full screen background image

தமி்ழ்த் திரைப்பட இயக்குநர் தாமிரா காலமானார்

தமி்ழ்த் திரைப்பட இயக்குநர் தாமிரா காலமானார்

தமிழ்த் திரைப்பட இயக்குநரான தாமிரா இன்று காலை சென்னையில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானார். அவருக்கு வயது 53.

அடிப்படையில் ஒரு எழுத்தாளரான தாமிரா, ‘மின் பிம்பங்கள்’ நிறுவனம் தயாரித்த பல தொலைக்காட்சி சீரியல்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

ஜெயா தொலைக்காட்சியில் வெளியான ‘அண்ணி’ சீரியலுக்கும் வசனம் எழுதினார். ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் இயக்கிய ‘பொய்’ படத்திற்கும் வசனம் எழுதியிருக்கிறார். அதே படத்தில் கே.பி.யிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார் தாமிரா.

2010-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் ‘ரெட்டைச் சுழி’ என்கிற படத்தை இயக்கினார். இந்த தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச இயக்குநர்களான கே.பாலசந்தர் மற்றும் பாரதிராஜா இருவரையும் இணைந்து நடிக்க வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு 2018-ம் ஆண்டு சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் ‘ஆண் தேவதை’ என்ற படத்தை இயக்கியிருந்தார் தாமிரா.

இதையடுத்தும் அடுத்தப் படத்தை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் தற்போது ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில்தான் கடந்த 15-ம் தேதியன்று இவரை திடீரென்று கொரோனா வைரஸ் தாக்கியது. இதையடுத்து உடனடியாக சென்னை அசோக் நகரில் உள்ள மாயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் தாமிரா.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும், இன்று காலை, இயக்குநர் தாமிரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருடைய உடல் மருத்துவமனையில் இருந்து அவருடைய சொந்த ஊரான திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

காலமான இயக்குநர் தாமிராவுக்கு பஷிரியா என்ற மனைவியும், முகமது ராஷித், இர்ஷாத் ரிஷ்வான் என்ற மகன்களும் பவ்ஷியா என்ற மகளும் உள்ளனர்.

இயக்குநர் தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  •  
Our Score