நடிகர் சங்கத் தேர்தல் ஒரு குடும்பத்தையே இரண்டாகப் பிரித்துவிட்டது..!
‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ராஜேந்திரனின் முதல் மனைவி திருமதி பங்கஜம். இவர் எஸ்.எஸ்.ஆருடன் இணைந்து நாடகங்களில் நடித்த நடிகை. எஸ்.எஸ்.ஆரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது பெயரில் சாலிகிராமத்தில் இருக்கும் எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரை இவருக்குப் பிறந்த மகன்களும், பேரன்களும் கூட்டாக நிர்வகித்து வருகிறார்கள். இவர்களுக்கு எஸ்.எஸ்.ஆர்.இளங்கோவன், எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரகுமார், எஸ்.எஸ்.ஆர்.கலைவாணன், எஸ்.எஸ்.ஆர்.செல்வராஜ், என்று நான்கு மகன்களும் எஸ்.எஸ்.ஆர்.பாக்கியலட்சுமி என்ற ஒரேயொரு மகளும் உண்டு.
எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகனான எஸ்.எஸ்.ராஜேந்திர குமார் தீவிர அ.தி.மு.க. உறுப்பினர். அ.தி.மு.க.வின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
எஸ்.எஸ்.ராஜேந்திரனின் இரண்டாவது மனைவியான நடிகை விஜயகுமாரிக்கும் இவர் மூலமாக ரவிக்குமார் என்ற மகன் உண்டு. இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது 46-வது வயதில் தாமரைச்செல்வி என்பவரை மணந்தார். இவர்களுக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், லட்சுமி என்று இரண்டு பிள்ளைகள்.
எஸ்.எஸ்.ராஜேந்திரனின் கடைசி மகனான எஸ்.எஸ்.ஆர்.கண்ணன்தான் சரத்குமார் அணியில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பொருளாளர் பதவிக்கான வேட்பாளர். ஆனால் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரனான நடிகர் எஸ்.ஆர்.பங்கஜ்குமார் பாண்டவர் அணியின் பக்கம் இருக்கிறார்.
இப்போது எஸ்.எஸ்.ராஜேந்திரனின் முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டத்தை எஸ்.எஸ்.ஆரின் மகனான எஸ்.எஸ்.ராஜேந்திரகுமாரின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தை பாண்டவர் அணிதான் முன்னின்று நடத்தப் போகிறதாம்.
இதற்காக இன்று ஒரு சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன்களான எஸ்.எஸ்.ஆர்.இளங்கோவன், எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திர குமார், எஸ்.எஸ்.ஆர். கலைவாணன் மற்றும் பேரன்களான எஸ்.ஆர்.செல்வராஜ், எஸ்.ஆர்.பங்கஜ் குமார், எஸ்.ஆர்.விக்னேஷ் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மூத்த மகனான எஸ்.எஸ்.ஆர்.இராஜேந்திர குமார் பேசும்போது,
“மறைந்த எங்களது தந்தையார் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அனைவரும் சேர்ந்து, எங்களது தந்தையின் ‘ நினைவஞ்சலி விழா’வை வருகிற அக்டோபர் மாதம் 12-ம் தேதி திங்கட்கிழமை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடத்தவுள்ளோம்.
அதன் பிறகு வருகிற அக்டோபர் 24-ம் தேதி மதுரைக்கு பக்கத்தில் உள்ள எங்களது சொந்த ஊரான சேடப்பட்டியிலும் சடங்குகள் நடைபெறவுள்ளன.
என்னுடைய மகனாகிய எஸ்.ஆர்.பங்கஜ் குமார் நடிகர், சங்கத்தில் கடந்த ஏழு வருடங்களாக உறுப்பினராக உள்ளார். அவர் தற்போது நாசர் தலைமையிலான பாண்டவர் அணி சார்பாக தீவிரமாக நடிகர் சங்க தேர்தலில் ஈடுபட்டு வருகிறார்.
நாங்கள் எங்கள் தந்தையான எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களுக்கு இப்படியொரு விழாவை நடத்துவுள்ளதை பாண்டவர் அணியினர் என்னுடைய மகனான பங்கஜ் குமார் மூலமாக தெரிந்து கொண்டு இந்த விழாவை தாங்கள் முன்னின்று நடத்த தயாராக இருப்பதாக கூறினார்கள். இந்த விழாவை காமராஜர் அரங்கத்தில் வைத்து நடத்தினால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் கூறியதால் அங்கேயே நடத்த முடிவு செய்துள்ளோம்.
