full screen background image

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..!

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் :

“இசையுலக ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவின் மூலம், இந்திய இசை தனது இனிமையான குரல்களில் ஒன்றை இழந்துவிட்டது. ‘பாடும் நிலா’ என்று தனது எண்ணற்ற ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவர், பத்ம பூஷண் விருது மற்றும் பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு :

“எஸ்.பி.பி.க்கு இசை மீது இருந்த எல்லையற்ற ஆர்வம், மொழிகள் மீதான அவரது காதல் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் அழிக்க முடியாத முத்திரையை பதித்துவிட்டது. எத்தனையோ இளம் திறமையாளர்களுக்கு அவர் உந்து சக்தியாக திகழ்ந்தார். அவரும், நானும் நெல்லூரை சேர்ந்தவர்கள். அதனால், அவரது மறைவு, எனக்கு தனிப்பட்ட இழப்பு ஆகும். நெல்லூர் தனது மைந்தனை இழந்து விட்டது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.”

பிரதமர் நரேந்திரமோடி :

“எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் துரதிருஷ்டவசமான மறைவு, நமது கலாச்சார உலகத்துக்கு பேரிழப்பாகும். அவர் நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களிலும் ஒருவராக திகழ்ந்தவர். அவரது இனிமையான குரல், 50 ஆண்டுகளாக மக்களை வசீகரித்தது. அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் இந்த துயரமான நேரத்தில் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்…”

திருமதி சோனியா காந்தி :

“கொரோனா வைரஸுடன் தைரியத்துடன் போராடிய எஸ்.பி.பி.யின் மறைவு செய்தி கேட்டு வேதனையடைந்தேன். இந்தியாவின் உயர்ந்த இசை மற்றும் மொழியியல் கலாசாரத்தின் பிரகாசமான அடையாளமாக திகழ்ந்தவர் அவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உணர்வுப்பூர்வமான பாடல்களைப் பாடியவர். லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு தனது குரலால் மகிழ்ச்சியையும், ஆறுதலையும் வழங்கியவர். அவரது மறைவால் கலை மற்றும் கலாசார உலகம் இருண்டுவிட்டது. ‘பாடும் நிலா’ என்றழைக்கப்பட்ட அந்த நிலவின் பிரகாசம் எப்போதும் நம்மிடம் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.”

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி :

“எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பாடல்கள், பல மொழிகளில் லட்சக்கணக்கான இதயங்களை தொட்டது. அவரது குரல் என்றும் வாழும்…”

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் :

“இந்திய இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தன்னுடைய வாழ்நாட்களை இசை மற்றும் பின்னணி இசைக்காக செலவிட்ட நல்ல மனிதர். நாம் அனைவரும் அவருடைய விசித்திரமான தங்க குரலை இழந்துவிட்டோம். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.”

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி :

“உண்மையான இசை ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுச் செய்தி கேட்டு துயரடைந்தேன். அவரது குரல், பல தலைமுறைகளுக்கு நினைவில் நிற்கும்.”

ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி :

“எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தனது பன்முக திறமையால், 50 ஆண்டுகளுக்கு மேலாக சாதாரண மக்களை வசீகரித்தவர். அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.”

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் :

“திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு என்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. அவரது மறைவு இந்திய இசைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கேரள மக்கள் அவரை தங்களில் ஒருவராகவே கருதினார்கள்..”

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் :

“திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைக் காப்பாற்ற டாக்டர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது துரதிருஷ்டவசமானது. அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது..”

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு :

“எஸ்.பி.பி. மறைவால் திரையுலகின் ஒரு வியத்தகு சகாப்தம் முடிந்து விட்டது.”

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி :

“தமிழ்நாட்டு மக்களை தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், ‘எஸ்.பி.பி.’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

இந்திய இசை உலகத்திற்கு 20-ம் நூற்றாண்டில், இறைவன் அளித்த இனிய கொடையாக வந்து உதித்தவர் மறைந்த எஸ்.பி.பி. ‘ஆயிரம் நிலவே வா’ என்ற புகழ் வாய்ந்த பாடலை அவர்தான் பாட வேண்டும் என்று காத்து இருந்து வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம் பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பி.

