல வேளையாக அப்படி எதுவும் இல்லாமல்.. வக்கீல் கதையாக இதனை மாற்றியமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!
சின்ன ஒன் லைன்தான்.. ஈகோ.. அதுவம் காதலர்களுக்கும் இருக்கும் ஈகோ. தங்களது காதலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு வக்கீல்களின் கதையுடன் அதிகம் நகைச்சுவை கலந்த ஒரு கிராமத்துக் கதையையும், ஒரு அதிரடியான போலீஸ் என்கவுண்ட்டர் கதையையும் இணைத்து அனைத்திற்கும் சம அளவிலான பங்களிப்பு கொடுத்து திரைக்கதை அமைத்து ஜெயிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்.
வக்கீல்களான ஹீரோ விஜய் ஆண்ட்டனியும், ஹீரோயின் சுஷ்மா ராஜும் அலுவலகம் வைக்க இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். புரோக்கர்களின் கமிஷன் ஆசையால் இருவரும் வக்கீல்கள்தான் என்பது தெரியாமலேயே வீட்டிற்குள் அலுவலகம் அமைத்து விடுகிறார்கள். உண்மை தெரிந்த பின்பு சங்கடத்துடன் சர்ச்சைகள் வெடிக்கிறது. இருவருமே ஒருவரையொருவர் வெளியேறச் சொல்ல.. அது முடியாமல் போகிறது.
தங்களுக்குள் ஒரு போட்டி வைத்துக் கொள்கிறார்கள். யாருக்கு முதலில் கேஸ் கிடைக்கிறதோ அவர்கள் இங்கேயே இருக்கலாம். கேஸ் கிடைக்காதவர்கள் வெளியேறலாம் என்பதுதான் உடன்படிக்கை. ஆனால் இருவருக்குமே ஒரே சமயத்தில் கேஸ் கிடைத்துவிட.. இருவரும் அங்கேயே இருக்க வேண்டிய சூழல்..
இருவருமே ஒருவரையொருவர் எதிர்த்து வழக்காட வேண்டிய கட்டாயம்.. இடையில் இருவருக்குமிடையேயான காதலும், கத்திரிக்காயும் வெளியில் வர உடன்படிக்கையை மறந்து போகிறார்கள். கேஸை முடிக்க நினைத்த இவர்கள் கேஸே, ஒரு போலீஸ் என்கவுண்ட்டரை படம் பிடித்த வீடியோ சிடியினால் சிக்கலாகிறது..
இதில் இருந்து இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்..? இவர்களது காதல் ஜெயித்ததா..? கேஸ் என்ன ஆனது என்பதையெல்லாம் இந்த இரண்டரை மணி நேர படத்தைப் பார்த்து சிரித்தபடியே தெரிந்து கொள்ளுங்கள்..!
கதை எங்கே இருக்கு என்றவர்களும், திரைக்கதையில் காமெடியை எப்படி கொண்டு வருவது என்கிற சந்தேகம் உள்ளவர்களும் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம்..! முதற்பாதியில் கொஞ்சமாக இருக்கும் நகைச்சுவை, இரண்டாம் பாதியில் தலைவிரித்தாடுகிறது. கிளைமாக்ஸில் ரணகளம் என்றே சொல்ல வேண்டும்.. திரைக்கதையைவிடவும் நடிகர்களின் நடிப்பும், இயக்கமும் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்ததுதான் காரணம்..!
ஹீரோ விஜய் ஆண்ட்டனிக்கு இது வித்தியாசமான வேடம்தான். முந்தைய படங்களில் அவர் காட்டியிருந்த இறுக்கமெல்லாம் இந்தப் படத்திற்குத் தேவையே இல்லாமல் போய்விட்டது. ரொம்பச் சாதாரணமாக வந்து சென்றாலே போதுமென்ற கேரக்டர்.. ஹீரோயினுடன் மல்லுக்கு நின்று தன் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் மோதுகின்ற காட்சிகளிலெல்லாம் கொஞ்சமேனும் நடிப்பைக் காட்டியிருந்தாலும் அதுதான் அவரது இயல்பான குணம் என்பதால் இவருக்கு மிக எளிதாகிவிட்டது..! டயலாக் டெலிவரியில் காமெடியின் உச்சம் தொட்ட நடிகர்களிடத்தில் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். அதிலும் சீரியல் ஆக்டர் ஜெகனுடன் மல்லுக்கட்டி நின்று காமெடி செய்திருக்கிறார். வெல்டன் ஸார்..!
ஹீரோயின் சுஷ்மாராஜ். பார்ப்பதற்கு அனுஷ்காவுக்கு தங்கச்சி போலவே இருக்கிறார். தமிழுக்கு மட்டுமே புதுமுகம் என்றாலும் தெலுங்கில் சில படங்களில் நடித்திருப்பதால் நடிப்பில் குறையில்லை. கவர்ச்சிக்கு வழியில்லை என்றாலும் ஸ்கிரீனில் வரும்போது அழகாகவே இருக்கிறார். நடன அசைவுகளில் அனுஷ்கா ஸ்டைல் தெரிகிறது.. நடிப்பிலும் சோபிக்கிறார். தயாரிப்பாளர்கள் அனுக்கிரஹத்தால் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் நல்லதுதான்..!
