தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அமீரா’.
செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். பிரபல மலையாள முன்னணி நடிகையான அனு சித்தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ‘கூத்துப்பட்டறை’ ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடிக்கின்றனர்.
பல சர்வதேச விருதுகளை குவித்த ’டு லெட்’ படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான செழியன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
சீமானிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
தயாரிப்பு – தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9, இயக்குநர் – ரா.சுப்பிரமணியன், பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, ஒளிப்பதிவு – இரா.செழியன், இசை – விஷால் சந்திரசேகர், படத் தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்கம் – சிவராஜ், சண்டை இயக்கம் – சுப்ரீம் சுந்தர், புகைப்படம் – சாரதி, மக்கள் தொடர்பு – ஆ.ஜான், டிசைன்ஸ் – தண்டோரா, தயாரிப்பு மேற்பார்வை – மா. சிவக்குமார், நிர்வாகத் தயாரிப்பாளர் – முத் அம் சிவா – பார்த்திபன் சன்ராஜ்.
இந்தப் படத்தில் நாயகியான அனு சித்தாரா ‘அமீரா’ என்கிற டைட்டில் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
‘அமீரா’ என்றால் இளவரசி என அர்த்தம். இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் ‘அமீரா’ என பெயர் வைத்துள்ளனர்.
இந்த ‘அமீரா’ படம் பற்றி இயக்குநர் ரா.சுப்ரமணியன் கூறும்போது, “ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி, ஒரு கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து, தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிறுத்தி, பத்து வருட தண்டனையும் பெற்றுக் கொடுத்து வருகிறார்.
ஆனால், தண்டனைக் காலம் முடிந்து, அந்த குற்றவாளி சிறையில் இருந்து திரும்பிய பின், ஏதேச்சையாக அவரை சந்திக்கும் அந்த போலீஸ் அதிகாரிக்கு, உண்மையான குற்றவாளி அவர் இல்லை என்றும், அவருக்கு தவறாக தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டோம் என்பதும் தெரிய வருகிறது.
இதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி காரணமாக, அதற்கு பிராயச்சித்தம் தேடும்விதமாக, உண்மையான குற்றவாளி யார் என தேடி பத்து வருடங்கள் கழித்து மீண்டும் பயணப்படுகிறார் அந்த போலீஸ் அதிகாரி. இதுதான் இந்த ‘அமீரா’ திரைப்படத்தின் கதை..” என்கிறார்.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தை வரும் ஜனவரியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.