full screen background image

சவுகார்பேட்டை – சினிமா விமர்சனம்

சவுகார்பேட்டை – சினிமா விமர்சனம்

பேய்ப் படங்களெல்லாம் வரிசையாக ஜெயித்து வருகிறதே.. அதிலும் ஒரு கை பார்ப்போமே என்கிற ஷாலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஆசைக்கு உரம் போட்டு விளைச்சலை காட்டியிருக்கிறார் இயக்குநர் வடிவுடையான்.

‘சாட்டை’, ‘கயல்’ போன்ற படங்களை தயாரித்த ஷலோம் ஸ்டூடியோஸுக்கு இந்தத் தயாரிப்பு நிச்சயம் ஒரு புதிய அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.

வெற்றி, சக்தி என்ற இரண்டு கேரக்டர்களில் அண்ணன், தம்பியாக நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். இதில் வெற்றியின் சிறு வயது முதலே காதலியாக இருப்பவர் லட்சுமி ராய். நெருங்கிய குடும்ப நண்பரின் மகள் என்பதால் இவர்களது காதல் பள்ளியில் துவங்கி கல்லூரியில் முடிந்து இப்போது கோயிங் ஸ்ட்டி அளவுக்கு நீடித்திருக்கிறது.

இந்த நேரத்தில் வெற்றியின் அப்பாவான தலைவாசல் விஜய் வீடு கட்டுவதற்காக கடன் தொகை 2 கோடியைத் தொட்டுவிட்டதால் அந்தப் பணத்தைக் கேட்டு கோத்ரா சேட்டுவான சுமன் தொல்லை தருகிறார். வீட்டுக்கு அடியாட்களுடன் வந்து மிரட்டுகிறார். “கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம்…” என்று தலைவாசல் விஜய் சொல்ல.. அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் ஸ்ரீகாந்த்-லட்சுமி ராயின் திருமணத்திற்கு புடவையெடுக்க போன இடத்தில் அவர்களை லாரியை வைத்து விபத்து என்ற வடிவத்தில் கொலை செய்கிறார் சுமன்.

பின்பு வீட்டுக்கே வந்து காதல் களியாட்டம் முடிந்து சந்தோஷத்தில் இருந்த காதலர்களான ஸ்ரீகாந்தையும், லட்சுமி ராயையும் படுகொலை செய்து அதே வீட்டிலேயே புதைக்கிறார் சுமன். தங்களுடைய நிறைவேறாத ஆசையுடன் நிராதரவாக்கப்பட்டதால் ஆத்மா சாந்தியாகாமல் கோப வெறியுடன் இருக்கும் ஸ்ரீகாந்தும், லட்சுமி ராயும், கோத்ரா சேட்டை ஆவி வடிவத்தில் பழி வாங்கத் துடிக்கிறார்கள்.

மகனை இழந்த துயரத்தை சுமனும் பட வேண்டும் என்பதற்காகவே சுமனின் இரு மகன்களை காலி செய்கிறது இந்த ஆவி கூட்டணி. இந்த காதல் ஆவிகளை அடக்க மாந்தரீகம், தாந்தரீகம் அனைத்தையும் செய்கிறார் சுமன். ஆனால் அதனையும் தாண்டி ஆவிகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் போகிறது. கடைசியில் நிலைமை என்ன என்பதுதான் திரைக்கதை.

இந்த இயக்குநரின் முதல் படமான ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்திற்கு நேரெதிர் படம் இது. ஆனாலும் பரபர திரைக்கதையாக்கமும், காத்திரமான இயக்கமும் அப்படியேதான் இந்தப் படத்திலும் கிடைத்திருக்கிறது.

சமீபத்தில் பார்த்த படங்களிலேயே இந்தப் படத்தில்தான் அதிகமான குளோஸப் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. நடிகர், நடிகைகளை விரட்டி, விரட்டி வேலை வாங்கியிருக்கிறார் என்பது பிரேம் பை பிரேம் தெரிகிறது.

அதிலும் லட்சுமி ராய் அதிமாக நடித்திருக்கும் படம் இதுவாகத்தான் இருக்கும். காட்சிகளின் உண்மைத்தன்மைக்காக குழிக்குள் சடலங்களாக படுத்திருக்கும் காட்சிவரையிலும் விடாமல் படமெடுத்திருக்கும் இயக்குநருக்கு ஒரு பாராட்டுக்கள். நடித்த ஸ்ரீகாந்த், லட்சுமிராய்க்கும் நமது பாராட்டுக்கள்.

