தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள புதிய தெலுங்கு படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளாராம்.
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தற்போது தமிழிலும் படங்கள் இல்லை. தெலுங்கிலும் இல்லை. தனது காதலருடன் மும்பையில் தனி வீட்டில் வசித்து வரும் ஸ்ருதிஹாசன் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டாமலும் இருக்கிறார்.
இந்த நிலையில் வயதில் மூத்த நடிகரான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார்.
தற்போது பாலகிருஷ்ணா இயக்குநர் போயபதி சீனுவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அகண்டா’ படத்தில் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் பாலகிருஷ்ணா. இந்தப் படத்தை தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘க்ராக்’ படத்தின் இயக்குநரான கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ளார்.
பாலகிருஷ்ணா – கோபிசந்த் மாலினேனி படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவிருப்பதாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக் குழு.
முன்னதாக, கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் வெளியான ‘க்ராக்’ படத்தின் நாயகியாகவும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.