அன்றும் இன்றும் என்றும் இசையை தனது வாழ்க்கையாக்கியவர். என்றும் நான் என் இசைப் பயணத்தை நிறுத்தவில்லை நிறுத்தப் போவதுமில்லை என்று இன்றும் உற்சாகத்துடன் தினமும் பாடல்கள் எழுதி இசையமைத்து பாடி வருகிறார் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ்.
தனது காதலிக்கு எழுதிய ‘உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது’ என்ற கவிதையை, இசையமைத்து, காதலிக்காக பாடி, அதை இலங்கையின் முதலாவது தமிழிசைத் தட்டில் பதிவு செய்து வெளியிட்டவர் இவர்.
அவரின் காதலி “சங்கீத பூஷனம்“ சிவமாலினிதான் இவர் சாதனை புரிய காரணமானவர் என்றே சொல்லலாம். இருவருக்கும் திருமணம் ஆனதும் மாலினி அவர் கணவருடன் சகல மேடைகளிலும் பாடி வந்தார்.
அவர் ஒரு ‘சங்கீத பூஷணம்’ என்பதால் சினிமா பாட்டுகள் பாடும் பொழுது மிகவும் எதிர்ப்புகளை சந்தித்தார். ஒரு ‘சங்கீத பூஷணம்’ கர்னாடக சங்கீத கச்சேரிகளில் மட்டும்தான் பாட வேண்டும். சினிமா பாடல்கள் பாடி சங்கீதத்தை அவமதிக்கக் கூடாது என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டார்.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ‘சினிமா பாடலும் இசைதான்’ என்று பதில் சொல்லிவிட்டு தன் கணவருடன் தொடர்ந்து பாடினார் மாலினி.
மாலினி மீது வைத்த காதல்தான் ‘உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது’ பாடல் உருவாகி இலங்கையின் இசை வரலாற்றில் அழிக்க முடியாத சாதனை படைக்க காரணமான பாடலாகும்.
அதைத் தொடர்ந்து M.P.பரமேஷ்
- நீயின்றி நிலவு
- போகாதே தூர போகாதே
- நீ வாழுமிடமெங்கே
- மனமாளிகை ரோஜா
- எழுதுகிறேன் பாட்டு
- அழைக்குமோசை கேக்கலையா
- பாடலெனக்கிது முதல் தரம் தான்
என்ற பாடல்களையும் எழுதி, இசையமைத்து பாடினார். இந்த 8 பாடல்களையயும் 3 இசைத் தட்டுகளில் வெளியிட்டார். இவைகளில் முதலாவதாக வெளியிடப்பட்ட இசைத் தட்டில் இருந்த ‘உனக்கு தெரியுமா’ பாடல் சாதனை படைத்தது.
அது மட்டுமல்லாது 4-வது இசைத் தட்டில் சிங்கள பாடல்களையும் வெளியிட்டார். இந்த சிங்கள பாடல்கள் ஏற்கனவே மற்ற 3 தமிழிசை தட்டுகளிலும் M.P.பரமேஷ் அவர்களின் வரிகளிலும், இசையமைப்பிலும் வெளிவந்த பாடல்கள்தான்.
பின் வரும் இந்த 4 பாடல்களும் தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாடல்களாகும்.
- உனக்கு தெரியுமா / Thigu neela asthekai
- பாடலெனக்கிது முதல் தரம் தான் / Agasagevan
- அழைக்குமோசை கேக்கலையா / sulanga selavanai
- மனமாளிகை ரோஜா / Thura arte athithe
ஒரு இசையமைப்பாளர் பாடகர் கவிஞர் என்பதையும் தாண்டி அந்த காலத்தில் வெளியிடப்பட்ட இசைத் தட்டுகள், இன்டர்நெட் மற்றும் எந்த டெக்னாலஜி இல்லாத காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க செய்தார். இவரது புகழ் இந்தியாவரை ஒலித்தது.
இந்த இசைத் தட்டுகளை வெளியிட வேண்டிய சிந்தனை எப்படி வந்தது என்று கேட்டோம்.
