full screen background image

“மரணத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தைதான் இந்த நாடகம்” – பாராட்டிய கமல்ஹாசன்..!

“மரணத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தைதான் இந்த நாடகம்” – பாராட்டிய கமல்ஹாசன்..!

மகிழ் மன்றம் மற்றும் டம்மீஸ் ட்ராமா வழங்க ஶ்ரீவத்சன் நடித்து இயக்கிய ‘விநோதய சித்தம்’ மேடை நாடகம் நேற்று நாரத கான சபாவில் நடைபெற்றது.  இந்த நாடக விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

இந்நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “இந்த நாடகத்தை அரங்கேற்றுவதும், அதில் நான் கலந்து கொள்வதும் மகிழ்ச்சி. என்னுடைய பிறந்த நாள் சிறப்பாக இதை அரங்கேற்றியதாக கூறியதற்கும் நன்றி.

நான் இங்கு வந்ததற்கு மிக முக்கியமான காரணம் எனது குருநாதர் கே.பி. சார்தான். அவரையும், என்னையும் தனித் தனியாகப் பிரிக்க முடியாது. எனக்கு கிடைக்காத பாக்கியம் திரு ்ரீவத்சன் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

கே.பி. சாருக்கு அவர் கதை எழுதியிருக்கிறார். அவருக்கு நிறைய கதைகளை நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் எழுதியதில்லை. ஒரு நூல் கொடுத்தால் போதும். அதை அழகான துணியாக மாற்றிவிடுவார் கே.பி. சார்.

இன்னொரு காரணம், நானும் TKS நாடகக் குழுவிலிருந்து வந்தவன். ஒரு முறை பள்ளியில் மாடியில் இருந்து விழுந்து விட்டேன். அதை அப்போது, “பையன் பிழைத்து கொண்டானா..?” என TKS குழுவில் விசாரிக்க, “களத்தூர் கண்ணம்மாவில் நடித்த” பையன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

என்னை “நாடகத்தில் நடிப்பியா..?” எனக் கேட்டு நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார்கள். அப்படித்தான் அந்த நாடக குழுவில் இணைந்தேன். எல்லோரும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு போவார்கள், ஆனால், நான் சினிமாவில் இருந்து நாடகத்திற்கு வந்தேன்.

அந்த நாடகங்கள் பேரனுபவமாக இருந்தது. மீண்டும் என்னை சினிமாவை நோக்கி தள்ளிவிட்டதும் நாடகம்தான். பிறகு, மீண்டும் நாடக மேடைக்கு வர நிறைய ஆசைப்பட்டேன். யாரும் என்னை இணைத்து கொள்ளவில்லை.

நாடக மேடை என்பது மிகச் சிறப்பானது. ்ரீவத்சன் எடுத்துக் கொண்ட இந்த முயற்சி மிகச் சிறப்பானது.  சினிமாவில்  பாட்டு பாடுவார்கள். பாம் போடுவார்கள். இரண்டு பேர் செய்ய வேண்டிய காதலை 50 பேர் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், இங்கு நாடக அரங்கத்தில் தனியாக ரசிகனுக்கும், சிந்தனைக்குமான தொடர்பு இருக்கும். நான் நாடகத்தின் ரசிகன் என்பதுதான் எனது முதல் தகுதி. நிஜமான திறமையை அடையாளப்படுத்துவது நாடக மேடைதான்.

சினிமாவில் நான் நடிக்கக் கூட தேவையில்லை. ஹோலோகிராம் மூலம் என் போன்ற உருவத்தை கொண்டு வந்துவிட முடியும் அந்தளவு டெக்னாலஜி வந்துவிட்டது. ஆனால் இங்கு மேடையில் நிகழ்வதுதான் நிஜமான திறமை.

நான் ஒரே ஒரு தடவை பார்த்த சோ அவர்களின் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது. எனக்கு, நல்ல நாடகங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும். மீண்டும் நாடகங்களில் நடிக்க ஆசையாகத்தான் இருக்கிறது. இவர்களை ஊக்கப்படுத்தும்வகையில் கண்டிப்பாக வேறு ஒரு நாடக மேடையில் ஏற உள்ளேன். அது நிச்சயமாக அரசியல் மேடை இல்லை.

இந்த நாடகத்தைப் பொறுத்தவரையில் நிறைய சொல்ல வேண்டும். எனது ‘உத்தம வில்லன்’ படத்தில் ஒரு பாடல் வரும். சாகாவரம் போல் சோகம் உண்டோ ‘என்ற பாடல். அந்தப் பாடலின் மேம்பட்ட வடிவமாகத்தான் இந்த நாடகம் உள்ளது. மரணத்துடனான அழகான உரையாடலாக இந்த நாடகம் அமைந்துள்ளது. இந்த உரையாடலை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நம் அனைவருக்குமான தேதி நிச்சயிக்கப்பட்ட ஒன்று.

வீடு கட்டும்போது கழிவறை பற்றி சிந்திக்க மாட்டோம். வாழ்கைக்கு இருக்கும் மரியாதை மரணத்திற்கு தரப்பட வேண்டும், அதை இந்த நாடகம் செய்துள்ளது. நாம் அனைவரும் உணர வேண்டிய ஒரு உண்மையை அழகாக மென்மையாக எடுத்துரைக்கிறது இந்த நாடகம்.

இங்கு இந்த நாடகத்தில் விமர்சனம் என்பதே இல்லை. அத்தனை பேரும் அருமையாக செய்துள்ளார்கள். நடித்தவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

இதில் கலந்து கொண்டவர் ஒத்திகைக்கு போகவில்லை என்றால் நாடகத்தை நிறுத்தி விடுவார்கள் என்று  சொன்னார். ஒத்திகை நாம் அந்த படைப்புக்கு தரும் மரியாதை. ஒத்திகையை நம்பும் வாத்தியார் எனக்கு கிடைத்தார். அதனால் அதன் அருமை எனக்கு தெரியும்.

மும்பையில் சசிகபூர் பிரித்வி தியேட்டர் என ஒன்றை நிறுவியிருக்கிறார். அதுபோல் ஒன்றை இங்கு அமைக்க ஆசைப்படுகிறேன்.

நான் இயக்கும் படத்தை எத்தனை முறை பார்ப்பீர்கள் என்று ஒரு முறை என்னிடம் கேட்டார்கள். ஒரு முறை நிஜத்தில் எண்ணிப் பார்த்தேன், நிஜமாகவே 100, 150 முறை பார்ப்பேன். டப்பிங், ரெக்கார்டிங் என மீண்டும், மீண்டும் புசித்து, சாப்பிட்டுவிட்டுத்தான் உங்களுக்கு தருவேன். நீங்கள் வெற்றி பெற வைப்பதற்கு பார்ப்பதைவிட அதிக முறை நான் பார்ப்பேன்.

இணையத்தில் பார்க்க முடிகிற காலத்தில் இங்கு நேரில் வந்து ரசிக்கும் நாடக ரசிகர்களுக்கு எனது நன்றி…” என்றார் நடிகர் கமல்ஹாசன்.

சமீபத்தில் இயக்குநர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் ZEE-5 ஒடிடி தளத்தில் வெளியான  விநோதய சித்தம்’  திரைப்படம்,  ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் மிகப் பெரும் பாராட்டுக்களை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Our Score