full screen background image

நடிகர் சங்கமும், கட்டிடமும், கடன் தொகையும் வளர்ந்த கதை..!

நடிகர் சங்கமும், கட்டிடமும், கடன் தொகையும் வளர்ந்த கதை..!

1930 மற்றும் 1940-ம் வருடங்களில் புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பாளராகவும் இயக்குநருமாக திகழ்ந்தவர் திரு.கே.சுப்பிரமணியம். இவர், 1950-ம் ஆண்டு ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை’ என்ற அமைப்பினை சில திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். இதுதான் நடிகர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்கிற உணர்வு எழுந்ததன் முதல் விதை.

இந்த அமைப்பை பின் தொடர்ந்து, நடிகர்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு, நடிகர்களான டி.என்.சிவதாணு, மற்றும் ஆர்.எம்.சோமசுந்தரம் போன்றவர்களால் 1952-ம் ஆண்டு ‘தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பைப் பற்றியும் அதன் உயர்ந்த குறிக்கோளையும் பற்றி, அப்போது முன்னணி கதாநாயகனாக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொல்லப்ப்பட்டது. அப்போது அவரிடம் இருந்து வந்த உடனடி கேள்வி அமைப்பின் செயலாளர்களை திகைப்படைய செய்தது. அவர் கேட்ட கேள்வி, ‘நானும் இந்த அமைப்பில் உறுப்பினர் ஆகலாமா..?’ என்பதுதான். அந்த மாபெரும் மனிதர் கேட்ட ஒரு கேள்வியின் விளைவில்தான் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்ற மாபெரும் அமைப்பு உருவானது.

இன்றுவரை இந்த அமைப்பு இசை நாடக நடிகர்கள், சமூக நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள் என அனைத்து வகை கலைஞர்களையும் உள்ளடக்கி அவர்கள் வாழ்க்கை மேம்பட சிறப்புடன் செயல்படுகிறது.

எம்.ஜி.ஆர்., தான் உறுப்பினராக ஆனதோடு மட்டுமல்லாமல், 1952-ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம், சங்கங்களுக்கான சட்டத்திற்கு உட்பட்டு, பதிவு செய்யப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்து உதவினார். எம்.ஜி.ஆரின். உதவியால் 1952-ம் ஆண்டு நவம்பர் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கம் ‘South Indian Artistes’ Association’ என்ற பெயரில் பதிவு துறையில் பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு தொடங்கப்பட்ட ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ சுருக்கமாக, நடிகர் சங்கத்தின் அலுவல்களை கவனிக்க இடம் இல்லாத சூழ்நிலை. இப்போது லாயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அலுவலகம் அன்று எம்.ஜி.ஆரின் இல்லமாக இருந்தது. அந்த இல்லத்திலேயே ஒரு பகுதியை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகளை மேற்கொள்ள, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பெரும் மனதுடன் ஒதுக்கி தந்தார் எம்.ஜி.ஆர்.

1952 முதல் 1954 வரை சங்கப் பணிகள் லாயிட்ஸ் ரோடு எம்.ஜி.ஆரின் இல்லத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன. அப்போது தென்னகத் திரைவானில் கொடிகட்டி பறந்த அனேக கலைஞர்கள் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக ஆனார்கள்.

சங்கத்தின் பணிகள் மேலும் சிறக்க நிரந்தர இடம் தேவை என்பதை உறுப்பினர்கள் உணர்ந்து, இடம் தேட ஆரம்பித்தனர். ஜெமினி மேம்பாலம் அருகில் இருந்த ‘சன் தியேட்டர்ஸ்’ இடமும், தற்போது உள்ள ஹபிபுல்லா சாலை இடமும் பரிசீலிக்கப்பட்டது. ஜெமினி மேம்பாலமும் அருகிருந்த பிரதான சாலையும் பின்னாளில் விரிவுபடுத்தப்படும்போது, சங்க கட்டிடத்திற்கு சிரமம் வரலாம் எனக் கருதி, ஹபிபுல்லா சாலையில் உள்ள இடத்தை வாங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஹபிபுல்லா சாலையில் இருந்த அந்த இடத்தில் இருந்து பிரகாசம் சாலை வரையிலுமான மொத்த காலி இடத்தையும் வாங்குவதற்காக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஏற்கெனவே விற்பனையாளருடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

