தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகரும், நடிகரும், இசையமைப்பாளருமான திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் நுரையீரல் தொற்று நோய் காரணமாக இன்று மதியம் 1.04 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதியன்று சிறிய அளவுக்கான கொரோனா நோய் அறிகுறிகள் இருந்ததால் அமைந்தகரையில் இருக்கும் எம்.ஜி.எம். ஸ்பெஷலாட்டி என்னும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் எஸ்.பி.பி. கொரோனாவுக்கான சிகிச்சையினால் அந்த நோயிடமிருந்து விடுபட்ட எஸ்.பி.பி. திடீரென்று நுரையீல் தொற்ற நோயினால் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். கடந்த 52 நாட்களாக வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சையினால் சுவாசித்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் மரணமடைந்தார்.
அவருடைய மனைவி சாவித்திரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்தார். எஸ்.பி.பி.க்கு எஸ்.பி.பி.சரண் என்னும் மகனும், பல்லவி என்னும் மகளும் உள்ளனர். எஸ்.பி.பி.சரண் தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் இருக்கிறார். எஸ்.பி.பி.யின் உடன் பிறந்த தங்கையான திருமதி எஸ்.பி.ஷைலஜா மிகப் பிரபலமான பாடகியாவார்.
எஸ்.பி.பி.யின் உடல் இன்று மாலை சென்னையில் நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் இருக்கும் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டவுள்ளது.
நாளை சென்னைக்கு அடுத்தத் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் எஸ்.பி.பி.யின் சொந்த பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு :
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1946-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதியன்று எஸ்.பி.சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக இப்போதைய ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் கொண்டம்பேட்டை என்னும் ஊரில் பிறந்தார்.
இவருடைய தந்தை எஸ்.பி.சம்பமூர்த்தி ஒரு ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள். எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.கிரிஜா இருவரும் இவரது தங்கைகள். இவர்களில் எஸ்.பி.சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை தனது இளம் வயதிலேயே வளர்த்துக் கொண்டார். தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும்பொழுது அதனை உற்றுக் கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும்.
இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அனந்தப்பூர் ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது திடீரென்று டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டதால் அந்தப் படிப்பை பாதியில் கைவிட்டார். பின்பு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.
1964-ம் ஆண்டு அமெச்சூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னையை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. முதல் பரிசு பெற்றார்.
ஆரம்பக் காலத்தில் மெல்லிசைக் குழு ஒன்றையும் நடத்தி வந்தார் எஸ்.பி.பி. இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவார்கள். இவர்களோடு சேர்ந்து எஸ்.பி.பி.இசை நிகழ்ச்சிகளையும், நாடகக் கச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
அப்போதை காலக்கட்டத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களாக இருந்த கோதண்டபாணி மற்றும் கண்டசாலா இருவரும் நடுவர்களாக இருந்த ஒரு பாட்டு போட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற எஸ்.பி.பி. அந்தப் போட்டியில் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1960-களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்போதுவரையிலும் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக இருந்திருக்கிறார்.
1966-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதியன்றுதான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது முதல் பாடலை பாடினார். எஸ்.பி.கோதண்டபாணியில் இசையில் உருவான ‘ஸ்ரீஸ்ரீஸ்ரீமரியாத ரமணா’ என்று தெலுங்கு திரைப்படத்தில் எஸ்.பி.பி. பாடிய ‘ராவே காவ்ய சுமபாலா ஜவராலா’ பாடல்தான் அவர் பாடிய முதல் பாடலாகும்.
இந்தப் பாடலை பி.சுசீலா மற்றும் பி.பி.சீனிவாஸோடு இணைந்து பாடினார் எஸ்.பி.பி. இந்தப் பாடலை பாடிய பிறகு அடுத்த 8-வது நாளிலேயே ‘நகரே அதே ஸ்வர்க’ என்ற கன்னட திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி.ஆர்.நரசிம்மராஜுவுக்காக ‘மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ’ என்ற பாடலைப் பாடினார்.
இவர் தமிழில் முதலில் பாடியது ‘ஹோட்டல் ரம்பா’ என்னும் திரைப்படத்தில். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியோடு இணைந்து ‘அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு’ ௭ன்ற பாடலைப் பாடினார்.
