சூப்பர்ஸ்டார் ரஜினியை இமிடேட் செய்து ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ள ‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’ பட வழக்கில் வாலண்டியராக ஆஜராகி வழக்கினைத் திசை திருப்பி சினிமா பைனான்ஸ்சியர் முகுல்சந்த் போத்ரா தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், தனது பெயரை பயன்படுத்தி கஸ்தூரி ராஜா பணம் பெற்றதாக கூறப்படும் புகார் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதிய மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
‘மே ஹூன் ரஜினிகாந்த்’ (நான்தான் ரஜினிகாந்த்) என்ற பெயரில் இந்தி படத்தை மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தை தரம் தாழ்த்தி சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு கடந்த 11-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சினிமா பைனான்ஸ்சியர் முகுல்சந்த் போத்ரா, தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.
அதில், வடமாநிலத்தில் வெளியாகும் திரைப்படத்தினால், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அவரது சம்பந்தி கஸ்தூரி ராஜா, ரஜினிகாந்த் பெயரைபயன்படுத்தி என்னிடம் கடன் வாங்கி அதை திருப்பித் தராமல் உள்ளார். இது குறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகியும், ரஜினிகாந்த் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக கருதாமல் உள்ளார். எனவே, என்னையும் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஜினிகாந்த் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘முகுல்சந்த் போத்ராவுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கும் நடந்த பணப் பரிவர்த்தனை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. கடன் தொடர்பான நடவடிக்கையில் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. என் பெயரை பயன்படுத்தி கடன் வாங்க யாருக்கும் நான் அனுமதியோ அல்லது உத்தரவாதமோ வழங்கவில்லை. ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தை தயாரித்துள்ள மும்பை நிறுவனத்துக்கு எதிராக நான் தொடர்ந்துள்ள வழக்கிற்கும், போத்ராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
ரஜினிகாந்தின் இந்த மனுவுக்கு பதிலளிக்க போத்ரா சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.