அந்த நேரத்தில் நடிகர் சங்கத்திற்கு இந்த இடம் தேவைப்பட்டுவதை அறிந்த கலைவாணர் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு நிலத்தைவிட்டுக் கொடுக்க முன் வந்தார். மொத்த நிலமான 40 கிரவுண்ட்டையும் விலைக்கு வாங்க பணம் அதிகம் தேவைப்பட்டதால் 20 கிரவுண்ட் நிலமே நடிகர் சங்கத்திற்கு போதும் என்று முடிவெடுத்தார்கள் அப்போதைய சங்க நிர்வாகிகள். அப்படித்தான் இந்த நிலம் நடிகர் சங்கத்தின் கைகளுக்கு வந்துள்ளது.

சுமார் 20 கிரவுண்டுகளை உள்ளடக்கிய இந்த இடம் பதிவு கட்டணம் உட்பட அப்போதைய மதிப்பில் ரூபாய் 75,000-க்கு வாங்கப்பட்டது. இந்த இடத்தை வாங்குவதற்காக 35,000 ரூபாய் அனேக கலைஞர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டது. மேலும் தேவையாயிருந்த 40,000 ரூபாயை எம்.ஜி.ஆர். தான் அடுத்தடுத்து நடிக்கும் மூன்று திரைப்படங்களின் சம்பளத்தை ‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ நிறுவனத்திடம் இருந்து பெற்று, நெருக்கடியான அந்தச் சூழ்நிலையில் நடிகர் சங்கத்துக்கு கொடுத்து இடத்தை வாங்க பெரிதும் உதவினார்.

இப்படி ஒரு தனி மனிதனின் தியாகத்தையும் ஏனைய பல முன்னணி நடிகர்களின் உழைப்பையும் தாங்கித்தான் இந்த மாபெரும் சங்கம் வளர்ந்துள்ளது. 

எம்.ஜி.ஆர். தவிர, சிவாஜி, எஸ்.எஸ்.வாசன், சின்னப்பா தேவர், ஏவி.எம்.செட்டியார் போன்றோர் சேர்ந்து பணம் போட்டு கட்டிடம் கட்ட முனைந்தார்கள். கட்டிடம் கட்டுவதாக முடிவு செய்து வாசன் அவர்கள் அடிக்கல்லும் நாட்டினார். ஆனாலும் ஒரு கட்டிடம் கட்டும் அளவுக்கு நிதி சேரவில்லை.

1971 – 1985

1971-வரை தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு கொட்டகையில் மட்டுமே செயல்பட்டு இருந்தது. அங்கே சின்னதாக ஒரு அலுவலகமும் செயல்பட்டு வந்திருக்கிறது.

1971-ல் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ பட்டம் பெற்றதற்காக பாராட்டு விழாவை நடிகர் சங்கத்தினர் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும்போது, “சங்கத்திற்கென்றே ஒரு  கட்டிடம் கட்டப்பட வேண்டும், என்று கூடியிருந்த நடிகர் சங்க உறுப்பினர்களிடத்தில் கேட்டுக் கொண்டார்.

Nadigar-Sangam-1

1977-ல் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோது அவரது ஆலோசனையின் பேரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சிவாஜிகணேசனும், மேஜர் சுந்தர்ராஜன் பொதுச் செயலாளராகவும், வி.கே.ராமசாமி பொருளாளராகவும், பொறுப்பேற்றார்கள்.

1978-ல் எம்.ஜி.ஆரையும் கலந்தாலோசித்துவிட்டு, சங்க கட்டிடம் கட்ட பாரத ஸ்டேட் வங்கியில் 22 லட்சம் ரூபாயை கடனாக பெற்றார்கள். அந்தக் கடன் தொகையில்தான் இப்போது இடிக்கப்படும் முன்புவரையிலும் இருந்த கட்டிடத்தை கட்டினர். 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, இந்தக் கட்டிடத்தை அவரே திறந்து வைத்தார்.

வங்கியில் கடன் வாங்கும்போது, வங்கிக் கடனை அடைக்க மாதா மாதம் ரூ 8000/-மும், வருடத்திற்கு ஒரு முறை ஸ்டார் நைட் நிகழ்ச்சி நடத்தி ரூ 1,00,000/- கொடுப்பதாகவும் எழுத்து மூலமாக வங்கிக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சங்கத்தில் சரியான வருமானம் இல்லாத காரணத்தால் சங்கக் கடனை அடைக்க முடியாமல், நாளுக்கு நாள் வட்டியும், அசலும் அதிகமானது.

