full screen background image

“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..!

“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..!

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி நள்ளிரவில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வழக்கு விசாரணை தற்போது எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் 8-வது குற்றவாளியாக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான திலீப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப் 85 நாட்கள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின்போது பல அரசுத் தரப்பு சாட்சிகள் பல்டியத்துக் கொண்டே வருகிறார்கள்.

சென்ற மாதம் நடந்த விசாரணையில் மலையாள நடிகர்கள் சங்கத்தின் செயலாளரான நடிகர் எடவலா பாபுவும், நடிகை பிந்து பணிக்கரும் பிறழ் சாட்சிகளாக மாறி சாட்சியம் அளித்தார்கள்.

தற்போது 2 நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையில் மலையாள சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சித்திக்கும், நடிகை பாமாவும் பிறழ் சாட்சிகளாக மாறியிருக்கிறார்கள்.

போலீஸ் விசாரணையின்போது தாங்கள் தெரிவித்திருந்த விஷயங்களை இப்போது அப்படி தாங்கள் எதையும் சொல்லவில்லை என்று நீதிமன்ற குறுக்கு விசாரணையில் தெரிவித்திருக்கிறார்கள்.

இதைக் கேட்டு மலையாள சினிமாவுலகத்தில் சில நடிகைகள் பெரும் வருத்தமடைந்துள்ளனர். அவர்களில் நடிகைகள் ரேவதி, ரம்யா நம்பீசன், ரீமா கல்லீங்கால் ஆகியோர் தங்களது முகநூல் பக்கத்தில் இது குறித்து வருத்தம் தோய்ந்து எழுதியுள்ளனர்.

 

நடிகை ரேவதி இது குறித்து எழுதியுள்ள செய்தியில், “திரைப்படத் துறையில் எங்கள் சொந்த சகாக்களையே நம்ப முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. பல வருடமாக, பல திரைப்படங்களில் உடன் வேலை பார்த்திருந்தும் ஒரு பெண்ணுக்கு பிரச்சினை என்றவுடன் அவளை பின்னுக்குத் தள்ளுகிறார்கள். இணைந்து வேலை செய்த அனுபவங்கள் அவர்களது நினைவில் இல்லை போலும்.

2017-ம் ஆண்டின் நடிகை தாக்குதல் வழக்கில் எடவலா பாபு மற்றும் பிந்து பனிக்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் தங்களது வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். அவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாதுதான். இப்போது திரு. சித்திக் மற்றும் பாமாவின் முறை. திரு சித்திக் ஏன் இப்படி செய்தார் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் பாமா,,? ஒரு நண்பராகவும், நம்பிக்கையுடனும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இருந்த பாமாவும் இந்த சம்பவம் முடிந்தவுடன் போலீசாரிடம் தான் சொன்னதை இன்றைக்கு மறுத்திருக்கிறாள்.

அந்தச் சம்பவத்தில் தப்பிப் பிழைத்த சக தோழர் கடினமான காலங்களை கடந்து வாழ்ந்து வருகிறார். இது அவருக்கான நீதியைப் பெறுவதற்காக.. புகார் கொடுத்த பின்பு அவருடைய வாழ்க்கையிலும், குடும்பத்திலும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஏன் யாருமே நினைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அப்போது இருந்தவர்களுக்கும், இப்போது இருப்பவர்களுக்கும் நினைவூட்டுவதற்காக இதைச் சொல்கிறேன்…” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகை ரம்யா நம்பீசன் இதைப் பற்றிக் குறிப்பிடுகையில், “உண்மை காயப்படுத்தும்தான். ஆனால் துரோகம்.. நீங்கள் ஒருவருடன் இணைந்து போரிடும்போது சட்டென்று மாறினால் அது அவரை மிகவும் ஆழமாகக் காயப்படுத்தும். வழக்குகளில் சாட்சிகள் பல்டியடிப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பாதிக்கப்பட்டவரே உங்களுடையவராக இருக்கும்போது அவருக்கு நீங்கள் துரோகம் இழைத்தது ஏன்.. இந்த சண்டை உண்மையானது. ஆனால் இறுதியில் உண்மையே வெற்றி பெறும். பாதிக்கப்பட்டவர் என்ற முறையிலும் பெண் என்ற முறையிலும் இந்தப் போர் நிச்சயமாகத் தொடரும்..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல் நடிகை ரீமா கல்லிங்காலும் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

“வெட்கம்.