ஸ்ரீகாந்த், லட்சுமி ராய் இருவருமே மிக விரைவிலேயே பேயாக்கப்பட்டுவிட்டு அதன் பின் ருத்ர தாண்டவம் ஆடுவதால் நடிப்பைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆனால் துவக்கக் காட்சியில் ஒவ்வொரு புதுப் பொண்ணும் எப்படி புதிய கணவரை எதிர்கொள்வார் என்பதை சின்னச் சின்ன ஷாட்டுகளில் லட்சுமி ராய் சொல்லிக் கொடுக்கும் காட்சியில் சொக்க வைத்திருக்கிறார்.   

காட்சிக்கு காட்சி பயப்படுதலே ஒரு முக்கிய விஷயமாக இருப்பதால் கோத்ரா சேட்டாக நடித்திருக்கும் சுமனுக்கும் பாவமான காட்சிகள்தான் அதிகம். இவருக்கு அல்லக்கைகளாக வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, சரவணன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவைகள் போரடித்தவை என்றாலும் இடைவேளைக்கு பின்பு கொஞ்சம் படத்தை கவனிக்க வைத்தவர்கள் இவர்கள்தான் என்பதுதான் உண்மை.

பேய்ப் படங்களில் முக்கியமான தேவை திகிலும், சஸ்பென்ஸும்தான். அந்த சஸ்பென்ஸை படத்தின் துவக்கத்திலேயே பட்டவர்த்தனமாக உடைத்துவிட்டார் இயக்குநர். பின்பு எப்படி படத்தில் திகிலும், சஸ்பென்ஸும் கிடைக்கும்..? ஆவிகள் எப்படி பழி வாங்குகின்றன என்பதையாவது புதுமையாக சிந்தித்து நல்லவிதமாக கொடுத்திருக்கலாம். ஆனால் காதைக் கிழிக்கும் இசையை வைத்தும், பேய்களுக்கான விதம்விதமான மேக்கப்பை போட்டும் படத்தை பேய்ப் படமாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அது நமக்கு போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை.

ஜான் பீட்டரின் இசையில் காட்சிக்கு காட்சி டிரம்ஸ் கிழிய கிழிய.. பாதி படம் முடிவதற்குள் ரசிகர்கள் டயர்டாகிவிடுகிறார்கள். இதனாலேயே படத்தின் மீதான லயிப்பு தன்மை குறைந்து போய்விட்டது.. படத்தின் பிற்பாதியில் திடீரென்று அமைதியான முறையில் தன்னுடைய அண்ணன் சக்தியின் கதையை வெற்றி ஸ்ரீகாந்த் சொல்லும்போது ஏற்படும் அந்த சில நிமிட பிளாஷ்பேக் காட்சிகள் மட்டுமே படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கிறது.

இன்னொரு பாராட்டு நடிகை வடிவுக்கரசிக்கு. அவருடைய கதாபாத்திரம், மேக்கப், கேரக்டர் ஸ்கெட்ச் என்று மூன்றுமே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. அவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி திரைக்கதைக்குள் கொண்டு வந்திருக்கலாம். கிளைமாக்ஸில் வந்து ஸ்ரீகாந்துக்கு உதவி செய்துவிட்டு அம்போவென போகிறார் அவர்.

கோத்ரா சேட்டுவின் அட்டகாசம் என்று பேச்சுக்கு பேச்சு சேட்டுக்களின் வட்டி தொழிலை கிழித்து தோரணம் கட்டியிருக்கிறார் இயக்குநர் வடிவுடையான். ஏற்கெனவே ஒரு சேட்டு திரையுலகில் பலரிடமும் இதேபோல் அநியாய வட்டி மேல் வட்டி போட்டு பல தயாரிப்பாளர்களை கதற வைத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.. தைரியமாக இதனை கதையில் கொண்டு வந்திருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்..

படம் கமர்ஷியல் என்பதையும் தாண்டி பேய்ப் படம் என்பதை நினைவில் வைத்தாவது இன்னும் அதிகமாக வித்தியாசமாகவும், பயமுறுத்தலாகவும் எடுத்திருக்கலாம்.. இயக்குநரிடம் அடுத்த பேய்ப் படத்தில்  இதனை முழுமையாக எதிர்பார்க்கிறோம்..!

Our Score