full screen background image

சுல்தான் – சினிமா விமர்சனம்

சுல்தான் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.

படத்தில் கார்த்தி நாயகனாகவும், இவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார். மேலும் லால், நெப்போலியன், யோகி பாபு, ‘கே.ஜி.எப்’ வில்லன் ராம்சந்திர ராஜு, கவிஞர் விக்ரமாதித்யன், செண்ட்ராயன், சிங்கம்புலி, மயில்சாமி, சதீஷ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – பாக்கியராஜ் கண்ணன், தயாரிப்பு நிறுவனம் – டிரீம் வாரியர் பிக்சர்ஸ் – தயாரிப்பாளர்கள் – எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, இணை தயாரிப்பு – அரவிந்த்ராஜ் பாஸ்கரன், நிர்வாகத் தயாரிப்பு – தங்கபிரபாகரன், ஒளிப்பதிவு – சத்யன் சூரியன், இசை – விவேக் மெர்வின், பின்னணி இசை – யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – ரூபன், தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன், தயாரிப்பு கண்ட்ரோலர் – ராஜேந்திரன், வசனம் – அருள் குமார் ராஜசேகரன், ஹரிஹரசுதன், தங்கவேலு, உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், உத்ரா மேனன், பாடல்கள் – விவேகா, தனிக்கொடி, ஒலி வடிவமைப்பு – டி.உதயகுமார், கிராபிக்ஸ் – க்நாக் ஸ்டூடியோஸ், நடன இயக்கம் – பிருந்தா, ஷோபி, தினேஷ், கல்யாண், விளம்பர வடிவமைப்பு – கிருஷ்ணா, மக்கள் தொடர்பு – ஜான்ஸன்.

மகாபாரத கிருஷ்ணர் கௌரவர்கள் பக்கம் நின்றால் எப்படி இருக்கும்..? அந்த புள்ளிதான் இந்த படம். நீரின்றி அமையாது உலகு’ என்று சொல்வார்கள். அதேபோல்தான் ‘உறவின்றி அமையாது உலகு’. உறவுகளுக்காக முன்னே வந்து நிற்கும் ஒருவனின் கதைதான் இந்தப் படம். 

சேலம் அருகேயிருக்கும் ஒரு ஊர். அங்கே பெரும் நிலச்சுவான்தார் நெப்போலியன். அவரது மனைவி அபிராமி. ஒரு ஆண் குழந்தையை பிரசவித்துக் கொடுத்துவிட்டு மரணமடைகிறார் அபிராமி. நெப்போலியனிடம் கவுரவ சேனை ஒன்று இருக்கிறது. சோறு போட்டு வளர்த்து வைத்திருக்கிறார். அந்த ரவுடிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுல்தான்’ என்ற அந்த மகனை வளர்த்து ஆளாக்குகிறார்கள். இ்ப்போது அந்த ‘சுல்தான்’ மும்பையில் ரோபோட்டிக்ஸ் பொறியாளராக  இருக்கிறார்.

சுல்தான்’ ஊருக்கு வந்திருக்கும்போது நெப்போலியன் கொல்லப்படுகிறார். அடுத்துப் பொறுப்புக்கு வரும் சுல்தான், தன் அப்பா இல்லாத சூழலில், அவர் வளர்த்து வைத்திருக்கும் ரவுடிகளுக்கு காவல்துறையால் பெரும் பிரச்சினை ஏற்பட்டிருப்பதை உணர்கிறார். அவர்களைக் காப்பாற்ற நினைக்கிறார்.

இந்த நேரத்தில் பக்கத்து கிராமத்தைக் குறி வைக்கிறது மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனம். விவசாய நிலங்களை அபகரிக்கத் திட்டமிடும் அந்த நிறுவனத்திடமிருந்து அந்த ஊரைக் காப்பாற்றும் பொறுப்பு நாயகன் கார்த்தியிடம் வருகிறது. ஏனெனில், இந்தக் கிராமத்தைக் காப்பாற்றுவதாக அவருடைய அப்பாவான நெப்போலியனும் வாக்குக் கொடுத்திருப்பதுதான்.