உயிர் பிழைத்தவரின் பக்கத்தில் நின்ற சகாக்கள் கடைசி நிமிடத்தில் அவர்களுக்கு விரோதமானது மிகவும் காயப்படுத்துகிறது.

இப்போது பிறழ் சாட்சியாக மாறிய பெண்களும் இந்தத் தொழில் துறையின் அதிகாரப் பசிக்கு பலியானவர்கள்தான் என்று நினைக்கும்போது, அது மிகவும் காயப்படுத்துகிறது.

4 பேர் தங்களது வாக்குமூலத்தை மாற்றிச் சொல்லிவிட்டார்கள் என்று படித்தேன்.  எடவலா பாபு, பிந்து பணிக்கர், சித்திக், பாமா. இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். இது உண்மை என்றால் இது ஒரு அவமானம்…” என்று சொல்லியிருக்கிறார் ரீமா.

இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 137 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குற்றச் சம்பவம் நடந்தவுடன் போலீஸார் பல்வேறு சினிமா பிரபலங்களிடம் திலீப்பிற்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்குமான மோதல், நட்பு பற்றி சாதாரணமாக, “தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறோம்…” என்ற ரீதியில் கேட்டிருக்கிறார்கள்.

அப்போது திலீப்பை கைது செய்ய மாட்டார்கள். அவருக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்கிற எண்ணத்திலேயே பலரும் அவர்களுக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லிவிட்டார்கள். இதைத் தொடர்ந்து “இது வழக்கமான நடைமுறைதான்…” என்று சொல்லி  அதனை வாக்குமூலமாகவும் பதிவு செய்து அவர்களிடத்தில் கையெழுத்தும் வாங்கிவிட்டது போலீஸ்.

பின்பு திலீப்பை கைது செய்த பின்புதான் பல திரை நட்சத்திரங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. இப்போது திலீப்பின் மிக நெருங்கிய குடும்ப நண்பர்களாக இருந்தவர்கள்கூட திலீப்பிற்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்குமான அந்த ஹோட்டல் மோதல் பற்றி விலாவாரியாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் வழக்கின் முக்கிய சாட்சிகள் வேறு.

நடிகைக்கும், திலீப்புக்கும் முன் விரோதம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் போலீஸாருக்கு உண்டு என்பதால் இவர்களைத்தான் முக்கியமாக நம்பியிருந்தார்கள்.

அந்த நம்பிக்கையில் ஓட்டை விழுவதை போலத்தான் அந்த ஹோட்டல் சண்டை நடந்தபோது சமாதானம் செய்து வைத்ததாக போலீஸாரின் வாக்குமூலத்தில் சொல்லியிருந்த நடிகர் எடவாலா பாபு நீதிமன்றத்தில் “நான் அப்படி சொல்லவே இல்லை…” என்று பல்டியடித்துவிட்டார்.

இதேபோல் நடிகைகள் பிந்து பணிக்கர், பாமா, நடிகர் சித்திக் ஆகியோரும் “நாங்கள் அப்படி சொல்லவில்லை…” என்று சொல்லிவிட்டார்கள்.

இந்தக் கடுப்பிலேயே “திலீப் சாட்சிகளை கலைக்கிறார். எனவே அவருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்து திரும்பவும் அவரை ஜெயிலில் வைக்க வேண்டும்…” என்று கோரி போலீஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவிருக்கிறது.

இதில் நடிகை பாமாவின் திருமணம் சென்ற மாதம் கொச்சியில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவின்போது இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணமான நடிகை மஞ்சு வாரியர் நேரில் வந்திருந்து தன் தோழி பாமாவை வாழ்த்தினார். இதேபோல் நடிகை திலீப்பும், காவ்யா மாதவனும்கூட வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score