திரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..!

திரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..!

தற்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடக்கப்பட்டு தமிழக அரசின் தனி அதிகாரியின் நிர்வாகத்தில் இருப்பதால் அந்தச் சங்கத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருக்கிறது.

வருடந்தோறும் செலுத்தியிருக்க வேண்டிய உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை கட்டாததால் அந்தக் காப்பீடு செல்லாததாகி உறுப்பினர்களுக்கு மருத்துவ செலவுக்குக்கூட உதவிகள் கிடைக்கும் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.

மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதால் புதிய நிர்வாகிகளும் பதவியேற்க முடியாத சூழல். இதனால் காப்பீட்டுத் தொகைக்கு பணத்தைக் கட்ட முடியாத நிர்வாகச் சிக்கலும் ஏற்பட்டிருந்தது.

இந்த நேரத்தில்தான் மூத்தத் தயாரிப்பாளரான கலைப்புலி S.தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர்.. தங்களது சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீட்டிற்கான தொகையைக் கட்டி அதனை தொடரச் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்து தருமாறு தனி அதிகாரிக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் OTT மூலமாக ‘சூரரை போற்று’ திரைப்படம் வெளியாகும் நிலையில் அதில் கிடைத்த பணத்தில் இருந்து நடிகர் சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.

அந்தத் தொகையை தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கே.ஆர்., K.முரளிதரன், K.J.R.ராஜேஷ் ஆகியோர் நடிகர் சூர்யாவின் சார்பில் பொறுப்பு நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.

மொத்தமுள்ள உறுப்பினர்களில் 980 பேருக்கு குரூப் மெடிக்கல் பாலிசி என்கிற முறையில் 2 கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் அறக்கட்டளையில் இருந்து 1 கோடியே 70 லட்சம் ரூபாயும், நடிகர் சூர்யா கொடுத்த 30 லட்சம் ரூபாயும் சேர்ந்து இந்தப் பாலிசிக்கான தொகை செலுத்தப்பட்டதாம்.

இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட நீதிபதி அவர்கள், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில், நடிகர் சூர்யா கொடுத்திரு்ககும் இந்தப் பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்களுக்கான காப்பீட்டு பிரீமியத் தொகை கட்டப்படும். இதனால் சங்க உறுப்பினர்கள் அனைவருமே பயனடைவார்கள். இதற்காக நடிகர் சூர்யாவுக்கு நன்றி…” என்றார்.

Our Score