நடிகர் விஷால் மற்றும் பொன்வண்ணன் இருவரும் வெளியூரில் பிரச்சார வேலையில் இருந்தாலும், எங்களிடம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வேலைகள் எப்படி நடைபெறுகிறது என்று விசாரித்து வருகிறார்கள். காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் எங்கள் தந்தை திரு.எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் திருவுருவ புகைப்படம் திறக்கப்படவுள்ளது.
நான் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் பாண்டவர் அணியின் சார்பில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேடையேறி பேசினேன்.
என்னை மதிப்பிற்குரிய ராதிகா அம்மா, ‘நடிகர் சங்கத்தில் உறுப்பினாராக இல்லாதவர்கள் மேடை ஏறி பேசியிருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார். நான் யாரோ அல்ல. ‘லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்’ அவர்களின் மகன். என்னுடைய தந்தை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்ததால், நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேரவில்லை.
நானும் சில படங்களில் நடித்துள்ளேன். நான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் அரசியலில் ஈடுபட்டு வந்ததால் என்னுடைய தந்தை என்னிடம், ‘நீ நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டாம் சேர்ந்தால் மிகப் பெரிய அரசியல் உண்டாகும்’ என்று எச்சரித்ததால்தான், நான் சங்கத்தில் சேரவில்லை.
நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய பாரம்பரியம் இருக்கிறதோ, அவ்வளவு பெரிய பாரம்பரியம் எங்களுடைய குடும்பத்துக்கும் இருக்கிறது. ராதிகா அவர்களுக்கு 10 வயது இருக்கும்போதே எனக்கு அவரை தெரியும். அவர் பல முறை எங்கள் வீட்டுக்கு வருகை தந்துள்ளார். அவருடைய தாயாரும் என்னுடைய தாயாரும் நெருங்கிய தோழிகள். என்னை யாரென்று தெரியவில்லை என்று கூறிய அவர், அவருடைய தாயாரிடம் என்னை பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., மற்றும் எங்கள் தந்தை லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இருவரும் இணைந்துதான் இந்த நடிகர் சங்கத்தை துவக்கினார்கள். பின்னர் நடிகர் சங்க கட்டிடத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., மற்றும் எங்கள் தந்தை இருவருமே முயன்று, நிதி திரட்டி கட்டினார்கள்.
நாங்கள் பாண்டவர் அணிக்கு ஆதரவாக இருக்கிறோம். எங்களுக்கு அவர்களை பிடித்திருக்கிறது. அது எங்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
பாரம்பரியம் மிக்க எங்கள் குடும்பத்தில் நடிகர் விஷால் பிளவினை உண்டாக்கிவிட்டார் என்று கூறுவது மிகப் பெரிய தவறு. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்துதான் இந்த விழாவை நடத்துகிறோம். எங்கள் குடும்பத்தை பற்றி அவர் அப்படி கூறியது மிகப் பெரிய தவறு.
எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், சரத்குமார் அவர்கள் அணியில் போட்டியிடுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அதேபோல் ‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ராஜேந்திரன் எல்லோருக்கும் பொதுவானவர் அவருக்கு யார் வேண்டுமானாலும் விழா எடுக்கலாம். நாங்கள் அவருடைய பிள்ளைகள். அவருக்கு விழா நடத்த எங்களுக்குத்தான் உரிமைகள் இருக்கிறது. நாங்கள் நடத்தும் விழாவில் அவரும் எங்களோடு சேர்ந்து பங்கேற்கலாம்.
எங்களது தந்தையின் நினைவு விழாவிற்கு வரும்படி நடிகர் பிரபு அவர்களையும் அவருடைய குடும்பத்தினரையும் இன்று காலையில் சந்தித்து அழைப்பு விடுத்தோம். அதே போல் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட இன்னும் பல நடிகர்களையும் அழைக்கவுள்ளோம்.
இவ்விழாவில் எனது தந்தை எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மீது மரியாதை கொண்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்…” என்றார்.
பாண்டவர் அணி முன்னின்று நடத்தினால் என்னதான் மகனாக இருந்தாலும் எதிரணியில் போட்டியிடும் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் இங்கே வருவது சாத்தியம்தானா..? அவருக்கு சங்கடம் இருக்காதா..?
பாண்டவர் அணி மேற்கொண்டிருக்கும் தவறான முதல் நடவடிக்கை இது என்றே நினைக்கிறோம்.. முற்றிலும் தவிர்த்திருக்கலாம்..
நடிகர் சங்கத் தேர்தலில் நடக்குற உள்ளடி வேலைகளையெல்லாம் பார்த்தால், அரசியல் கட்சிகளெல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்கணும் போலிருக்கே..!?