ஆனால், ௭திர்பாராத நிலையில் ‘ஹோட்டல் ரம்பா’ திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக ‘சாந்தி நிலையம்’ படத்தில் இடம் பெற்ற ‘இயற்கையெனும் இளைய கன்னி’ என்ற பாடலைப் பாடினார் எஸ்.பி.பி. ஆனால் அது வெளிவரும் முன்பே MGR நடித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படத்தில் எஸ்.பி.பி. பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் வெளிவந்துவிட்டது.
மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி.தேவராஜன் என்பவரால் ‘கடல் பாலம்’ என்ற திரைப்படத்தில் ‘இ கடலும் மறு கடலும்’ பாடலை பாடியதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார் எஸ்.பி.பி.
இந்திய திரை இசைவுலகத்தில் செழுமையான வாழ்க்கையை தனது மிகக் கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார் எஸ்.பி.பி.
தமிழ் திரைப்படவுலகில் 1970-களில் எம்.ஜிஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், ஏவி.எம்.ராஜன், ஜெய்கணேஷ், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன் என பல நடிகர்களுக்கு பின்னணி பாடியுள்ளார்.
அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப் பாடகிகளான பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி இவர்களோடும் பல ஜோடிப் பாடல்களை பாடியுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் 1979-ல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்களை பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். ‘சங்கராபரணம்’ தெலுங்கு திரையுலகில் இன்றளவும் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குநர் கே,விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே.விஸ்வநாத், எஸ்.பி.பி.யின் பெரியப்பா மகன் ஆவார்.
இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே.வி.மகாதேவன் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ்.பி.பி. முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்தை ‘சங்கராபரணம்’ படத்தின் பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார்.
இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது 1981-ம் ஆண்டு வெளியான ‘ஏக் தூஜே கே லியா’ என்ற இந்தி மொழி திரைப்படத்திற்காகக் கிடைத்தது. இந்தப் படத்தின் மூலம்தான் எஸ்.பி.பி. ஹிந்தித் திரையுலகத்திலும் அறிமுகமானார்.
தென்னிந்திய திரையிசையில் வெற்றிக் கூட்டணியான இளையராஜா, எஸ்.பி.பி., எஸ்.ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 1980-களின் துவக்கத்தில் இருந்து எஸ்.பி.பி. இல்லாத தமிழ்த் திரைப்படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு படத்திற்கு படம் தனது குரல் வளத்தால் தமிழ்ச் சினிமாவை வருடக் கணக்காக ஆண்டு வந்தார்.
குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகியோடு இணைந்து ஜோடிப் பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப் பாடகர்கள் மற்றும் பாடகிகளுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தமிழ் திரையிசையில் இளையராஜா, எஸ்.பி.பி., எஸ்.ஜானகி.. இம்மூன்று பேரின் வெற்றிப் பாடல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.
தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜூன் என்று துவங்கி தற்போதைய இளைய தலைமுறை நடிகர்கள் வரையிலும் நூற்றுக்கணக்கானோருக்கு பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்.பி.பி.
1983-ம் ஆண்டு வெளிவந்த ‘சாகர சங்கமம்’ என்ற தெலுங்கு திரைப்படம் கிளாசிக்கல் இசையில் அமைத்ததனால் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பி.க்கும் தேசிய விருதினைப் பெற்றுக் கொடுத்தது.
1988-ம் ஆண்டு ‘ருத்ரவீணா’ என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக மீண்டும் இவ்விருவருக்கும் தேசிய விருது கிடைத்தது. இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் எஸ்.பி.பி. பின்னணி பாடியிருக்கிறார்.
1989-ம் ஆண்டிலிருந்து எஸ்.பி.பி. பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடி வந்தார். அதிலும் எஸ்.பி.பி.யின் குரலில் ஒலித்த ‘மைனே பியார் க்யா’ மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம். இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் எஸ்.பி.பி.யே பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது ‘தில் தீவானா’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினை இவருக்கு வாங்கி கொடுத்தது.
இதேபோல் எஸ்.பி.பி. பாடி சல்மான்கான் நடித்த ‘ஹம் ஆப்கே ஹே ஹான்’ திரைப்படமும் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் லதா மங்கேஷ்காருடன் எஸ்.பி.பி. பாடிய ‘திதி தேரா தேவர் தீவானா’ பாடல் மிகவும் பிரபலமானது.
௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம் 1990-களில் அப்போதைய தமிழ் இசையமைப்பாளர்களான கங்கை அமரன், டி.ராஜேந்தர், சங்கர் கணேஷ், தேவா, சந்திரபோஸ், எஸ்.ஏ.ராஜ்குமார், பரணி, பாலபாரதி, தீனா, மரகதமணி, செளந்தர்யன், சிற்பி, தேவேந்திரன் போன்றோரின் இசையிலும் நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார்.
பின்னாளில் புயலாய் உள்ளே நுழைந்த ஏ.ஆர்.ரகுமானின் இசையிலும் எஸ்.பி.பி. பாடிய அனைத்து பாடல்களும் மறக்க முடியாதவையாக இருக்கின்றன.
ஏ.ஆர்.ரகுமானின் முதல் படமான ‘ரோஜா’ படத்தில் எஸ்.பி.பி. மூன்று பாடல்களைப் பாடியிருந்தார். ’ரோஜா’ திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ.ஆர்.ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடி வருகிறார்.
‘புதிய முகம்’ திரைப்படத்தில் ‘ஜுலை மாதம் வந்தால்’ பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும். கிழக்குச் சீமையிலே’ திரைப்படத்தில் ‘மானூத்து மந்தையிலே மாங்குட்டி’ என்ற பாடலை நாட்டுப் புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். ‘டூயட்’ படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் எஸ்.பி.பியே பாடினார்.
1996-ம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘தங்கத் தாமரை மகளே’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது எஸ்.பி.பி.க்கு கிடைத்தது. இது இவருக்கு கிடைத்த 6-வது தேசிய விருதாகும்.
2000-ம் ஆண்டிற்கு பிறகு தற்போதைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், டி.இமான், ஜி.வி.பிரகாஷ்குமார், அனிருத் ரவிச்சந்திரன், பிரேம்ஜி அமரன் போன்றோரின் இசையமைப்பில் பாடியிருக்கிறார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகா உள்ளிட்ட பல்வேறு கன்னட இசையமைப்பாளர்களின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கும் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார்.
‘பிரேமலோக’ திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார். இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. ‘கனயோகி பஞ்சக்சரி காவயி’ (1995) திரைப்படத்தில் ‘உமண்டு குமண்டு’ பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருதினைப் பெற்றிருந்தார் எஸ்.பி.பி.
சல்மான்கான்-மாதுரி தீட்சித் நடிப்பில் 1994-ம் ஆண்டு வெளியாகி இந்தியாவெங்கும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘Hum Aapke Hain Koun’ என்னும் ஹிந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற 14 பாடல்களில் 13 பாடல்களை எஸ்.பி.பி.யே பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாக்கும்.
2013-ம் ஆண்டு வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் ‘நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்’ என்ற டைட்டில் பாடலை பாடியுள்ளார். இப்பாடல் 15 வருடங்களுக்குப் பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.
எஸ்.பி.பி. நடிகர் கமல்ஹாசனுக்காக 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். கமல்ஹாசன் நடித்த தமிழ் திரைப்படமான ‘மன்மத லீலை’ தெலுங்கில் ‘மனமத லீலா’ என மொழி மாற்றம் செய்யப்பட்டது. இதுதான் அவர் கமலுக்கு டப்பிங் குரல் கொடுத்த முதல் திரைப்படமாகும். இதன் பிறகு கமல் நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட அத்தனை படங்களிலும் எஸ்.பி.பி.தான் கமலுக்குக் குரல் கொடுத்துள்ளார்.
கமல் நடித்த ‘தசாவதாரம்’ திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்துள்ளார் எஸ்.பி.பி.
கமல்ஹாசன் மட்டுமன்றி, ரஜினிகாந்த், சல்மான்கான், கே.பாக்யராஜ், மோகன், அனில் கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன், விஜயகாந்த், சரத்குமார், அர்ஜூன் , நாகேஷ், கார்த்திக், முரளி மற்றும் ரகுரவன் ஆகியோருக்கும் பல்வேறு மொழிப் படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார் எஸ்.பி.பி.
சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை ‘அன்னமயா’ மற்றும் ‘ஸ்ரீசாய் மகிமா’ என்கிற தெலுங்கு திரைப்படங்களுக்காகப் பெற்றுள்ளார் எஸ்.பி.பி. 2012-ம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ என்ற தெலுங்கு டப்பிங் படத்திற்காக நடிகர் பாலகிருஷ்ணாவுக்காக பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திர மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் எஸ்.பி.பி. இவர் மதங்களை கடந்து பக்திப் பாடல்கள் பலவற்றை பாடியுள்ளார். இதற்காக 2015-ம் ஆண்டுக்கான கேரள அரசின் ‘ஹரிவராசனம்’ விருதினைப் பெற்றுள்ளார்.
