‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகரும், நடிகரும், இசையமைப்பாளருமான திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் நுரையீரல் தொற்று நோய் காரணமாக இன்று மதியம் 1.04 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதியன்று சிறிய அளவுக்கான கொரோனா நோய் அறிகுறிகள் இருந்ததால் அமைந்தகரையில் இருக்கும் எம்.ஜி.எம். ஸ்பெஷலாட்டி என்னும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் எஸ்.பி.பி. கொரோனாவுக்கான சிகிச்சையினால் அந்த நோயிடமிருந்து விடுபட்ட எஸ்.பி.பி. திடீரென்று நுரையீல் தொற்ற நோயினால் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். கடந்த 52 நாட்களாக வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சையினால் சுவாசித்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் மரணமடைந்தார்.

அவருடைய மனைவி சாவித்திரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்தார். எஸ்.பி.பி.க்கு எஸ்.பி.பி.சரண் என்னும் மகனும், பல்லவி என்னும் மகளும் உள்ளனர். எஸ்.பி.பி.சரண் தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் இருக்கிறார். எஸ்.பி.பி.யின் உடன் பிறந்த தங்கையான திருமதி எஸ்.பி.ஷைலஜா மிகப் பிரபலமான பாடகியாவார்.

எஸ்.பி.பி.யின் உடல் இன்று மாலை சென்னையில் நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் இருக்கும் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டவுள்ளது.

நாளை Redhills பகுதியில் இருக்கும் எஸ்.பி.பி.யின் சொந்த பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.