சூப்பர் டீலக்ஸ் – சினிமா விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் – சினிமா விமர்சனம்

TYLER DURDEN And KINO FIST ஆகிய நிறுவனங்களின் சார்பில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவும், எஸ்.டி.எழில்மதியும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் இது.

படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, மிஷ்கின், காயத்ரி சங்கர், அஷ்வந்த் அசோக்குமார், பக்ஸ், கவின் ஜெயபாபு, விஜய் ராம், அப்துல் ஜாபர், நவீன், ஜெயந்தி, நோபெல் கே.ஜேம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – நீரவ் ஷா, பி.எஸ்.வினோத், இசை – யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – சத்யராஜ் நடராஜன், கலை இயக்கம் – விஜய் ஆதிநாதன், உடைகள் – எஸ்.டி.எழில்மதி, இணை தயாரிப்பு – சத்யராஜ் நடராஜன், ஸ்வாதி ரகுராமன், புரொடெக்சன் மேனேஜர் – ஏ.அருள் பிரகாஷ், எழுத்து – தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், இயக்கம் – தியாகராஜன் குமாரராஜா.

2011-ம் ஆண்டு ‘ஆரண்ய காண்டம்’ என்ற புதிய பாணியிலான ‘கில்மா’ டைப் படத்தைக் கொடுத்து புதிய சினிமாவை தேடியலையும் சினிமா விமர்சகர்களை உச்சிக் குளிர வைத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, 8 ஆண்டுகள் கழித்து அதே விமர்சகர்களை முந்தையதைவிடவும் கொஞ்சம் அதிகப்படியான ‘கில்மா’க்களை கொடுத்து மண்டை காயவும் வைத்திருக்கிறார்.

இப்போதும் இவருக்குக் கை கொடுத்திருப்பது செக்ஸ்தான். முந்தைய படத்தில் ‘செக்ஸ்’, ‘துரோகம்’ என்று இருந்த கதை இந்தப் படத்தில் ‘செக்ஸ்’, ‘செக்ஸ்’, ‘செக்ஸ்’ என்று அலைந்து கடைசியாக ‘வாழ்க்கையே செக்ஸில்தான் இருக்கிறது’ என்ற அரிய கண்டுபிடிப்பாக முடித்திருக்கிறார்.

படம் இரண்டு நாட்களில் நடக்கிறது. ஆனால் இதனை ஒரேயொரு வசனத்தின் மூலமாக சட்டென்று விளங்கிக் கொள்ள முடியாதவகையில் படத்தின் பிற்பாதியில் இடம் பெறும் ஒரு ஷாட்டில் சொல்லியிருப்பதால், அவருடைய ரசிகர்களே கொஞ்சம் குழம்பிப் போய்விட்டார்கள்.

வேம்பு என்னும் சமந்தா திருமணமானவர். இவருடைய கணவர் பகத் பாசில். நாடக நடிகர். கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்து வருபவர். ஒரு நாள் சமந்தாவின் கல்லூரி கால காதலன் திடீரென்று சமந்தாரவுக்கு போன் செய்கிறான். தான் ஒரு பணப் பிரச்சினையில் சிக்கி பெரும் மனக்குழப்பத்தில் இருப்பதாகச் சொல்கிறான். அவனை வீட்டுக்கு அழைக்கிறார் சமந்தா.

வந்தவனுடன் உடலுறவு கொள்கிறார் சமந்தா. ஆனால் திடீரென்று அந்தச் சமயத்திலேயே, அந்தக் கட்டிலிலேயே அந்தக் கள்ளக் காதலன் உயிரைவிடுகிறான். கணவனும் வீடு திரும்ப அவனுக்கும் இந்த விஷயம் தெரிகிறது.

மனைவியின் மானங்கெட்டத்தனத்தினால் தலையில் அடித்துக் கொள்ளும் கணவன், மனைவி மாட்டினால் தனக்கும் பெரும் அவமானமாச்சே என்றெண்ணி இறந்தவனின் உடலை அப்புறப்படுத்த நினைக்கிறான். கணவனும், மனைவியும் அவனது உடலை வீட்டில் இருந்து தூக்கிச் செல்கிறார்கள்.

ஏதாவது ஒரு ரயில்வே டிராக்கில் போட்டுவிட்டு தப்பித்துப் போகலாம் என்று இவர்கள் நினைக்க லோக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான பக்ஸ் என்னும் பெர்லின் இவர்களை பின் தொடர்ந்து வந்து அவர்களைப் பிடிக்கிறார்.

அவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பப் போவதாக மிரட்டுகிறார். தம்பதிகள் கதறி அழுக.. அப்படிச் செய்யாமல் இருக்க சமந்தாவை தன்னுடன் படுக்கைக்கு அனுப்பி வைக்கும்படி அவளது கணவனிடமே கேட்கிறார் பக்ஸ்.

வேறு வழியில்லாமல் பகத் பாசில் இதற்கு ஒத்துக் கொள்ள.. இந்த டீலிங் முடியும் தருவாயில் எங்கிருந்தோ வரும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி பக்ஸின் தலையில் விழுக.. இந்த எதிர்பாராத தாக்குதலில் அவர் இறந்து போகிறார்.

– இவர்களின் கதைதான் முதல் காட்சியும், முடிவு காட்சியும்..!

காஜி, முட்ட பப்ஸ், துயவன், சூர்யா.. இந்த நால்வரும் பள்ளிக்கூட மாணவர்கள். ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு முட்ட பப்ஸின் வீட்டில் பிட்டு படம் பார்க்க அமர்கிறார்கள். அந்தப் படத்தின் துவக்கக் காட்சியிலேயே சூர்யாவின் அம்மாவான ரம்யா கிருஷ்ணன் ஒரு நடிகையாக அறிமுகமாகிறார்.

அதைப் பார்த்தவுடன் ஆவேசப்படும் சூர்யா டிவியை உடைத்துவிட்டு வீட்டில் இருந்து அம்மாவை கொலை செய்யும் வெறியோடு ஓடுகிறான். கையில் ஸ்குரூ டிரைவரோடு வீட்டருகில் சென்றவன், மாடிப்படியிலேயே எதிர்பாராதாவிதமாக விழுக, ஸ்குரூ டிரைவர் அவனது வயிற்றில் குத்தி காயம் ஏற்படுகிறது.