1979-ல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க நிதி கோரப்பட்டது. அரசின் ஒத்துழைப்புடன் கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் ஸ்டார் நைட் நிகழ்ச்சியை தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தியது.  இதில் வசூலான தொகையில் இருந்து 5 லட்சம் ரூபாய் நிதியை எம்.ஜி.ஆர். சங்கத்திற்கு வழங்கினார்.

இருப்பினும் கடனை அடைக்க முடியவில்லை. 1400 பேர் அமரக் கூடிய அரங்கம், பிரிவியு தியேட்டர் இருந்தும் வங்கிக் கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கான வருமானம் வரவில்லை. இதனால் அசலுடன் வட்டி நாளுக்கு நாள் அதிகம் ஆகியது.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் சிவாஜி தலைமையிலான நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர ராஜினாமா செய்தனர். இவர்களுக்குப் பின்னர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தலைமை பொறுப்புக்கு வந்தார். நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்து, அதில் நடிகர் சங்க நிலத்தின் மீது நடிகர் சங்கத்திற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்பதைக் கண்டுபிடித்து, சிவாஜி கணேசன் அவர்களிடம் அதை தெரிவித்து, அந்த தான பத்திரத்தை பொதுக்குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து, நிலத்தை மீட்டார்.

1986 – 2000

1986-ல் ராதாரவி அவர்கள் தலைவராகப் பதவியேற்ற பின்பு, வங்கி கடனை அடைக்க பல முயற்சிகள் செய்தார். இருப்பினும் 1988-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ஸ்டேட் வங்கி, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் 9 பேர், மேலும் அப்போதைய நடிகர் சங்க தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் மீது 53,07,499.70 ரூபாய் கடனைத் திருப்பிக் கட்டவில்லை என்பதால் நடிகர் சங்க நிலத்தை ஜப்தி செய்து ஏலத்தில் விடவேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

கரண்ட் பில் கட்டவே பணம் இல்லாத நிலைதான் அப்போது சங்கத்தில் நிலவியிருக்கிறது. அப்போது வங்கியிடம், “நீங்கள் நிலத்தின் பெயரில் கடன் கொடுக்கவில்லை. கட்டடம் கட்டத்தான் கடன் கொடுத்துள்ளீர்கள்…” என்று கூறி அந்த இடம் ஏலத்திற்கு போகும் முயற்சியை முறியடித்துள்ளார் ராதாரவி. இருப்பினும் கடன் தொகை மட்டும் வளர்த்தது.

22.12.94-ல் நடிகர், நடிகைகளை வைத்து ஸ்டார் நைட் நடத்தி கடனை அடைக்க முயற்சி செய்தார் ராதாரவி. முடியவில்லை. 1985-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவையில் ஒரு இடத்தில் மட்டும் தானே தலைமை தாங்கி அந்த ஸ்டார் நைட் நிகழ்ச்சியை நடத்த முதலமைச்சர் ஜெயலலிதாவே சம்மதம் அளித்தார். அந்த ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் கிடைத்த பணமும் போதாத நிலையில், கடன் தொகை எகிறியது.

நடிகர் சங்கத்தின் கடன் தொகை சுமார் 1 கோடியே 55 லட்சம் ரூபாயாக இருந்தபோது  இந்தக் கடனை தள்ளுபடி செய்யும்படி பிரதமர் நரசிம்மராவிடம் 15.03.95 அன்று நடிகர் சங்கத் தலைவரான ராதாரவி நேரில் சென்றும் முறையிட்டுள்ளார்.

இப்படி எந்த வகையிலும் கடனை அடைக்க முடியாத சூழ்நிலை இருந்தபோதுதான் விஜயகாந்த்தை நடிகர் சங்கத்திற்கு புதிய தலைவராகவும்,  சரத்குமாரை பொதுச் செயலாளராகவும் தேர்வாகும்படி ராதாரவி கேட்டுக் கொண்டு அவர்களை சங்கத்திற்கு அழைத்து வந்தார்.

