இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மதூர் பண்டார்க்காரின் புதிய படத்தில் நடிகை தமன்னா நாயகியாக நடிக்கவுள்ளார்.
‘சாந்தினி பார்’, ‘சாட்ட’, ‘பேஜ்-3’, ‘கார்ப்பரேட்’, ‘டிராபிக் சிக்னல்’, ‘பேஷன்’, ‘ஜெயில்’, ‘காலண்டர் கேர்ள்ஸ்’ என்ற பரபரப்பு பாலிவுட் படங்களை இயக்கியவர் மதூர் பண்டார்க்கார். இவர் தற்போது இயக்கவுள்ள புதிய திரைப்படம் ‘பப்ளி பவுன்சர்(BABLI BOUNCER).’
இந்தப் படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ பிக்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்தில் சவுரப் சுக்லா அத்துடன் அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதயத்தை வருடும் இந்தப் படத்தின் கதையை அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இந்த ‘பப்ளி பவுன்சர்’ திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான ‘பவுன்சர் நகரமான‘ அசோலா ஃபதேபூரை கதைக் களமாகக் கொண்ட ஒரு பெண் பவுன்சரின் மகிழ்ச்சியூட்டும் கற்பனைக் கதையாகும்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் மதூர் பண்டார்கர் பேசும்போது, ”ஒரு திரைப்பட இயக்குநராக இதுவரையிலும் சொல்லப்படாத ஒரு கதையை ஆராயும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலமாக எனக்குக் கிடைத்தது.
ஒரு பெண் பவுன்சரின் வாழ்க்கைக் கதையை அவரோடு இணைந்த நகைச்சுவை இழையோடு சித்தரிக்க விரும்புகிறேன், அதுவும் நம் மனதை விட்டு அகலாத ஒரு நீடித்த தாக்கத்தை இந்தப் படம் நமக்குள் விளைவிக்கும்.
பெண் பவுன்சர்கள் குறித்த உலகத்தின் பார்வையில் இந்தக் கதையை முன் வைக்க எப்போதும் போலவே நான் தயாராக இருக்கிறேன். இது ஒரு மிகச் சிறந்த அற்புதமான கதை. தமன்னா தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..” என்றார்.
நடிகை தமன்னா பாட்டியா பேசும்போது, “இந்த ‘பாப்லி பவுன்சர்’ கதையைப் படித்தவுடனே, அந்தக் கதாபாத்திரத்தின் மீது நான் காதல் வசப்பட்டுவிட்டேன். ஏனென்றால் நான் இதுவரையிலும் நடித்திருந்த கதாபாத்திரங்களைக் காட்டிலும் இது மிகவும் உற்சாகமான மற்றும் கேளிக்கையான கதாபாத்திரமாகும்.
பெண்களை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் வரையறுப்பதிலும் இயக்குநர் மதூர் சார் மிகச் சிறந்த திறமை படைத்தவர். இந்த ‘பப்ளி’யும் அம்மாதிரியான ஒரு வலிமை வாய்ந்த கதாபாத்திரம்.
இத்திரைப்படம் ஒரு பெண் பவுன்சரின் கதையை முதன்முதலாக ஆராயப் போகிறது, அந்தக் கதாபாத்திரத்தின் குரலாக நான் ஒலிக்கப் போகிறேன் என்பதை அறிந்து நான் அளவிட முடியாத உற்சாகத்தில் இருக்கிறேன். இந்த முழுமையான புதிய உலகத்தில் பிரவேசிப்பதற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை…” என்று உற்சாகத்துடன் கூறினார்.
இப்படம் இந்த ஆண்டு இறுதியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.