முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் தயாரிக்கும் படம் ‘சல்பர்.’ இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல்முறையாக வில்லனாகவும் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவு – இனியன் ஜே ஹாரிஸ், இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – எலிசா, கலை இயக்கம் – பழனி, ஸ்டில்ஸ் – சக்தி பிரியன், மக்கள் தொடர்பு – மணவை புவன்.
இயக்குநர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் முதல்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் விபின் இதுவரை நடித்திராத வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் புவன் பேசுகையில், “சென்னையில் ஓர் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராகப் பணியாற்றுகிறார் நாயகி பாரதி. அங்கே எதிர்பாராதவிதமாக ஏற்படும் சிக்கலால் பணியிடை மாற்றம் பெற நேரிடுகிறது. தான் மிகவும் நேசித்த crime department-ல் இருந்து காவல்துறைக் கட்டுபாட்டு அறைக்கு பணி மாற்றமாகிறாள் நாயகி பாரதி.
தன் திறமைக்கு இங்கே பெரிதாக வேலை ஒன்றும் இல்லை என அவள் நினைத்து சாதாரணமாக தன் வேலையை தொடர்கையில், ஒரு நாள் மாலை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓர் அழைப்பு வருகிறது.
எதிர்முனையில் பேசும் பெண், தான் இன்னும் சில மணி நேரங்களில் இறந்துவிடுவேன். என்னை நிச்சயம் கொன்று விடுவார்கள் என சொல்ல, ஆரம்பத்தில் அந்த அழைப்பு போலியானது என்றுதான் பாரதி நினைக்கிறாள். ஆனால், அதன் பின்புதான் பாரதிக்கு அந்தப் புகாரின் தீவிரம் புரிகிறது.
இதன் பின்னர் அந்த வழக்கை பாரதி எப்படி எதிர்கொண்டாள் என்பதை ‘ஆக்ஷன்-திரில்லர்’ கலந்த திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம்..” என்றார்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாயகி யாஷிகா ஆனந்த், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் திரையுலகத்தின் மூத்த இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.