தன்னுடைய தந்தை கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக தன்னிடமிருக்கும் 100 பேர் கொண்ட அந்த கவுரவ சேனையைப் பயன்படுத்தி அந்தக் கிராமத்தைக் காப்பாற்ற நினைக்கிறார் சுல்தான். அது அவரால் முடிந்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

கார்த்தி சண்டை காட்சிகளில் கொஞ்சம் தேறியிருக்கிறார். வசன  டெலிவரியிலும் கொஞ்சம் நுணுக்கத்தைக் கொடுத்திருக்கிறார் கார்த்தி.  அவருடைய ஸ்பெஷலான சிரிப்புடன் கலந்த நக்கல் பேச்சுக்கள் இதில் குறைவாக இருந்து, வீர ஆவேசப் பேச்சுக்களை அதிகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இது அவருடைய பெண் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

ராஷ்மிகா தேர்வு சரியில்லை. கார்த்திக்கும், அவருக்கும் பொருத்தமே இல்லை. ரொமான்ஸ் மூட் வரும் அளவுக்கு ராஷ்மிகாவும் நடிக்கவில்லை. அதற்கான ஸ்கோப்பும் அவர்களின் கதையில் இல்லை.

பொதுவாக சமூகக் கருத்துள்ள வசனங்களை நாயகன்தான் சொல்லுவார். இந்தப் படத்தில் ராஷ்மிகாவையும் மாட்டிவிடுவதுபோல “எத்தனை ஜி வந்தாலும் கஞ்சியை விவசாயிதான் ஊத்தணும் ராஜா” என வசனம் பேச வைத்திருக்கிறார்கள்.

மலையாள நடிகர் லால், நூறு ரெளடிகளில் ஒருவராக இருப்பதைப் பார்க்க சகிக்கவில்லை. படம் முழுக்க அடியாளாகவே வலம் வந்து கடைசியில் ஒரு தியாகிப் பட்டத்துக்காக சாகடிக்கப்படுகிறார். நெப்போலியன் தான் இருக்கின்ற காட்சிகளில் வஞ்சகமில்லாமல் நடித்து முடித்திருக்கிறார்.

யோகி பாபுவும் சொல்லி வைத்தாற்போல் மூன்று காட்சிகளில் மட்டுமே சிரிக்க வைத்திருக்கிறார். மற்றைய நடிகர்கள் பலரும் ஒரு சில காட்சிகளில் தலையைக் காட்டிவிட்டு அப்படியே போய்விட்டார்கள். மனதில் நிற்பது போல யாராவது செய்திருக்க வேண்டும்.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு வழக்கம்போல சிறப்புதான். இரவு நேரக் காட்சிகளில் அவருடைய ஸ்பெஷல் அயிட்டமான சிவப்பு கலரை தெளித்து அழகுபடுத்தியிருக்கிறார். சண்டை காட்சிகளையும், பிரம்மாண்டமான நடனக் காட்சிகளையும் படமாக்கியவிதம் அருமைதான்.

இத்தனை கடுமையான சண்டை காட்சிகளை முன்பே ‘சிறுத்தை’ படத்திலும், ‘கைதி’ படத்திலும்தான் பார்த்திருக்கிறோம். மீண்டும் அதே ஸ்டைலில் கார்த்திக்காக கொண்டு வந்திருக்கிறார்கள் போலும்.

இசையில் பாடல் வரிகள் கேட்பதை போல இசையமைத்திருக்கிறார்கள் விவேக்-மெர்வின். ஆனால், பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா கூடுதலாக அசத்தியிருக்கிறார். இடையிடையே வரும் தீம் மியூஸிக்கும் ரசிக்க வைத்திருக்கிறது. ரசிக்கும்படி நடனத்தை அமைத்திருக்கும் நடன  இயக்குநர்களுக்கு நமது வாழ்த்துகள்.

