full screen background image

‘படையப்பா’ படத்தில் நடித்தவர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும் போனஸ் தொகை வழங்கிய ரஜினி..!

‘படையப்பா’ படத்தில் நடித்தவர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும் போனஸ் தொகை வழங்கிய ரஜினி..!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘படையப்பா’ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். அந்தப் படத்தின் வெற்றியினால் மனம் குளிர்ந்த ரஜினி அந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கி கெளரவப்படுத்தியிருக்கிறார்.

இந்தத் தகவலை அந்தப் ‘படையப்பா’ படத்தில் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றிய பி.எல்.தேனப்பன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

பி.எல்.தேனப்பன் இது பற்றிப் பேசும்போது, “படையப்பா’ படம் வெளியாகி நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஆகியிருக்கும்போது ரஜினி ஸார் என்னைத் தொடர்பு கொண்டார். “ஸார் நான் இப்போ வெளியூரில் இருக்கிறேன்…” என்று சொன்னேன்.

“படத்தில் பணியாற்றியவர்களின் முழு விபரம் மற்றும் அவர்களுக்குக் கொடுத்த சம்பளம் இந்த டீடெயில்ஸை எடுத்துக்கிட்டு நாளைக்கு வர முடியுமா..?” என்று கேட்டார். “அதெல்லாம் என் மைண்ட்ல மனப்பாடமா இருக்கு ஸார். நாளைக்கு வந்து பார்க்குறேன்…” என்று சொன்னேன்.

சொன்னதுபோலவே மறுநாள் அவரது வீட்டிற்குப் போனேன். வீட்டு மொட்டை மாடியில் தயாராக கையில் பேடுடன் காத்துக் கொண்டிருந்தார். அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் பெயர்களை எழுதி, அவர்கள் வாங்கிய சம்பளத்தையும் எழுதச் சொன்னார்.

எழுதிய பிறகு அதை அவர் வாங்கிப் படித்துவிட்டு.. “இந்தப் ‘படையப்பா’ படத்துல எனக்கு நல்ல லாபம் கிடைச்சிருக்கு. அதனால.. இவங்க எல்லாருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரிச்சுக் கொடுத்திருங்க” என்று சொல்லி பணத்தை என்னிடம் ஒப்படைத்தார்.

“அன்றைய இரவிலேயே அதை முழுவதும் பட்டுவாடா செய்ய வேண்டும்…” என்றும் சொன்னார். அதற்கு “துணைக்கு உங்களுடன் இருக்கும் ஒருவரை நான் அழைத்துப் போகிறேன்…” என்றேன். “அதெல்லாம் வேண்டாம். உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீங்களே கொண்டு போய் கொடுங்க…” என்றார்.

அதேபோல் அன்றைய இரவிலேயே சம்பந்தப்பட்ட அத்தனை நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் பலரிடமும் வீட்டுக் கதவைத் தட்டி ரஜினி கொடுத்தப் பணத்தை செட்டில் செய்தேன். இந்தப் படத்தில் நடித்ததற்காக ரம்யா கிருஷ்ணனுக்கு டபுள் மடங்கு சம்பளம் கொடுத்ததுதான் ஹைலைட்டான விஷயம்..” என்றார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்.

Our Score