நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜனின் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘கோபாலா கோபாலா’.
இப்போதுவரையிலும் பாண்டியராஜனின் ஹிட் படங்களில் இதுவும் ஒரு படமாக இடம் பிடித்திருக்கிறது.
மிகச் சிறந்த நகைச்சுவை படமாக வெளிவந்த இந்தப் படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார்.
தமிழ்ச் சினிமாவின் உச்சபட்ச ஹீரோக்களுடன் நாயகியாக நடித்திருந்த குஷ்பூ இரண்டாம் நிலை நடிகராக இருந்த பாண்டியராஜனுடன் நடிக்க ஒத்துக் கொண்டதே அப்போது பெரிய ஆச்சரியமான விஷயமாக பேசப்பட்டது.
இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘யுத்தத்தில்’ என்ற பாடல் காட்சி கோவாவில் படமாக்கப்பட்டபோது நடந்த சுவையான சம்பவங்களை அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.
“இந்த ‘கோபாலா கோபாலா’ படத்தோட முதல் கட்ட ஷூட்டிங்கே பாடல் காட்சி படமாக்கியதுதான். அது கோவாவில் நடந்தது. இதற்காக படக் குழுவினருடன் கோவாவுக்கு விமானத்தில் சென்றோம்.

குஷ்பூ முதல் வகுப்பில் அமர்ந்திருந்தார். நானும், பாண்டியராஜனும் எகனாமி வகுப்பில் அமர்ந்திருந்தோம். அப்போது பாண்டியராஜன் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார்.
“இந்தப் பாட்டு சீன்ல கதைப்படி நான் குஷ்பூவைத் தூக்கிட்டு ஆடுற மாதிரி இருக்கே. அது முடியுமா..?” என்றார். “கொஞ்சம் சிரமம்தான் ஸார்..” என்றேன். “அதுக்கு நான் ஒரு ஐடியா வைச்சிருக்கேன். அந்தமமா என்னைத் தூக்கிட்டு ஆடினால் எப்படியிருக்கும்..?” என்றார் பாண்டியராஜன்.
“பிரமாதமா இருக்கும் ஸார்…” என்றேன். “ஆனால், அதுக்கு அவங்க ஒத்துக்கணுமே..?” என்று சந்தேகப்பட்டார் பாண்டியராஜன். அப்போது நான் “ஸார்.. நீங்க வெறும் ஹீரோ மட்டுமில்ல ஸார். பெரிய டைரக்டர் ஸார்..”ன்னு சொல்லி சமாதானப்படுத்தினேன்.
இதை குஷ்பூவிடம் சொன்னபோது ஒரு செகண்ட்கூட யோசிக்காமல் சிரித்துக் கொண்டே “நோ பிராப்ளம்” என்றார். சொன்னது போலவே அந்தப் பாடல் காட்சியை அங்கே படமாக்கி வந்தோம்..” என்றார் தயாரிப்பாளர் ஞானவேல்.