“இசைத் தட்டுகளை வெளியிட வேண்டிய காரணம் எனது இசைக் குழு தொடர்ந்து இயங்காமல் போனதுதான்.
எனது பாடசாலை தோழர்களையும், மற்றும் சில இசைக் கலைஞர்களையும் இணைத்துதான் முதலில் எனது இசைக் குழுவை ஆரம்பித்தேன். அதில் பெரிய வருமானம் வரவில்லை. எனக்கும் அது குறிக்கோளாக இல்லை.
ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வில் வயதுக்கேற்ற மாற்றம் வரும். எனது இசைக்குழு நண்பர்கள் அவரவர் வாழ்க்கையை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கவும், சிலருக்கு வெளிநாடு செல்லவும், கப்பலுக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்புகள் கிட்டியது.
அவர்கள் என் இசைக் குழுவை விட்டு சென்றதும் புதிய தரமான கலைஞர்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் அவர்கள் நிலையாக எம்முடன் இருக்க முடியவில்லை. இலங்கையில் இசைக் கலைஞர்கள் பெரியளவில் கிடைப்பது கஷ்டம். அதனால் எனது இசைக் குழு தொடர்ந்து இயங்க முடியவில்லை.
இந்த இசை நிகழ்ச்சிகளில் நாம் பெருமளவில் சினிமா பாடல்களை பாடினாலும் நான் எனது சொந்த பாடல்களையும் இயற்றி இசையமைத்து பாடினேன். அந்த பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. அதில் சில ‘உனக்கு தெரியுமா’, ‘மீனிசை பாடிவரும்’, ‘யாழ் பாடி யாழ்பணம்’, ‘திருகோணமலை எங்கள் நாடு’ என்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
“இந்த பிரபலமான பாடல்களை இசைத் தட்டுகளில் பதிவு செய்து விடு” என்று எனக்கு மூத்த கலைஞர்களின் அறிவுரை கிடைக்க அதை பின்பற்றினேன். இசைத் தட்டுகள் வெளியிடும் முன் “இசைத் தென்றல்” என்ற பெயரில் மேடை நிகழ்ச்சிகளை செய்து மிகவும் புகழ் பெற்றோம்.
அப்போது எனது அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்கி என் தம்பியை எம்முடன் இணைத்துக் கொண்டேன். தம்பி மேடை நிகழ்ச்சிகளில் வாத்தியக் கருவி(keyboard) வாசிப்பவராக இருந்தார். அத்துடன் வாத்தியக் கருவி ஒருங்கமைப்பாளராக(orchestrator)வும் இருந்தார். அவரை மூத்த கலைஞர்கள் வழி நடத்தினார்கள்.
மூத்த கலைஞர்களிடம் எனக்கு என்ன தேவை என்று சொல்லி விடுவேன், அவர்கள் தமது வேலைகளை திறம்பட செய்வார்கள். நான் பாடல் வரிகள் எழுதுவது, இசையமைப்பு, பாடுவது, விளம்பர வேலைகள் பொருளாதார சிரமங்களை சமாளிப்பது என்று பொறுப்புக்களை கவனித்ததால் எனது படிப்பை நிறுத்தி விட்டு கொழும்பு சென்று தங்கி இசைத் தட்டு வெளியிடும் முன்னேற்றப்பாடுகளில் தீவிரமாக இருந்தேன்.
என் நண்பனும், எனது இசைக் குழுவில் முக்கிய நபராக இருந்த மகேஷ் எனக்கு பொருளாதார ரீதியில் மிகவும் உதவி செய்தார். என் தம்பியின் படிப்பு கெட்டுவிட கூடாதென்பததிற்காக நான் அவரை தொந்தரவு செய்யவில்லை.
நான் இசையமைத்த பாடல்களை பதிவு செய்யும்பொழுது, இலங்கை வானொலியில் வேலை செய்த அத்தனை இசைக் கலைஞர்களையம் நாடினேன். அவர்கள் மிகவும் திறமையான வாத்திய இசைக் கலைஞர்கள்.