பாடகராக மட்டுமில்லாமல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு நடிகராகவும் பெரும் புகழுடன் திகழ்ந்தவர். இதுவரையிலும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சேர்த்து 70-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘கேளடி கண்மணி’, ‘சிகரம்’, ‘குணா’, ‘தலைவாசல்’, ‘பரதன்’, ‘திருடா திருடா’, ‘காதலன்’, ‘பாட்டு பாடவா’, ‘காதல் தேசம்’, ‘அவ்வை சண்முகி’, ‘உல்லாசம்’, ‘ரட்சகன்’, ‘மின்சாரக் கனவு’ போன்றவை தமிழில் இவர் நடித்திருந்த புகழ் பெற்ற திரைப்படங்களாகும். இத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மிதுனம் என்னும் தெலுங்கு படம்தான் தான் நடித்த படங்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த படம் என்று எஸ்.பி.பி. பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
‘கேளடி கண்மணி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மண்ணில் இந்தக் காதலன்றி’ என்ற பாடலை மூச்சுவிடாமல் தொடர்ச்சியாக பாடுவது போன்ற வித்தியாசமான விதத்தில் பாடியிருந்தார். இப்போதுவரையிலும் அவரது இன்னிசை கச்சேரிகளில் தவறாமல் இந்தப் பாடல் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்கள் மட்டுமில்லாமல் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ‘மின் பிம்பங்கள்’ தயாரித்த ‘ஜன்னல்’ மற்றும் பல்வேறு தமிழ், தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
இதேபோல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் 45 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார் எஸ்.பி.பி.
இதுவரையிலும் மொத்தமாக 15 மொழிகளிலும் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் எஸ்.பி.பி. ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்.
இந்தியாவில் தேசிய விருதினை நான்கு மொழிகளுக்கும் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி. ஒருவரே. ஹிந்தி ‘பிலிம்பேர்’ விருதினை ஒரு முறையும் தென்னக ‘பிலிம்பேர்’ விருதினை மூன்று முறையும் பெற்றுள்ளார்.
மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில அரசின் திரைப்பட விருதுகளையும் ஆந்திர மாநில அரசின் ‘நந்தி’ விருதினை 25 முறையும் பெற்றுள்ளார். 1981-ம் ஆண்டு தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதினையும் பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி. 2001-ம் ஆண்டில் மத்திய அரசு எஸ்.பி.பி.க்கு ‘பத்மஸ்ரீ’ விருது அளித்து கெளரவித்தது. பின்பு 2011-ம் ஆண்டில் ‘பத்மபூஷன்’ விருதும் எஸ்.பி.பி.க்கு வழங்கப்பட்டது.
எஸ்.பி.பி. எந்த பாடகரும் செய்யாத சில சாதனைகளையும் இந்திய திரையிசை உலகத்தில் செய்திருக்கிறார்.
1981-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணிவரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார்.
மேலும் தமிழ் மொழியில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தி மொழியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.
இந்தியர்கள் இருக்கும் அனைத்து நாடுகளிலும் பல முறை இன்னிசை கச்சேரிகளை நடத்தி வந்திருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் போகாத நாடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கடந்த சில ஆண்டுகளில் பல முறை பல நாடுகளில் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார்.
1980-களில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை என்று தினமும் ஏதாவது ஒரு ஊருக்கு விமானத்தில் பறந்து கொண்டேயிருந்திருக்கிறார் எஸ்.பி.பி. இவர் பாட முடியாமல் போன காரணத்தினால் இவருக்குப் பிறகு பாட வந்த ஜெயச்சந்திரன், மனோ போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து அவர்களும் தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பெயரைப் பெற்றார்கள்.
இந்த 54 வருட கால தென்னகத் திரையுலகத்தில் தனது கடுமையான உழைப்பினைக் கொட்டி பெயரையும், புகழையும் அள்ளிச் சென்றிருக்கும் எஸ்.பி.பி.யின் நினைவுகள் தென்னக சினிமா ரசிகர்களைவிட்டு என்றென்றைக்கும் நீங்காது..!