“இங்கே ரஜினி ஸார் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்..” – நடிகர் சூர்யாவின் ஒப்புதல்..!

“இங்கே ரஜினி ஸார் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்..” – நடிகர் சூர்யாவின் ஒப்புதல்..!

ஆகஸ்ட் 15-ல் நடக்கவிருந்த விஜய்யின் சூப்பர் ஸ்டார் பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களினால் தள்ளிப் போடப்பட்டதாக சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம், எதிர்பார்த்த பெரிய நடிகர்கள் யாரும் வர மறுத்துவிட்டார்கள் என்பதுதான்..!

சூப்பர் ஸ்டார் என்றால் அது இந்தியாவிலேயே ரஜினி ஒருவர்தான் என்பது பாலிவுட் ஹீரோக்களே ஒத்துக் கொண்ட ஒரு விஷயம்.. இதை முறியடிக்கும்விதமாக நடிகர் விஜய் தனக்குத்தானே கொடுத்துக் கொள்ள முன் வந்த அந்த விழாவை விமர்சித்து பல பிரபலங்களும் தங்களுக்குள் பேசிக் கொண்ட கதையெல்லாம் விஜய்யின் காதுகளுக்கு சென்ற பின்புதான் விழா கேன்சலானது.

இதற்கு முன் ‘அஞ்சான்’ பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பலரும் சூர்யாவை ‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ என்று சொல்லி வைக்க.. இதைக் கேட்ட பின்பும் அந்த மேடையில் சூர்யா இது குறித்து எதுவும் சொல்லாதது இந்தப்  பட்டத்தை விரும்பும் நடிகர்கள் பட்டியலில் சூர்யாவையும் சேர்த்தது.

நல்லவேளையாக இதற்கு பின்பு விஜய் இந்தப் பட்டத்தை ஏற்கும் அளவுக்கு சென்ற பின்புதான், இதன் வீரியமே மெகா நடிகர்களுக்கு புரிய வந்திருக்கிறது போலும்..

இப்போது இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி பேட்டியளித்திருக்கும் சூர்யா, ‘தனக்குத் தெரிந்த ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே’ என்று சொல்லி தப்பித்திருக்கிறார்.

“சூப்பர் ஸ்டார் என்பது ஒரே டைட்டில்தான்… ஆனால் அது என்னிடத்தில் இல்லை. நான் ரஜினி ஸார் படங்களைப் பார்த்து வளர்ந்தவன்… அவருடைய ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை வேறொருவர் எடுத்துச் செல்வதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது, ஆனால் கண்டிப்பாக நான் கிடையாது.

என்னுடைய படங்களை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படங்களுடன் ஒப்பிடவே கூடாது. அவர்கள் வேறு உயரத்தில் இருப்பவர்கள். அதேபோல, விஜய், அஜித் இருவருமே 50 படங்களுக்கு மேல் நடித்தவர்கள், நான் தற்போதுதான் 30 படங்களைத் தொட்டிருக்கிறேன்..” எ்ன்று சொல்லியிருக்கிறார்.

விஜய்யுடன் தனக்கு மோதல் எதுவும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

“அதேசமயம் எனக்கு விஜய்யுடனும் நல்ல நட்பு உண்டு. அவர் என்னுடைய ‘அகரம்’ அமைப்புக்கான விளம்பரப் படத்தில்கூட நடித்திருக்கிறார். என்னுடைய ‘அஞ்சான்’ படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு மெசேஜ்கூட அனுப்பியுள்ளார்…” என தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார் சூர்யா.

சூப்பர் ஸ்டார் ரேஸ்ல இருந்த ஒருத்தரும் விலகிப் போயிட்டாரு. இப்போ ரேஸ்ல இருக்குற ஒரேயொரு குதிரை விஜய் மட்டுமே..!

Our Score