அந்தக் காலத்தில் அவர்களுக்கு கட்டுப்பாடு இருந்தது, அதாவது, அவர்கள் இலங்கை வானொலிக்கு மட்டுமே பணி புரிய வேண்டும் என்பது தான். நான் தேவையான நபர்களை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று அத்தனை வாத்திய கலைஞர்களையும் எனது பாடல்களை பதிவு செய்யும்பொழுது அவர்களை பயன்படுத்தி ஒழுங்கு செய்தேன்.
அந்த கலைஞர்கள் ஆங்கில notation வாசிக்கும் வழக்கமற்றவர்கள். ஹிந்துஸ்தானிய notationதான் எனது பாடல்கள் பதிவு செய்யும் பொழுது பாவிக்கப்பட்டன. ஹிந்துஸ்தானிய ஸ்வாரத் தட்டுகளை எனக்கோ என் தம்பிக்கோ எழுத தெரியாது. நான் அத்தனை கலைஞர்களுடனும் இருந்து எனக்கு தேவையானவற்றை கேட்டும், சொல்லியும், பாடியும் பெற்றுக் கொண்டேன்.
அந்த நேரத்தில் சகல விதத்திலும் எனக்கு உதவி செய்தவர் ஒரு பெரும் திறம் கலைஞர் Pappa Myskin அவர்கள். மூத்த கலைஞர்களாகிய இலங்கை வானொலி கலைஞர்கள் தான் எனது பாடல்களுக்கு சினிமா பாடல்களின் பின்னணி இசைத் தரம் இணைத்தவர்கள்.
ஆனால், இந்த நேரத்தில்.. இப்போதைய காலக்கட்டத்தில் எனது தம்பி “அனைத்துப் பாடல்களையும் நான்தான் இசையமைத்தேன்…” என்று சொல்வது பச்சைப் பொய். அத்துடன் “நான்தான் சகல ஸ்வாரத் தட்டுகளை notation எழுதினேன்” என்று சொல்வது அந்த ஹிந்துஸ்தானிய notation-களை எழுதிய சகல கலைஞர்களையும் அவமானப்படுத்தும் பொய்யாகும்.
இதை, நான் இங்கே தெளிவாக பதிவு செய்கிறேன். இசைத் தட்டுகளில், இசையமைப்பில் ஏன் அவர் பெயர் இருக்கின்றது என்று சிலர் கேட்டனர். தனது பெயரை போடாமல்விட்டால் பிரிந்துவிடுவேன் என்று சொல்வார். அதனால்தான் போட வேண்டியதாகிவிட்டது.
எனக்குத் தெரியாமல் record-ல் பெயர்களை மாற்றினார். records print ஆகி வரும்பொழுதுதான் நானே அதைப் பார்த்தேன். அப்போதே எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும், எதையும் மாற்ற முடியவில்லை… அதற்கான பணம் அப்போது என்னிடம் இல்லை.
இசையமைப்பில் வேண்டுமென்றே என் அனுமதியின்றி அவர் பெயரையும் போட்டுக் கொண்டார். என் பெயரை அதிலிருந்து அவர் அழிக்காமல்விட்டது எனது அதிஷ்டம்தான். எல்லாவற்றையும் தம்பிதானே என்று விட்டு விட்டேன்.
தனது பெயரை உரிமை இல்லாமல் போட்ட பின்னரும் என்னை விட்டு பிரிந்து போய் சொந்தமாக இசைக் குழு ஒன்றை அமைத்தார். அந்தக் காலத்தில் அவர் வேண்டுமென்றே செய்த தவறை இன்றும் கடைபிடிக்கிறார்.
இத்தனை காலமும் நான் இதைப் பற்றி பொருள்படுத்தாமல் இருந்தேன். குடும்ப விடயம் என்று கருதி வெளியில் பேசுவதில்லை. இப்பொழுது நான் பேசியாக வேண்டும்.