ரம்யா கிருஷ்ணன் அவனை ஆ்ட்டோவில் ஏற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார். முதலுதவி சிகிச்சை மட்டுமே அளித்த ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர், பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்படி சொல்கிறார்.

ரம்யா கிருஷ்ணனின் கணவர் தனசேகர் என்னும் அற்புதம் என்னும் மிஷ்கின். சுனாமி தாக்குதலின்போது ஒரு கல்லைப் பற்றியபடியே இருந்ததால் உயிர் தப்பியவர். அந்தக் கல்லே இயேசு கிறிஸ்துதான் என்ற நம்பிக்கையில் இப்போது மதம் மாறி ‘அற்புதம்’ என்ற பெயருடன் முழு நேர இயேசுவின் உபாசகராக இருக்கிறார்.

‘எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைக்குப் போக வேண்டாம். கிறிஸ்துவிடம் வந்தாலே போதும்’ என்கிறார் மிஷ்கின். தன் மகன் காயம்பட்டுவிட்டான் என்பதையறிந்து ஓடி வரும் மிஷ்கின், ‘அவனை இயேசுவிடம் கொண்டு சென்று குணப்படுத்துகிறேன்’ என்று சொல்லி அவனைத் தூக்கிக் கொண்டு ஜெப கூடத்திற்குச் செல்கிறார்.

பின்னாலேயே ஓடி வரும் ரம்யா கிருஷ்ணன் லோக்கல் கவுன்சிலரின் உதவியோடு தன் மகனை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார். அங்கேயும் பணப் பிரச்சினை எழுகிறது. ரம்யா கிருஷ்ணன் மருத்துவமனையிலேயே பிச்சை கேட்டும் யாரும் உதவ முடியாத நிலை.

மிஷ்கினிடம் பணம் கேட்டு போன் மேல் போன் வர.. அவரோ இயேசுவிடம் வேண்டுகிறார். இயேசு ஏன் தன்னைக் கைவிட்டுவிட்டாரா என்று கேள்வியெழுப்பி கதறுகிறார். கோபத்தில் இயேசுவின் சிலையை உடைக்க அதிலிருந்து வைரங்கள் சிதறுகின்றன.

கிடைத்த பணத்தை வைத்து ஆபரேஷனை நடத்தி பையனைக் காப்பாற்றுகிறார் ரம்யா கிருஷ்ணன். தான் ஏன் அப்படியொரு படத்தில் நடித்தேன் என்பதற்கான விளக்கத்தை ரம்யா கிருஷ்ணன் தன் பையனிடம் சொல்ல, பையனும் அதை ஏற்றுக் கொள்கிறான்.

– இப்படி இரண்டாவது கதையும் சுபமாக முடிகிறது.

டிவி உடைந்து போனதால் சாயந்தரம் அப்பா வருவதற்குள் புதிய டிவியை வாங்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் காஜியும், அவனது நண்பர்களும் அலைகிறார்கள். கடன் கேட்கிறார்கள். கிடைக்கவில்லை. ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதித்து டிவியை வாங்கலாம் என்று நினைக்கிறார்கள்.

லோக்கல் ரவுடி ஒருவரிடம் வந்து சேர்கிறார்கள். அந்த ரவுடி சொன்னதுபோல ஒரு கொலை அஸைண்ட்மெண்ட்டுக்கு போனவர்கள் கடைசி நிமிடத்தில் பல்டியடித்து அணி மாறுகிறார்கள். ஆனால் இதுவே அந்த ரவுடியின் செட்டப் என்பது தெரியாமல் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த ரவுடி நண்பர்கள் மூவரையும் செருப்பால் அடிக்கிறான். இந்தக் களேபரத்தில் ரவுடி வீட்டு டிவியும் உடைகிறது. இதனால் கூடுதலாக இன்றைக்கு ஒரே நாளில் 2 டிவிக்களை வாங்க வேண்டிய கட்டாயம் அந்தப் பையன்களுக்கு ஏற்படுகிறது.

ஒரு சேட்டு வீட்டில் திருடிய பணத்தை வைத்து டிவியை வாங்குகிறார்கள். அந்த டிவியை வீட்டில் வைத்துவிட்டு வீட்டில் இருந்த உடைந்த டிவியை வெளியில் தூக்கியெறிகிறார்கள். இந்த டிவிதான் சப்-இன்ஸ்பெக்டர் பக்ஸின் தலையில் விழுந்து அவரது உயிரைக் குடிக்கிறது. “நாளைக்கு ஒரு டிவியை வாங்கணுமே.. அதை நாளைக்குப் பார்க்கலாம்.. இன்றைக்கு இந்தக் கொண்டாட்டத்தைக் கொண்டாட பிட்டு படத்துக்குப் போவோம்…” என்று ஒரு பலான தியேட்டருக்கு வருகிறார்கள்.

அங்கே அவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பது பற்றிய தத்துவம் சொல்லப்படுப்பகிறது. “செக்ஸ்தான் வாழ்க்கை.. வாழ்க்கைதான் செக்ஸ்.. எல்லாமே செக்ஸிதான் துவங்குகிறது.. அதில்தான் முடிகிறது…” என்று உலகத்தின் உன்னதமான தத்துவத்தைப் பொழிகிறார் தமிழகத்தின் ஒரே அறிவுஜீவியான அப்துல் ஹமீது என்னும் மனுஷ்யபுத்திரன். பையன்களும் இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்கிறார்கள்.

– இப்படி மூன்றாவது கதையும் சுபமாக முடிகிறது.

நான்காவது கதை மாணிக்கம். கல்யாணமான ஒரே வருடத்தில் வீட்டைவிட்டு மும்பைக்கு ஓடிப் போனவர் மாணிக்கம். இப்போது அவருக்கு 2-ம் வகுப்பு படிக்கும் பையன் இருக்கிறான். ஓடிப் போன மாணிக்கம் அன்றைக்கு திரும்பவும் ஊருக்கு வருவதாகக் கடிதம் போட்டிருக்கிறார்.

