நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தில் தற்போது ஒரு வெளிநாட்டு நடிகையும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.
அவர் ஸ்வீடன் நடிகையான Elli AvrRam. இவர் ஏற்கெனவே தமிழில் வெளிவரவிருக்கும் ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் காஜல் அகர்வாலுடன் நடித்தவர். தற்போது தனுஷூக்கு ஜோடியாக ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கிறார்.
‘நானே வருவேன்’ படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே நடைபெற்றுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியோபோஸப்கா என்ற நடிகை நடிக்கவிருக்கிறார் என்று சென்ற வாரம்தான் அறிவித்திருந்தார்கள்.
அதற்குள்ளாக மற்றுமொரு தமிழ்ப் படத்தில் மற்றுமொரு வெளிநாட்டு நடிகை என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.