படத் தொகுப்பாளர் கொஞ்சம் மனம் வைத்து சண்டை காட்சிகளில் கை வைத்து நறுக்கியிருந்தால் படமும் கொஞ்சம் நறுக்கென்றிருக்கும்.

சிறுத்தை’, ‘கைதி’ டைப்பில் பல ரவுடிகளுடன் இணைந்து கார்த்தி நடித்தால் அது ஹிட்டாகிவிடும் என்ற நினைப்பில் இந்தக் கதையை படமாக்கியிருக்கிறார்கள் போலும்..!

கார்த்தி வழக்கம்போல அவருக்கேற்ற கேரக்டர் ஸ்கெட்ச்சில் சரியாக நடித்திருந்தாலும் அளவுக்கதிகமான அடிதடிகளும், பொருத்தமற்ற காதல் கதையும் போரடிக்க வைக்கிறது. கதையும், திரைக்கதையும் படம் பார்க்கும் ரசிகனின் மனதைவிட்டு தொலைதூரம் போய்விட்டதால் முழுக்க ரசிக்க முடியவில்லை.

முதல் பாதியிலேயே ஒரு வில்லனின் கண் பார்வையை காலி செய்கிறார் கார்த்தி. ஆனால், அடுத்த பாதியில் மீண்டும் வேறொரு வில்லனை காட்டி கதை தொடரும் என்பது போல தொடர்ந்திருப்பது எதனால் என்று தெரியவில்லை.

இடைவேளைக்கு முன்பு வரையிலும் படம் எந்தக் கதையை நோக்கிச் செல்கிறது என்ற குழப்பம்தான் வந்தது. கார்த்தி, பக்கத்து ஊரை காப்பாற்றப் போகிறாரா..? அல்லது ரவுடிகளைத் திருத்தப் போகிறாரா..? அல்லது அந்தக் கார்பரேட் வில்லனை அடித்து விரட்டப் போகிறாரா..? இல்லாவிடில் தனது காதலியை கரம் பிடிக்கப் போகிறாரா..? என்று பல்வேறு திசைகளில் திரைக்கதையை நகர்த்தியிருப்பதால் குழப்பத்துடனேயே அமர  வேண்டியிருந்தது.

காவல் துறை என்ற ஒரு துறையினர் இருக்கிறார்களே.. அவர்கள் எதிலும் தலையிட மாட்டார்களோ என்ற எண்ணத்தை தனது லாஜிக் மிஸ்டேக்கால் நினைக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

அந்த ஊருக்கு எதற்காக வந்திருக்கிறோம் என்பதை முன்பேயே அந்த ரவுடிகளிடம் கார்த்தி சொல்லியிருந்தால்கூட நன்றாகத்தானே இருந்திருக்கும். அந்த கிரெடிட்டும் அந்த ரவுடிகளுக்கும் கிடைக்கட்டுமே..? இதில் நாயகனுக்கு மட்டும் என்ன ஸ்பெஷலாட்டி..?!

எப்படியும் நாயகன்தான் ஜெயிப்பான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் எப்படி ஜெயிக்கிறான் என்பதை திரைக்கதையில் மாய வித்தை செய்து காட்டினால்தான் அந்த நாயகனை மக்களுக்கும் பிடிக்கும். படமும் பேசப்படும். அந்த வித்தை இந்தப் படத்தில் மிகவும் குறைவு என்பதுதான் உண்மை.

கார்த்தி வெறுமனே மசாலா ஹீரோ மட்டுமே அல்ல. தியேட்டருக்கு வரும் ஒட்டு மொத்தக் குடும்பத்தினரும் நேசிக்கும் ஒரு பிள்ளை. இனிமேல் அதற்கேற்ற கதையைக் கையாள்வது அவருக்கும் நல்லது. ரசிகர்களுக்கும் நல்லது..! தயாரிப்பாளர்களுக்கும் நல்லது..!

Our Score