அவரது வருகைக்காக குடும்பத்தினர் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். மாணிக்கம், மாணிக்கமாக திரும்பி வராமல் ‘ஷில்பா’ என்னும் திருநங்கையாக திரும்பி வருகிறார். உற்றார்களும், உறவுகளும் அதிர்ச்சியாகிறார்கள். கட்டிய மனைவி கண்ணீரைச் சிந்துகிறாள்.

அப்பாவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த மகன் ராசுக்குட்டியோ வந்தவரை ‘அப்பா’ என்று அழைப்பதா… அல்லது ‘அம்மா’ என்று கூப்பிடுவதா.. என்பது தெரியாத குழப்பத்தில் இருக்கிறான்.

ஆனாலும் ஓடிப் போன தன் அப்பா இவர்தான் என்பதை தனது பள்ளித் தோழர்களிடத்தில் சொல்ல நினைத்து ஷில்பாவை தனது பள்ளிக்கு அழைத்துச் செல்கிறான். பள்ளியில் ஷில்பாவுக்கு குறைந்தபட்ச மரியாதைகூட இல்லாமல் போனதால் வருத்தப்படுகிறார்கள் அப்பாவும், பையனும். 

அந்த நேரத்தில்  எதிர்பாராத ஒரு அசந்தர்ப்பத்தில் பையனிடம் ஏதோ கசமுசா செய்வதாக நினைத்து ஷில்பாவையும், பையனையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வருகிறார் ஏட்டு. போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பக்ஸ் ஷில்பாவை வாய் வழி புணர்ச்சிக்கு ஆட்படுத்துகிறார்.

இந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு ஷில்பா வீடு திரும்பும்போது பையன் காணாமல் போகிறான். மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் வருகிறார் ஷில்பா. இங்கே மீண்டும் பக்ஸ் ஷில்பாவை புணர்ச்சிக்கு கூப்பிட, பக்ஸை அடித்து உதைத்துவிட்டு வீட்டுக்கு வருகிறார் ஷில்பா. அங்கே அவரது பையன் இருக்கிறான்.

தனது பையனிடம் தனது நிலையை எடுத்துச் சொல்கிறார். “நான்தான் உன் அப்பா. இனிமேல் நான் எங்கேயும் போக மாட்டேன். இங்கேயே உன்னுடனேயே இருக்கப் போகிறேன்..” என்கிறார் ஷில்பா. பையனும் சந்தோஷப்படுகிறான்.

– இப்படி இந்த நான்காவது கதையும் சுபமாகவே முடிகிறது.

இவ்வளவுதான் படத்தின் கதை, திரைக்கதை. இதில் ஷில்பாவின் வருகையும், போலீஸ் ஸ்டேஷனில் அவருக்கு நடக்கும் கொடுமையும், பையன் காணாமல் போவதும்தான் முதல் நாள் நடக்கும் காட்சிகள். மற்றவைகளெல்லாம் இரண்டாம் நாள் நடப்பதுதான்.

ஆனால் படத்தின் துவக்கத்திலேயே ‘ஆரண்ய காண்டம்’ போல் தனது மைனர் குஞ்சு ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குநர், சமந்தா-பகத் பாசில் கதையை துவக்கத்தில் கொடுத்துவிட்டதால், படம் ஒரே நாளில் நடப்பது போன்று காண்பிக்கப்பட்டு குழப்பத்தைக் கொடுத்துவிட்டது.

இந்தக் குழப்பத்தை மிஷ்கின்தான் பிற்பாடு தெளிவுபடுத்துகிறார். பையனைத் தேடியலையும் ஷில்பா சப்-வே-யில் மிஷ்கினை சந்தித்து தனது பையன் காணாமல் போனதைப் பற்றியும், தனக்கு பாவ மன்னிப்பு தரும்படி கேட்கும்போது, “எல்லாமே கல்லுதான் ஸார்…” என்று கடவுளர்களைப் பற்றிப் பேசியதை மிஷ்கின் நினைவு கூர்கிறார். இதை வைத்துதான் படத்தின் கதை இரண்டு நாட்களில் நடக்கிறது என்று நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

இயக்குநரின் முதல் படமான ஆரண்ய காண்டத்துடன் இதனை ஒப்பிட்டால் முந்தைய படத்தில் ‘நமக்கு எது தேவையோ அதுவே தர்மம்’ என்பதுதான் அதன் கதைக் கரு. இந்தப் படமோ ‘வாழ்க்கையின் ரகசியமே செக்ஸ்தான்..’ என்கிறது.

முதலில் படத்தின் பிளஸ்ஸான பாயிண்ட்டுகளைப் பார்த்துவிடுவோம்.

சிறப்பான நடிப்பு. சிறப்பான இயக்கம்.. இதில் குறையே இல்லை. சமந்தாவும், பகத் பாசில் கதையில் இவர்களுடன் பகவதி பெருமாளும் கடைசியில் சேர்ந்து கொள்ள மூவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

தனது கல்லூரி காலக் காதலனுடன் உறவு வைத்துக் கொண்டதை மிக மெல்லிய குரலில், “அவன் ரொம்ப டிப்ரஸ்ஸா இருந்தான். வீட்டுக்கு கூப்பிட்டேன். வந்தான். எப்படிண்ணே தெரியலை.. கட்டில்ல படுத்துட்டோம்.. அவன் திடீர்ன்னு செத்துட்டான்..” என்று சமந்தா மெல்லிய குரலில், சங்கடமான குணத்துடன் சொல்லும்போது அவரது நடிப்பினால் பார்வையாளர்களுக்கு பரிதாப உணர்வுதான் வருகிறது.

குற்றவுணர்ச்சியை கொஞ்சம், கொஞ்சமாக தொலைத்துவிட்டு இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு கணவருடன் தன்னுடைய கடந்த கால காதல் கதையையும் சொல்லியபடியே நேரத்தைக் கடத்துவதிலும், பேசுவதிலும் சமந்தாவின் இயல்பான நடிப்பு நமக்கே பிடித்துப் போகிறது.

சமந்தாவின் ஒவ்வொரு பிரேமிலும் அவரைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவருக்கான நடிப்பு ஸ்கோப்பை குளோஸப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸில் பக்ஸிடம் “வேண்டாம் ஸார்.. வேண்டாம் ஸார்…” என்று அவர் கதறுவதைப் பார்த்து ரசிகர்களுக்கே கதறல் எழுகிறது. அந்த அளவுக்கு நடிப்பாற்றை வெளிப்படுத்தியிருக்கிறார் சமந்தா.