இவர்களையும்விட படத்தில் அதிகம் பாராட்டைப் பெறுபவர்கள் பசுபதியும், எம்.எஸ்.பாஸ்கரும்தான். பசுபதி தன்னுடைய உடல் மொழியாலேயே நகைச்சுவையை சிதறடித்திருக்கிறார். கூடவே குபீர் சிரிப்பிற்காகவே இறக்குமதி செய்யப்பட்ட வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் கச்சிதமான இடங்களில் டெலிவரி செய்திருப்பதால் பசுபதியின் நடிப்பு அதிகமாகவே கவருகிறது. அலட்சியமாக “ஓட விட்டு வெட்டுவேனான்னு சந்தேகமா கேட்டீங்கள்ல.. இப்ப பாருங்க..” என்று சொல்லிவிட்டு வம்புச் சண்டைக்கு இழுத்துச் சென்று காட்டுதில் வன்முறையையும் மீறி சிரிக்க வைத்திருக்கிறார்.
எதற்கெடுத்தாலும் ஆத்தாவிடம் அனுமதி கேட்கும் எம்.எஸ்.பாஸ்கரும், அவரது ஜோஸியக்காரர் மனோபாலாவும் செய்யும் சேட்டைகள் தனி. இவர்களது அலப்பறைக்கு இவர்களது முட்டாள் அடியாட்களும் போடும் ஜே கோஷமும் தியேட்டரில் பட்டையைக் கிளப்புகிறது. கோர்ட்டில் தன்னுடைய வம்சத்தின் பூர்வாசிரமத்தை எம்.எஸ்.பாஸ்கர் அள்ளிவிடும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
இதைவிட.. வக்கீல் தம்பதிகள் கல்யாணமான பின்பும், பசுபதியும், எம்.எஸ்.பாஸ்கரும் சம்பந்திகளான பின்பும் அடுத்த 25 வருடங்களுக்கு வழக்கினை தள்ளிக் கொண்டே வரும் படத்தின் இறுதிக் காட்சிகளும் சுவையானவை. ரகளையானவை.. !
ஜெகனின் ஸ்பீடு வசனங்கள் படத்திற்கு ஸ்பீடு கொடுத்திருக்கின்றன. இதேபோல காளி வெங்கட்டின் அப்பாவித்தனமான காபி சீன் படத்திலேயே மிகப் பெரிய கைதட்டலை அள்ளிக் கொடுக்கிறது கிளைமாக்ஸில்…! கிளைமாக்ஸ் காட்சியில் இத்தனை ஆர்ட்டிஸ்டுகளை வைத்தும் நகைச்சுவையாக திரைக்கதை அமைத்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர்.
தீனா தேவராஜன் இசையமைத்திருக்கிறார். ‘ஒரு பெண்ணை பார்த்தேன் மாமா’, ‘பல கோடி பெண்களிலே’, ‘வாடி குட்டி லேடி’ என்று பலவித டைப்புகளில் பாடல்களை உருமாற்றியிருக்கிறார்கள். பாடலும், ஆட்டமும் படு ஜோர்.. ஆற்றங்கரையில் ஆடும் ஆட்டத்திற்கும், அந்தத் சிச்சுவேஷனுக்கான பொருட்களை அமைத்துக் கொடுத்த கலை இயக்குநருக்கும் ஒரு ஷொட்டு..! இதேபோல் ஒளிப்பதிவாளர் ஓமின் காட்சிப்படுத்தலுக்கும், எடிட்டர் தியாகராஜனின் கிளைமாக்ஸ் காட்சியின் கத்தரி வேலைக்கும் நமது பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
பொதுவாக திரைப்படங்களில் அரசியல்வியாதிகளை எப்படி வேண்டுமானாலும் திட்டுவார்கள். அதிகாரிகளை, அதிலும் குறிப்பாக போலீஸாரைக்கூட குறிப்பிட்டே திட்டுவார்கள். அஞ்ச மாட்டார்கள் நமது இயக்குநர்கள். ஆனால் வழக்கறிஞர்களை பற்றி மட்டும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் பயம்..
ஆனால் இந்த இயக்குநர் ஆனந்த், தனது முதல் படத்திலேயே வழக்கறிஞர்களை மையமாக வைத்து எடுத்து, அதிலும் இப்போதைய காலக்கட்டத்தில் வழக்கறிஞர்கள் கேஸ் பிடிக்க எப்படி அலையோ அலை என்று அலைகிறார்கள் என்பதைக்கூட நகைச்சுவையாக சொல்லியிருக்கும் தைரியத்திற்காக நமது சல்யூட்..!
குடும்பத்துடன் பார்ப்பதற்கு தகுதியான படம் என்று சொல்ல ஒரு வார இடைவெளிக்குள் மீண்டும் ஒரு படம் வந்திருக்கிறது. சம்மர் லீவுக்கு ஏற்றது இந்த இந்தியா-பாகிஸ்தான் திரைப்படம். மிஸ் பண்ணிராதீங்க..!