நான் இசையமைத்த சகல பாடல்களுக்கும் எனது மகள் பிரபாலினிதான் வாரிசு. வேறு யாரும் இதை உரிமை கொண்டாட என் அனுமதி இல்லை. இசையமைப்புக்கும், வாத்தியக் கருவி ஒருங்கமைப்புக்கும் வித்தியாசம் தெரியாத என் தம்பி இன்றும் குழப்பத்தில் “எனது பாடல்களுக்கெல்லாம் நான்தான் இசையமைப்பாளர்” என்று சொல்லிக் கொள்வது தவறு மற்றும் பொய்.
என் மனைவிக்கு என் காதலை தெரிவிக்க நான் எழுதி இசையமைத்து பாடிய “உனக்கு தெரியுமா” பாடலுக்கும் இதுதான் நிலைமை…” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
கவிஞர், பாடகர், இசையமைப்பாளர் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. பரமேஷ் அண்ணா அவர்கள். இதுவரையிலும் 2000 பாடல்களுக்கு மேலே இசையமைத்து தயாராக வைத்திருக்கிறார்,
ஆனாலும், பொருளாதார ரீதியில் எல்லாவற்றையும் தரமான முறையில் பதிவு செய்து வெளியிட முடியாததால் சில நூறு பாடல்களை மட்டுமே பதிவு செய்தும், மீள் பதிவு செய்தும் வருடா வருடம் வெளியிடுகிறார்.
இலங்கையை பொறுத்தவரை சினிமா இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறது, அங்கே அந்த காலத்தில் சினிமாவில் இசையமைத்து பெயரும் புகழும் சம்பாதிக்க முடியாது என்பதை விட வாய்ப்புகள் குறைவு என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் M.P.பரமேஷ் அவர்கள் இந்திய நடிகர்கள் அளவுக்கு புகழ் பெற்றிருந்தார். 30 வருட போரில் மக்கள் உயிர்களை, உடமைகளை மட்டும் இழக்கவில்லை. அவர்கள் கலையை, கலைஞர்களின் படைப்புகளை, உணர்வுகளை இழந்துவிட்டார்.
M.P.பரமேஷ் அவர்களை போன்ற அற்புதமான மூத்த கலைஞர்களை ஈழத்து மக்கள்கூட மறந்துவிட்டார்கள் என்பது கவலைக்குரிய விடயம்தான். 1986-ல் ஜெர்மனி சென்ற M.P.பரமேஷ் அவர்கள் தொடர்ந்தும் இசையுடன் வாழ்ந்து வருகிறார்.
அவர் மனைவி மாலினி 2000-ம் ஆண்டு இறையடி அடைந்துவிட்டார். பரமேஷ் மாலினி தம்பதியினருக்கு 6 குழந்தைகள், அனைவரும் இசையில் ஆர்வமுள்ளவர்கள். பரமேஷ் மாலினியின் மூத்த மகளான, ஈழத்து மெல்லிசை குயில் “பிரபாலினி பிரபாகரன்” இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர்.
பிரபாலினி இந்தியாவில் 2016 முதல் ஈழத் தமிழ் மகளாக எடிசன் விருது பெற்ற பெருமைக்குரியவர். இசையில் அமைதியாக பல தரப்பினருடன் இணைந்து பணி புரிந்து வருகிறார். ரசிகர்களால் Queen Cobra என்று அழைக்கப்படுபவர் இந்த ஈழத் தமிழ் மகள்.
கடந்த ஆண்டு M.P.பரமேஷ் அவர்கள் தனது இசை வாழ்வின் GOLDEN JUBILEE விழாவைக் கொண்டாடினார். உலகெங்கும் வாழும் பல கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பல விருதுகளை பெற்ற பரமேஷ் அவர்களுக்கு 2019ல் ஜெர்மனியில் வெற்றி மணி பத்திரிகையின் வாழ்நாள் சாதனையாளர் விருது, மற்றும் tamil mirror canadaவின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைக்கப் பெற்றார்.
இன்றும் தனது மனைவிக்காக பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிட்டு வரும் அன்பு காதலன்! காதல் உள்ளவரை உங்கள் இசை என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்!
பரமேஷ் அவர்களின் பாடல்களை itunes, sportify மற்றும் சகல digital platformகளிலுல் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.