பகத் பாசில் மலையாளத்தில் ஒரு நடிகர் திலகமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் அபாரமாக இருக்கிறது அவரது நடிப்பு. தனது இயலாமை.. மனைவியின் துரோகம்.. தன் கட்டிலில் தன் மனைவியுடன் படுத்திருந்தவனை பொணமாக வைத்துக் கொண்டு அந்த ஜீப்பில் அவர் சமந்தாவுடம் பேசும்போது படும் அவஸ்தையெல்லாம் நிறைய சுவாரஸ்யம் நிறைந்தது. 

“தண்ணியடிச்சிட்டு பிரெண்ட்ஸ்ககிட்ட என்னைப் பத்தித் திட்டுவீல்ல.. அது மாதிரி என்னைத் திட்டிரு..” என்று சமந்தா கேட்டதற்கிணங்க.. அதேபோல் அவர் காட்டும் நடிப்பும், பேசும் வசனங்களும் அதிரி புதுரி.

இதுவரையிலும் தமிழகத்தில் எல்லா ஊர் ஆண்களும் கேட்டிருக்கும், “லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனை எல்லா பொண்ணுகளும் போட்டுட்டு கொலை செஞ்சு புதைச்சிட்டாங்கன்னு சொல்வாங்களே மச்சி.. அது உண்மைதான் மச்சி…” என்று பகத் பாசில் பாதி அழுகையுடன் சொல்லும்போது தியேட்டரில் கை தட்டாத ஆண்களே இருக்க முடியாது..!

இவர்களது கதையின் கிளைமாக்ஸில் பக்ஸிடம் தன்னைத் தொட வேண்டாம் என்று சமந்தா அழுவதைப் பார்த்துவிட்டு “ஸார்.. ஸார்.. வேண்டாம் ஸார்..” என்று கெஞ்சத் துவங்கி.. அந்த “ஸார்” என்ற உச்சரிப்பில்கூட கொஞ்சம் பரிதாபம், கொஞ்சம் கோபம், கொஞ்சம் ஆத்திரம்.. கடைசியாக பக்ஸ் சரிந்து விழுந்தவுடன், நிறைய சந்தோஷத்துடன் “ஸார்” என்று அழைக்கும்போது அப்பாடா என்று நம்மையும் பெருமூச்சுவிட வைக்கிறார் பகத் பாசில்.

பகத் பாசில் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்து இங்கே நடிக்கக்கூட தெரியாத நடிகர்களையெல்லாம் ஓரங்கட்டினால் நன்றாக இருக்கும்.

‘ஷில்பா’ என்னும் மாணிக்கமாக விஜய் சேதுபதி. இந்தக் கேரக்டர் இவருக்கு புதியது. இவரது கேரக்டர் ஸ்கெட்ச் தவறானது என்றாலும் நடிப்பில் குறை வைக்கவில்லை. அவரது ரசிகர்களுக்கு நிச்சயமாக அவரது இந்தக் கேரக்டர் பிடிக்காததுதான் என்றாலும் இயக்கம் சிறப்பாக இருப்பதினால் நன்றாகவே நடித்திருக்கிறார். நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

அவரது கட்டுடல் மட்டுமே அரவாணிக்கு பொருத்தமானதாக இருந்தாலும் அவர்களுக்கே உரித்தான நளினமும், வெட்கமும் அவரிடத்தில் காணப்படவில்லை என்பதால் அவரது தோற்றத்தை மட்டும் ரசிக்க முடியவில்லை.

இறுதியில் தனது மகனிடம் தான் இனிமேல் இங்கேயே ஒரு அப்பாவாக அவன் கூடவே இருக்கப் போவதாகச் சொல்லும் காட்சியில் மட்டுமே அவரது நடிப்பு தெரிகிறது. மற்றவையெல்லாம் ஓவர் ஆக்ட்டிங் வகையிலேயேதான் அமைந்துவிட்டது.

பக்ஸிடம் விஜய் சேதுபதி படும் சித்ரவதையை அத்தனை அங்குலம், அங்குலமாக இயக்குநர் விஸ்தாரப்படுத்தி எடுத்திருப்பதால் நமக்குத்தான் அருவருப்பாக இருக்கிறது. இதில் அரவாணிகள் மீதான பரிதாபவுணர்ச்சி வருவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

பக்ஸ் என்னும் பகவதி பெருமாளின் நடிப்பும் ஓவர் ஆக்ட்டிங்குதான். கொஞ்சம் அருவருப்பையும் சேர்த்தே கொடுக்கிறது இவரது கேரக்டர் ஸ்கெட்ச். ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இப்படி கதையைத் திருப்பும்போது அவரைச் சமாளிக்க இவர்களால் வேறு எதையும் யோசிக்கவே முடியாதா என்ன..? பகவதி பெருமாள் சம்பந்தப்பட்ட  காட்சிகள்தான் படம் பார்க்க வந்தவர்களை மிகவும் டிஸ்டர்ப் செய்திருக்கும் திரைக்கதை.

விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரியின் சின்னச் சின்ன ஆக்சன்களில் நடிப்பு தெறிக்கிறது. தன் முன்பாகவே சேலை கட்டும் கணவனை வெறித்த பார்வையுடன் பார்க்கும் அவரது முகம் பரிதாபத்திலும் பரிதாபம். ஆனால் இதனை ரசிகர்களுக்குக் கடத்த இயக்குநர் தவறிவிட்டார். கடைசியில் விஜய் சேதுபதியின் கேரக்டர் ஸ்கெட்ச்சே தப்பாகிவிட்டது.

அந்த நான்கு பசங்களின் கோஷ்டியில் காஜிதான் மெயினான நடிகனாக இருக்கிறான். அவனை வைத்து சுற்றிலும் நடக்கும் கதையில் சுவாரஸ்யம் அதிகம். தன் அம்மாவை வீடியோவில் பார்த்தவுடன் கத்தித் தீர்க்கும் சூர்யாவின் வெறித்தனம்தான் இந்த போர்ஷனை அடுத்து என்ன.. அடுத்து என்ன என்ற ஆவலைத் தோற்றுவித்தது.

