நடிகர் சூர்யா நடிக்கும் 38-வது திரைப்படம் இன்று சென்னையில் பூஜை நிகழ்வுடன் துவங்கியது.
1997-ம் ஆண்டு ‘நேருக்கு நேர்’ படம் மூலமாக ஒரு நாயகனாக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யா கடந்த 22 ஆண்டுகளில் 37 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இப்போது தனது அடுத்தப் படத்தைத் துவக்கியிருக்கிறார் நடிகர் சூர்யா. இந்தப் படத்தை சூர்யாவின் 2-D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன், சமீபத்தில் ஆஸ்கர் விருதினை வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளரான குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். மேலும், நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்கு பெறுகிறார்கள்.
இசை – ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு – நிக்கேத் பொம்மி ரெட்டி, கலை இயக்கம் – ஜாக்கி, படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா, உடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, இணை தயாரிப்பு ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.
இந்தப் படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கெனவே ‘துரோகி’, ‘இறுதிச் சுற்று’ ஆகிய தமிழ் படங்களையும், ‘குரு’ என்ற தெலுங்கு படத்தையும் இயக்கியவர்.
இத்திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில நாட்களுக்கு முன்பாக ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற ஆஜ்மீர் தர்காவிற்கு நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் இயக்குநர் சுதா கொங்காரா மூவரும் சென்று வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது.