full screen background image

“வில்லன் சத்யராஜை ஹீரோவாக்கியது ஏன்..?” – இயக்குநர் பாரதிராஜா விளக்கம்

“வில்லன் சத்யராஜை ஹீரோவாக்கியது ஏன்..?” – இயக்குநர் பாரதிராஜா விளக்கம்

நடிகர் சத்யராஜை  தனது ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தது ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாதான் என்பது தமிழ்த் திரையுலகமே அறிந்ததுதான்.

ஆனால் இதே சத்யராஜ் தனது திரையுலக வாழ்க்கையின் துவக்கத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம் வாய்ப்பு கேட்டுப் போனபோது, “உன் உடம்புக்கும், உசரத்துக்கும் உனக்கு வில்லன் கதாபாத்திரம்தான்யா பொருத்தமா இருக்கும்…” என்று சொல்லித் திருப்பியனுப்பிவிட்டாராம் பாரதிராஜா.

அப்படி திருப்பியனுப்பப்பட்ட சத்யராஜ் எப்படி அதே பாரதிராஜாவின் படத்தில் நாயகனாக அறிமுகமானார்..?

இது பற்றி ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவர் பேசும்போது, “1985-ம் ஆண்டு ‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் ஒரு சின்ன வில்லன் வேடம் இருந்தது. இதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது அப்போதைக்கு வில்லனாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜின் முகம் எனக்கு நினைவுக்கு வந்தது. உடனேயே அவரை வரவழைத்து, “சின்னக் கேரக்டர்தான். இப்போ பண்ணு. அப்புறம் நல்ல கதை கிடைத்தால் உன்னை பெரிய ஆளாக்குறேன்..” என்று சொல்லித்தான் நடிக்க வைத்தேன்.

இதற்குப் பின்பு எனது அடுத்தப் படமான ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் நாயகனாக யாரை தேர்வு செய்யலாம் என்று யோசித்தேன்.அந்தப் படத்தின் கதைப்படி, ”ஆள் பார்க்கவே வில்லன் மாதிரி இருக்கணும். ரவுடி மாதிரியிருக்கணும்.. ஆனால் ஹீரோவா தெரியவே கூடாது…” என்று யோசித்தபோது சத்யராஜ்தான் நினைவுக்கு வந்தார்.

வரச் சொல்லிப் பேசினேன். “ஸார் நான் ஹீரோவா..? என்ன ஸார் காமெடி பண்றீங்களா..? என்னை விட்ருங்க.. நான் பாட்டுக்கு ஒரு பக்கம் வில்லத்தனம் பண்ணிட்டுப் போயிர்றேன்..” என்றார். “இல்ல.. இல்ல.. இந்தக் கதைக்கு நீதான் ஷூட்டா இருப்பா. நீயே நடிச்சிரு..” என்று சொல்லி நடிக்க வைத்தேன்.

இதற்கடுத்த வருஷமே சத்யராஜ் பரபரப்பான முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறிட்டார். அந்த அளவுக்கு நிறைய படங்கள்ல நடிச்சிட்டிருந்தார். இந்த நேரத்துலதான் என்கிட்ட ‘வேதம் புதிது’ என்ற கதை வந்தது.

இந்தக் கதைப்படி கொஞ்சம் நக்கலும், கிண்டலும், கேலியுமா பேசுற ஆளு தேவைன்றதால இப்பவும் எனக்கு சத்யராஜ்தான் தோணுச்சு.

மத்தவங்ககிட்ட இல்லாத ஒரு தனித்திறமை சத்யராஜ்கிட்ட இருக்குன்னா அது அவரோட கிண்டல் செய்ற தொனி. நக்கல் செய்யும் தனித்துவம்.. இதெல்லாம் மத்தவங்ககிட்ட இல்லை. இந்தப் படத்துக்கும் இதுதான் தேவைன்றதால சத்யராஜையே இதுலேயும் நடிக்க வைச்சேன்.

நான் எதிர்பார்த்ததுக்கும் மேலாக அந்த ‘பாலு தேவர்’ என்ற கதாபாத்திரத்தைத் தூக்கி சுமந்தார் சத்யராஜ். இன்றைக்கும் அந்தக் கதாபாத்திரம் தமிழகத்தில் மறக்க முடியாமல் இருக்குன்னா அதுக்குக் காரணம் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவராக இருந்த சத்யராஜ்தான்..” என்று பாராட்டியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

 
Our Score