இவருடைய தந்தையான மிஷ்கின் சராமரியாக கடவுள் ஸ்தோத்திரம் சொல்வதும், கடவுள் பற்றிய வியாக்கியானங்களை அடுக்கிக் கொண்டே செல்வதும் முதலில் புதிதாக இருந்தாலும் போகப் போக எரிச்சலாகிவிட்டது. “நான் சாட்சி..”, ”நானும் சாட்சி” என்பதெல்லாம் அந்தக் காட்சிக்கு மெல்லிய கவன ஈர்ப்பை கொடுத்தாலும், இந்தத் திரைக்கதை கதைக்குத் தேவையே இல்லாததாக இருக்கிறது.

மிஷ்கினின் நடிப்பு நிச்சயமாக ஓவர் ஆக்ட்டிங்குதான். தேவையில்லாத அலட்டல் நடிப்பு. உயிரைக் காப்பாற்றியதற்கு மதம் மாறலாம். ஆனால் மத உபாசகராக மாறி எல்லாவற்றையும் கடவுளே பார்த்துக் கொள்வார் என்று பேசுவதெல்லாம் பைத்தியக்காரத்தின் முதல்படி. இதிலும் மிஷ்கினை அப்படித்தான் படைத்திருக்கிறார் இயக்குநர்.

ரம்யா கிருஷ்ணனின் நடிப்பும் இந்தக் கதையில் முக்கியமானது. மருத்துவமனையில் அவர் படும்பாடுதான் ஹைலைட். மருத்துவர் எத்தனையோ வார்த்தைகளைக் கொட்டி சமாளிப்பதும், அதற்கு ஈடாக ரம்யாவும் புலம்புவதும், கடைசியாக தான் எப்போது கூப்பிட்டாலும் வருவதற்குக்கூட தயாராக இருப்பதாக ரம்யா சொல்வதெல்லாம் உச்சக்கட்ட டிராஜிடி.

ஆனால் இந்தக் காட்சியில் லாஜிக்கே இல்லையே.. முதலுதவி செய்து அனுப்பி வைத்தது தெருவோர மருத்துவர். வந்தது தனியார் மருத்துவமனை. பணம் செலுத்தாமல் யாராவது ஆபரேஷன் செய்வார்களா என்ன..? ‘அதுவரைக்கும் பையன் உயிரோட இருக்கணுமே?’ என்ற ரம்யாவின் கேள்விக்கு உயிர் காக்கும் கருவிகளின் துணையோடு அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

படத்தின் பல இடங்களில் பேசப்படும் வசனங்களே சிச்சுவேஷனுக்கேற்றாற்போல் இயல்பான நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கின்றன. “வாய்ப்பே இல்லை” என்று சின்னப் பையன் சொல்லும் காட்சியும், அந்த ரவுடிக் கும்பலிடம் பிட்டு படம் பற்றி காஜி பேசும் வசனமும், “நியாயம் வேற நடைமுறை வேற” என்று பள்ளிக்கூட வாசலில் இருக்கும் பாட்டி சொல்லும் வசனமும் அந்தக் காட்சிக்கு மரியாதை அளிக்கிறது.

சேட்டு வீட்டில் பணத்தை எடு்க்காமல் வந்தவனிடம் காஜி அதை எடுத்திருக்கலாம்ல என்று கேட்க, “நமக்கு எதுக்குடா அவ்வளவு பணம்?” என்று அவன் அப்பாவியாய் திருப்பிக் கேட்குமிடத்தில் அவர்களை அந்த நொடிக்கு பிடிக்கத்தான் செய்கிறது.

லிப்ட்டில் கீழே இறங்கிக் கொண்டிருக்கும்போது மின் தடையினால் லிப்ட் நின்றுவிட.. கோபத்தில் பகத் பொங்கும்போது, “கரண்ட் வரும். பேசாமல் இரு..” என்று சமந்தா சொல்ல.. “ஆமா.. இவ பெரிய பத்தினி.. இவ சொன்னா கரெண்ட் வந்துரும் பாரு..” என்று பகத் சொல்லி முடித்ததுமே மின்சாரம் வரும் காட்சியில் நகைச்சுவை தெளிக்கிறது.

இதேபோல் போலீஸ் ஸ்டேஷனில் பக்ஸ் ஷில்பாவிடம் அடிவாங்கிவிட்டு, சாபமும் வாங்கிய பின்பு, “என் பொண்டாட்டியே பெரிய பத்தினி.. அவ சாபமே பலிக்காது.. இவ சாபம் எங்க பலிக்கப் போகுது.. யோவ் ஒரு டீ சொல்லுய்யா..” என்று சர்வ அலட்சியமாக பக்ஸ் பேசும்போதும் இயக்குதல் திறமை பளிச்சிடுகிறது.

“அப்பான்னு சொல்றாங்க.. நீ ஏன் இப்படி இருக்க..?” என்று கேட்கும் மகனிடம் “செருப்ப மாத்தி போடுற மாதிரி, கடவுள் என் உடம்ப மாத்தி போட்டுட்டார்..” என்று சொல்வது டச்சிங்கானது என்றாலும், அந்தச் சின்னப் பையனுக்கு இந்த வசனம் புரியுமா இயக்குநரே..?

இதுபோக “நான் சாட்சி..” “நானும் சாட்சி..” “நானே சாட்சி” என்று விதம்தவிதமாக கிறித்துவத்தில் ஒரு பிரிவினரான பெந்தகோஸ்தே சபையினரின் மூடத்தனத்தை அள்ளித் தெளிக்கும் காட்சி புன்னகைக்க வைக்கிறது.

‘ராமசாமி’ என்னும் அந்த மனிதர் ‘அற்புதம்’ என்னும் மிஷ்கினிடம் பேசும் பல வசனங்கள் காட்சிக்குத் தேவையில்லாதவை என்றாலும் அந்தக் கணீர் குரலில் இருக்கும் உயிர்ப்பும், நடிப்பும் கவனிக்கத்தக்கவையாகத்தான் இருக்கின்றன. இதில் ‘இதோ வருகிறார் ஆண்டவர்..’, ‘வர இருக்கிறார் ஆண்டவர்..’ என்று குறி சொல்பவருக்கு, ‘ராமசாமி’ என்று பெயர் வைத்திருப்பதையும் குறியீடாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இதேபோல் அந்தக் காட்சியில் ஷில்பாவை “வெளியே போ…” என்று தலைமை ஆசிரியர் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருப்பதெல்லாம், செமத்தியான இயக்கம் என்று சொல்ல வைக்கிறது.

படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் படத்தின் கலை இயக்குநரின் பங்களிப்பு. அட்டகாசமான லொகேஷன்கள்.. குடியிருப்புகள், கூடங்கள் என்று காட்சிக்குக் காட்சி நிகழ்விடங்களை அழகுபடுத்தியிருக்கிறார் கலை இயக்குநர்.

ஷில்பாவின் வீடுதான் அசத்தல். அந்த செட்டியார் வீட்டு ஸ்டைலில் கவர்கிறது. இதேபோல் சேட்டு வீட்டின் உள்புற டிஸைனும் அழகு. மருத்துவமனையை இதுவரையிலும் யாரும் காட்டாத ஒரு கோணத்தில் காட்டியிருக்கிறார்கள். காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

மிஷ்கின் அதகளம் செய்யும் பிரார்த்தனைக் கூடத்தின் தோற்றம்கூட புத்தம் புதியதுதான். பள்ளிக்கூடமும் நமக்குப் புதியது. எந்தக் காட்சியை எங்கேயிருந்து கேமிரா மூலமாக பார்க்க வைத்தால் புதிதாக தோன்றுமே அதே கோணத்திலேயே படமாக்கியிருக்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷன் செட்டும் புதுசுதான். ஏலியன் தோன்றுமிடத்தில் அந்த அறையே புளு வர்ணத்தில் ஆகாயத்தை சிம்பாலிக்காக காட்டுவதை போல செய்திருக்கிறார்கள்.

ஷில்பா பீடா வாங்கும் அந்தத் தெருவில் காட்சியமைப்பு கச்சிதம். அந்தத் தெருவில் ஒட்டப்பட்டிருக்கும் சினிமா போஸ்டர்கள். பிட்டு படமான ‘வாழ்க்கை ரகசியம்’ படத்தின் போஸ்டர்கள்.. இவற்றுக்கு நடுவில் ‘ஆரண்ய காண்ட’த்தின்  சிங்கப் பெருமாளுக்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் திணித்திருப்பது தேவையில்லாதது.

எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இசையில் இசைஞானியை அடித்துக் கொள்ளவே முடியாது என்பது இதிலும் நிரூபணமாகியிருக்கிறது. படத்தில் பல இடங்களில் இளையராஜாவின் இசைதான் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ‘ஐ ஆம் எ டிஸ்கோ டான்ஸர்’, ‘வனிதா மணி’, ‘மாங்குயிலே பூங்குயிலே’, ‘மாசி மாசம் ஆளான பொண்ணு’ போன்ற பாடல்கள் பொருத்தமான  இடங்களில் ஒலிப்பதுகூட சிறப்புதான்.

பாடல்களே படத்தில் இல்லை என்றாலும் இசையமைப்பாளர் யுவனின் பின்னணி இசை அமர்க்களம். ஸ்குரூ டிரைவரோடு ஓடும் சூர்யாவை பாலோ செய்யும் கேமிராவுக்கு பக்கத் துணையாய் யுவனின் பின்னணி இசையும் ஓடிக் கொண்டேயிருக்கிறது. ரம்யா கிருஷ்ணனின் மருத்துவமனை கதறலுக்குப் பின்னணி இசையே பெரும் பலமாய் அமைந்திருக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவுக்கு தனியாக ஒரு விமர்சனமே எழுத வேண்டும் போலிருக்கிறது. அப்படியொரு ஒளியமைப்பை காட்டியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் வினோத்தும், நீரவ் ஷாவும். இருவரும் எதை, எதை படமாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் படத்தின் துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் படம் மிகவும் தரமானது என்பதை மட்டும் சொல்ல வைப்பதுபோல காட்சிகளின் ஒளி இருக்கிறது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

படத்தில் முக்கால் மணி நேரக் காட்சிகளை நீக்கம் செய்துவிட்டு வெறும் 2 மணி நேரமாக மட்டுவே வைத்திருந்தால் படத்தை பார்க்க முடிந்திருக்கும். இப்போது இருப்பதுபோல் தலையில் சுத்தியலால் அடிப்பது போல் ஆகியிருக்காது.

முதலில் தேவையில்லாத காட்சிகளான பக்ஸின் போலீஸ் ஸ்டேஷன் காட்சி, ஷில்பாவின் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஸ்கூல் காட்சிகள், மிஷ்கின் ஓவர் ஆக்ட்டிங்கில் இயேசுவையே அலறவிடும் காட்சிகள்.. இயேசு ரட்சிக்கிறார் காட்சிகள்.. பையன்களை ரவுடி திசை திருப்பும் காட்சி, ஏலியன் காட்சிக, சேட்டு வீட்டில் கொள்ளையடிக்கப் போகும் காட்சி என்று இத்தனை காட்சிகளையும் படத் தொகுப்பாளர் நீக்கியிருந்தால் அவருக்கும் பெருமையாய் இருந்திருக்கும், நமக்கும் பொறுமை கிடைத்திருக்கும். இப்படி எல்லா பாவத்திற்கும் தானே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் படத் தொகுப்பாளர்.

படமாக்கலில் குறையே சொல்ல முடியாதபடிக்கு படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை குற்றம் சொல்ல வைத்திருப்பது, அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதையும், திரைக்கதையும், பல வசனங்களும்தான்.

வாழ்க்கையில் செக்ஸை தவிர வேறு ஒன்றுமே இல்லையா..? படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு வாழ்க்கையில் அவர்கள் படு்ம் நிஜமான கஷ்டங்களைச் சொல்லி அதற்கான தீர்வைச் சொல்லும்விதத்தில் ஒரு கதையை வைத்திருந்தால் இவருடைய அற்புதமான இயக்கத்தால் அது பாராட்டப்பட்டிருக்கும்.

கள்ளக் காதலை ஊக்குவிப்பதுபோல அமைந்திருக்கிறது சமந்தா-பகத் பாசில் கதை. இதில் என்ன தவறு இருக்கிறது என்பதைப் போலவே சமந்தா கடைசிவரையிலும் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. போதாக்குறைக்கு  பகத் பாசில் கேட்கவே கூசும் அளவுக்கான செக்ஸ் கேள்விகளை வீசுகிறார்.

“என்னைவிட உன்கிட்ட அப்படி என்னடா பெருசா இருக்கு..?” என்று சொல்லி செத்துப் போனவனின் ஜிப்பை பார்க்கிறார் பகத் பாசில். கர்மம்.. தமிழ்ச் சினிமா எந்த லட்சணத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை.

மேலும் லாஜிக்படி பார்த்தால் இந்தக் கதையில் மிகப் பெரிய ஓட்டையே இருக்கிறது. வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்கும்போதே அந்தப் பிணத்தை மறைக்க வேண்டிய அவசியம் என்ன..? யாராவது முன் ஹாலில் விருந்தினர்களை அமர வைத்துவிட்டு உள்ளறையில் கொலை செய்வார்களா..? பிணத்தை அறுக்க முயல்வார்களா..? அப்படியென்ன அவசரம் அவர்களுக்கு..? இதுவே இந்தக் கதைக்கு மிகப் பெரிய பேக் டிராப்பாக இருக்கிறது.

ஒரு சாதாரணமான மரணம் என்றுகூட சொல்லி போலீஸை அணுகியிருக்கலாமே..? போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிந்துவிடப் போகிறது..! அவசரத்தில் யோசித்தாலும் இத்தனை முட்டாளாகவா பகத் பாசிலின் கேரக்டர் ஸ்கெட்ச்சை வைத்திருப்பார்..?

அடுத்து பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களான நான்கு பசங்கள் புளு பிலிம் பார்க்க முயல்வதும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமாக திரைக்கதையை வகுத்திருக்கிறார்.

அதிலும் பாருங்கள்.. திரைக்கதையில் எவ்வளவு பெரிய ஓட்டை..? இன்றைக்கு எங்கே இருக்கிறது இப்படியொரு வீடியோ கடை..? அதிலும் ஒரு பெண்மணியே பிட்டு பட டிவிடியை எடுத்துக் கொடுக்கிறாராம். இதையும் ஒரு குறியீடு என்று சொல்லி சிலாகிக்கிறது முட்டாள்களை உள்ளடக்கிய கும்பல்கள்..! இப்போதுதான் செல்போனிலேயே அத்தனையும் வந்துவிட்டதே.. பிறகு யார் டிவிடியை தேடி ஓடுகிறார்கள்..?

சரி.. நடந்தது நடந்துவிட்டது.. டிவி உடைந்துவிட்டது. அப்பாவிடம் சொல்லி மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடிக்கலாமே..? இதுதானே ஒரு நல்ல சமூகத்திற்கு தேவையான விஷயம். இதைவிடுத்து திரும்பவும் ஒரு சமூகக் கேடாக திருடப் போகவும் தயங்காத பையன்களாக அவர்களை திசை திருப்பிவிடுவது எந்த வகையில் நியாயம் இயக்குநரே..?

இந்தப் படத்தைப் பார்க்கும் சின்ன வயசுப் பையன்களுக்கு இது சரியா தவறா என்றுகூட புரியாத அளவுக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர். அவர்கள் வெளியே போய் இது மாதிரியான தவறுகளைச் செய்தால் அதற்கு யார் பொறுப்பாவது..?

ஏற்கெனவே சமீபத்தில் பொள்ளாச்சி வன்புணர்வு விஷயத்தில் தமிழகமே கொதித்துக் கொண்டிருக்க.. எதைப் பற்றியும் கவலையில்லாமல் இது ஒரு சினிமா.. இது ஒரு கலைப் படைப்பு.. இப்படித்தான் இருக்கணும். இப்படித்தான் பார்க்கணும் என்று கொஞ்சமும் சமூக நோக்கமே இல்லாமல் இந்தக் கதையை எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

இதோடு இந்தக் கதைக்குக் கொஞ்சமும் சம்பந்தமேயில்லாமல் ஏலியன் கதையை வேறு இடையில் சொருகியிருக்கிறார். இந்தக் காட்சியினால் யாருக்கும் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏலியன் சொல்வதைவிட வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் சொல்வதே இன்றைய இளைய சமூகத்தினருக்கு தேவையான ஒன்று. இயக்குநர் ரொம்பவே அறிவு முற்றிப் போன நிலைமையில் இருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.

உண்மையில் மாணிக்கம் கதையை மட்டுமே தனியாக வைத்து ஒரு படமாகவே எடுத்திருக்கலாம். கல்யாணமாகி மனைவியுடன் உடலுறவையும் செய்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப் போய் அரவாணியாகி, திரும்பவும் வீட்டுக்கு வருபவன் எல்லாரும் நம்மை அப்படியே உச்சி முகிர்ந்து வரவேற்பார்கள் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.?

இந்த முட்டாள்தனத்தைத்தான் மாணிக்கம் தான் வந்திறங்கும் முதல் காட்சியிலேயே காட்டுகிறார். இதுவே மிகப் பெரிய லாஜிக் மிஸ்டேக். பையன் கூப்பிடுகிறான் என்று ஸ்கூலுக்கு போவதும், அங்கே நடக்கும் அவமானத்தால் கூனிக் குறுகுவதும் தேவையில்லாதது.. போயிருக்கவே கூடாதே.. ஏன் போக வேண்டும்..? வீட்டிலேயே இன்னும் யாரும் சமாதானமாகவில்லை.. அதற்குள்ளாக இந்த அப்பா பொறுப்பு ஏன்..? அந்தச் சின்னப் பையன் ராசுக்குட்டி நன்றாக நடித்திருந்தாலும், வயதுக்கு மீறிய பேச்சைப் பேசுகிறான் என்பது மட்டும் உண்மை.

போலீஸ் ஸ்டேஷனில் பக்ஸிடம் ஷில்பா பக்ஸிடம் சரண்டராவதெல்லாம் முட்டாள்தனமான கதை. இவ்வளவு அப்பாவியாகவும் பயந்தாங்கொளியாகவும் இப்போது யார் இருக்கிறார்கள்.? அதோடு பட்டப்பகலில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இப்படியெல்லாம் செய்ய முடியுமா..?