அவரது குரலில் நேற்றும், இன்றும், நாளையும் ஒலிக்கும் ‘தங்கத் தாரகையே வருக வருக, தமிழ் மண்ணின் தேவதையே வருக வருக’ என்ற ஜெயலலிதாவின் புகழ் பாடும் பாடல், அ.தி.மு.க.வின் வரலாற்றில் என்றும் இணைந்திருக்கும்.

எஸ்.பி.பி. கடவுள் மீது பக்தி கொண்டு ‘கந்த சஷ்டி கவசம்’ மற்றும் ‘ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில்’, போன்ற பல பாடல்களை உள்ளம் உருக பாடி, பக்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.

குரல் இனிமைக்கு நிகர் அவரே. இவர் மிக அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்து, புகழின் உச்சிக்கே சென்றவர். இவர் பாடகர், நடிகர், பின்னணி குரல், இசையமைப்பாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர்.

கலைமாமணி விருது, தேசிய விருது, பல மாநில விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளுக்கு எஸ்.பி.பி. சொந்தக்காரர். மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்தது. எஸ்.பி.பி மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும்.

இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே அவரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.

தனது ஈடு இணையற்ற குரல் வல்லமையால் தமிழ் திரைப்பட உலகுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த எஸ்.பி.பி. மறைவு திரைப்படத் துறைக்கும், கலை உலகுக்கும், எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரை உலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்…”

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் :

“பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ‘ஆயிரம் நிலவே வா’ என்று, அமுதக் குரலால் தமிழ் மக்களின் அகத்தில் நுழைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை ஆட்சி நடத்தி, இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம், நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம்.

கரோனா கொடுங்காலம் நம்மிடமிருந்து அந்த அற்புத இசைக் கலைஞனைப் பிரித்துவிட்டது. பரபரப்பான இந்த உலகில், இயந்திரம் போல் மாறிவிட்ட மக்களின் மன அழுத்தத்திற்கு இயற்கையான மாமருந்தாக வாய்த்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!

அவருடைய மறைவு, இசை உலகுக்குப் பேரிழப்பாகும். நான் உட்பட அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களின் சொந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே இதனைக் கருதுகிறோம்.

16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக் குரல் கொடுத்தும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். கருணாநிதியின் அன்புக்குரியவர்.

இனிய பாடகர் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும், திமுகவின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காலம் அவரைப் பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல். என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார், இறவாப் புகழ் கொண்ட பாடகர் எஸ்.பி.பி…”

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் :

“திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. எஸ்.பி.பி. அவர்கள் மறைந்தாலும் அவரது கானக் குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே  இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.”

காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் :

“இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகினர் மட்டுமல்லாது அனைத்து மக்களுக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.

திரையிசைக்கு அப்பாற்பட்டு ஆன்மிகத்திலும் பற்று கொண்டவராக விளங்கினார். பல பக்தி பாடல்களை பாடி மக்களிடையே பக்தி மணம் பரப்பியவர்.

காஞ்சி சங்கர மடத்தின் மீதும் சங்கராச்சாரியார்கள் மீதும் ஆழ்ந்த பக்தியும், மிகுந்த மரியாதையும் கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் நெல்லூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டை மடத்திற்கு வேத நாத பாடசாலை தொடங்குவதற்கு தானமாக கொடுத்து, அவருடைய பக்தியை வெளிப்படுத்தினார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைக்க வேண்டி மகாத்ரிபுரசுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வர சாமியை பிரார்த்திக்கிறோம்.”

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் :

“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் இசையைக் கேட்பது எப்போதும் எனக்கு பிடிக்கும். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தம். ‘சாகர்’ திரைப்படத்தில் இடம் பெற்ற அவருடைய ‘சச் மேரே யார் ஹை’ பாடல் எனது பிளேலிஸ்ட்டில் நான் எப்போதும் வைத்திருக்கும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்…”

Our Score