மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் இயக்கும் ‘பரோஸ்’ என்ற படம் இன்று பூஜையுடன் துவங்கியது.
மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் மோகன்லால் தன்னுடைய 18-வது வயதில் 1980-ம் ஆண்டு வெளியான ‘மஞ்சிள் விரிந்த பூக்கள்’ படத்தில் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்றுவரையிலும் கிட்டத்தட்ட 346 படங்களில் நடித்திருக்கும் மோகன்லால், இப்போதுதான் முதன்முறையாக ஒரு படத்தை இயக்கப் போகிறார்.
அந்தப் படத்தின் பெயர் ‘BAROOZ’. மோகன்லாலின் மிக நெருங்கிய நண்பரான அந்தோணி பெரும்பாவூர் தனது ‘ஆசீர்வாத் சினிமாஸ்’ நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

மோகன்லால் படத்தை இயக்குவதுடன் படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். இவருடன் பிருத்விராஜும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பினை மேற்கொள்கிறார். லிதியன் நாதாஸ்வரன் இசையமைக்கிறார். சந்தோஷ் ராமன் கலை இயக்கம் செய்கிறார். இந்தப் படத்திற்கான கதையை ஜிஜோ புன்னோஸ் எழுதியிருக்கிறார்.
இத்திரைப்படம் மலபார் கடற்கரையில் முதன்முதலாக போர்ச்சுக்கல் வீரர்கள் வந்து இறங்கியதையும், போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் கேரளா கடற்கரையோர பகுதிகள் மீது நடத்திய படையெடுப்புகளையும் பற்றிப் பேசுகிறதாம்.

இந்தப் படம் 3-டி முப்பரிமாணத்தில் உருவாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை கொச்சியில் உள்ள நவோதயா ஸ்டூடியோவில் நடைபெற்றது.
இந்த விழாவில் மோகன்லாலின் மிக நெருங்கிய நண்பரும், இன்னொரு சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி கலந்து கொண்டார். மேலும் நடிகர்கள், திலீப், பிருத்விராஜ், இயக்குநர்கள் பாஸில், பிரியதர்ஷன், டி.கே.ராஜீவ்குமார் மற்றும் மலையாளத் திரையுலகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தான் இயக்கப் போகும் புதிய படம் பற்றி மக்களுக்கு வீடியோவில் பேசியிருக்கிறார் இயக்குநர் மோகன்லால்.

அந்தப் பேட்டியில், “என் வாழ்க்கை பயணித்த அற்புதமான பாதைகளில், நான் ஒரு நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனேன்.சினிமா என் வாழ்க்கையாகவும் வாழ்வாதாரமாகவும் மாறியது.இப்போது, நான் மற்றொரு அற்புதமான பயணத்தை மேற்கொள்கிறேன்.
இந்த மார்ச் 24 அன்று ‘பரோஸ்’ படப்பிடிப்பு துவங்குவதுடன், இதில் நான் இயக்குநராகவும் அறிமுகமாகிறேன்.என்னுடைய இந்த முயற்சியில் நவோதயாவும் என்னுடன் இருப்பது எனக்குக் கிடைத்த ஒரு ஆசீர்வாதம். இந்த பரோஸ் படத்தின் பயணத்தில் நீங்கள் அனைவரும் என்னை ஆதரிக்க வேண்டும்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் மோகன்லால்.