இயக்குநர் சற்று அதீதமாகவே சிந்தித்திருக்கிறார். இந்தக் காட்சியைக்கூட மிகவும் அருவருப்பு தரும் விதத்தில் அசிங்கமாக “மண்டி போடு” என்பதைக்கூட சந்தோஷமாக சொல்ல வைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர். கேவலமான திரைக்கதை.

மறுமுறையும் பக்ஸ் புணர்வுக்கு அழைக்கும்போது பொங்கியெழும் ஷில்பா அவன் தலையில் கை வைத்து சாபம் விடுவதும் சிறப்பான இயக்கத்தினால் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுவும் இந்தக் கதைக்கு தேவையில்லாத காட்சிகள்தான்.

அதோடு இவர் போன்ற அரவாணிகளை தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எப்படி அணுக வேண்டும் என்பதையே கேலிக்கூத்தாக்கியிருக்கிறார் இயக்குநர். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளே இல்லாமல் “இனிமேல் இங்கேதான் இருப்பேன். உனக்கு அப்பாவா இருப்பேன்..” என்று விஜய் சேதுபதி பையனிடம் சொல்லும் காட்சியுடன் நிறைவு செய்திருந்தால் நிச்சயம் பாராட்டியிருக்கலாம். ஆனால் இயக்குநர் செய்ததெல்லாம் கதையின் கற்பழிப்பு.

ரம்யா கிருஷ்ணன் தன் மகனை கன்வின்ஸ் செய்து அவனும் அதை ஏற்றுக் கொள்ளும்படியான வாதத்தை வைப்பதெல்லாம் பக்கா பிராடுத்தனமான திரைக்கதை.

இது மட்டுமா.. பெற்ற தாயை எந்த மகனாவது “தேவடியா முண்டை” என்று சொல்வானா..? அப்படி சொல்பவன் ஒரு நல்ல மனிதனாக இருக்க முடியுமா..? அப்படியொரு வசனத்தை வெளிப்படையாக பேச வைக்கலாமா..?

இயக்குநர் தனது மறை கழண்ட தன்மையுடன் இந்தக் காட்சியில் அநியாயத்திற்கு வைத்திருக்கிறார். ‘ஏ’ படம்தான் என்றாலும் ஒரு அளவு வேண்டாமா..? தராதரம் வேண்டாமா..?

படம் பார்க்க வரும் எத்தனையோ இளம் சிறார்கள் இந்த வார்த்தையைக் கேட்டு இன்னும் எத்தனை பேரின் மீது வன்மத்தை வீசப் போகிறார்களோ தெரியவில்லை.?

அதிலும் சூர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆபாச படத்தில் நடித்ததை நியாயமாக்கும் வகையில், “உன்ன யாராச்சும் பெரிய நடிகையாக்குறேன்னு ஏமாத்திட்டாங்களா..? ஏம்மா இப்படி நடிச்ச..?” என்று கேட்பதெல்லாம் சமாளிப்புகேஷன் இயக்குநரே..! இப்படி சிந்திக்கத் தெரிந்தவன் “தேவடியா முண்டை” என்று அம்மாவை ஏன் திட்ட வேண்டும்..?

“அந்த மாதிரி படங்களை பார்க்க லட்சம் பேர் இருக்கும்போது நான் நடிக்கிறதில்ல என்ன தப்பு..?” என்று ரம்யா கிருஷ்ணன் திருப்பிக் கேட்பது சிச்சுவேஷனுக்குப் பொருத்தம்தான் என்றாலும் யதார்த்த வாழ்க்கைக்கு பொருத்தமே இல்லாத வசனம்.

குறிப்பாக ஒரு அம்மா தன் மகனிடம் பேசக் கூடாத வசனம். இப்போது மகன் திரும்பி “அப்போ.. நான் ஆபாசப் படம் பார்க்குறதுல தப்பில்லீல்ல அம்மா…?” என்று கேட்டால் அம்மாவும் “தப்பு இல்ல மகனே” என்று சொல்வாரா..?

“படத்தில் இடம் பெறும் மத ரீதியான காட்சிகள் யாரையும் புண்படுத்த அல்ல.. கற்பனையாக மட்டுமே…” என்று சிலைடு போட்டுவிட்டு கிறிஸ்துவ மதத்தினரை வைத்து செய்திருக்கிறார் இயக்குநர்.

இதேபோல் முஸ்லீம் மதத்தை பேச முடியுமா.. முடியாது.. படம் ஓடாது. அடுத்து இயக்குநர் வீட்டைவிட்டு வெளியில் வர முடியாது. இந்துக்களை சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்விட்டது. சரி.. கிறிஸ்துவத்தை ஒரு கை பார்ப்போம் என்று சொல்லி அவர்களை கிண்டல் செய்திருக்கிறார்கள்.

மத சகிப்புத் தன்மைதான் இந்தியாவின் ஸ்பெஷலாட்டி. இவர்களைப் போன்ற இயக்குநர்கள் இன்னும் 2, 3 பேர் வரிசையாக வந்தால் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனியாக சென்சார் போர்டு வைத்துதான் சர்டிபிகேட் தர வேண்டியிருக்கும். இயக்குநரின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

படத்தில் ‘மேட்டர் பண்ணோம்’.. ‘போட்டாச்சு..’ ‘போட்டுட்டியா’ என்று செக்ஸை குறியீடாக வைத்து காட்சிக்குக் காட்சி வசனம் பேசுகிறார்கள். செக்ஸ் மட்டுமே வாழ்க்கை என்பதாக இத்திரைப்படம் பேசியிருப்பது நமது தமிழ்ச் சினிமாத் துறைக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய சாபக் கேடு.

ஆக மொத்தம், இந்தப் படத்தின் இயக்குநர் இத்திரைப்படத்தின் வாயிலாக ஒரு சமூகக் குற்றவாளியாகியிருக்கிறார் என்பதை நாம் அழுத்தமாக பதிவு செய்கிறோம்.

திரும்பவும் சொல்கிறோம். இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா சிறந்த இயக்குதல் திறமை படைத்தவர். ஆனால் அதை நல்லவிதமாக.. சமூகத்துக்குத் தேவையான விஷயங்களுடன் செய்ய வேண்டும் என்றுதான் சொல்கிறோம்..!

சூப்பர் டீலக்ஸ் – கேவலமான திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை..!

Our Score