கடன் தீர்ப்பாயத்தில் நடிகர் சங்கத்திற்கெதிராக ரூ.4,53,00,000/- கடன் வழக்கு இருந்த நிலையில் 2000-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதியன்று விஜயகாந்தும், சரத்குமாரும் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்களாக பதவியேற்றனர். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ராதாரவி அப்போது செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

2001 – 2015

இப்போது நடிகர் சங்கத்துக்கு 4.74 கோடி ரூபாய் கடன் இருந்தது. இந்தக் கடன் தொகையைக் குறைக்கக் கூறி சரத்குமார் பெரும் முயற்சி எடுத்து, கடன் தொகையை 1 கோடியே 25 லட்சத்திற்கு குறைக்க வங்கியை ஒத்துக் கொள்ள வைத்தார்.

ஆனால் வங்கியோ அதில் 55 லட்சம் ரூபாயை உடனேயே கட்ட வேண்டும் என்றது. அப்போது விஜயகாந்த் 10 லட்சம், சரத்குமார் 5 லட்சம், அஜித்குமார் ஏழரை லட்சம் என்று பல நடிகர், நடிகையரிடமும் பணம் வசூல் செய்து அந்த 55 லட்சத்தை திரட்டி வங்கியில் கட்டினார்கள்.

மீதமிருக்கும் 75 லட்சம் ரூபாய் தொகைக்காக கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி மலேசியாவில் 21.12.2007 அன்றும், சிங்கப்பூரில் 23.12.2007 அன்றும் இந்த விழாக்கள் நடத்தப்பட்டன. இந்த விழாக்களை சன் டி.வி. நிறுவனத்தின் மூலமாக ராடான் மீடியா ஒர்க்ஸ் இணைந்து நடத்தியது.

இந்தக் கலை விழாவிற்கு சன் டி.வி. நிறுவனத்திடமிருந்து ரூ 2,50,00,000/- (ரூபாய் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய்) ஒப்பந்தப்படி பெறப்பட்டது.

ஒப்பந்தப்படி நடன அமைப்பாளர்கள், நடன கலைஞர்கள், ஒப்பனை கலைஞர்கள், உடையலங்கார நிபுணர்கள், சிகையலங்கார நிபுணர்கள், ஒத்திகை, உள்ளூர் போக்குவரத்து செலவுகள், ஒலிப்பதிவு செலவுகள், இதர செலவுகள் ஆகியவை செய்யப்பட்டு, மீதி உள்ள தொகையில் ரூ 2,03,00,000/- வைப்பு நிதியாக வைக்கப்பட்டது.

அதற்கு முந்தைய ஆண்டு அறிக்கையின்படி உள்ள வைப்பு நிதி ரூ 1,11,25,000/-மும் இந்தக் கலை நிகழ்ச்சி மூலம் கிடைத்த வருவாயான ரூ 2,03,00,000/-மும், மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதி மூலம் வந்த நிதியான ரூ 5,00,000/-மும் ஆக மொத்தம் 3,19,25,000/-ம் கனரா வங்கியிலும், IOB வங்கியிலும் வைப்பு நிதியாக போடப்பட்டது.

இந்தத் தொகையில் இருந்துதான் 75 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டு அதன் மூலம் நடிகர் சங்கத்தின் வங்கிக் கடன் முழுமையாக அடைக்கப்பட்டு… சங்க நிலத்தின் தாய் பத்திரம், பத்திரமாக மீட்கப்பட்டது.

கட்டிடம் இடிக்கப்பட்ட கதை :

25-07-2010 அன்று நடந்த பொதுக்குழுவில் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் வழங்கினார்கள்.

24-09-2010 – அன்று நடந்த செயற்குழுவில் ஸ்பை சினிமாஸுடனான ஒப்பந்தம் பற்றி உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

25-10-2010 – அன்று ஸ்பை சினிமாஸுடனான ஒப்பந்தம் கையெழுத்தானது.

30-11-2010 – அன்று நடந்த செயற்குழுவில் ஒப்பந்தம் கையெழுத்தானது தெரிவிக்கப்பட்டு, இதற்கு ஒப்புதல் பெற வேண்டி சிறப்பு பொதுக் குழுவைக் கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

29-12-2010 – அன்று சிறப்பு பொதுக்குழு கூடி இந்த ஒப்பந்தம் பற்றி உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பொதுக்குழுவிலேயே கட்டிடத்தை கட்டும் பணியை ஆரம்பிக்கலாம் என்று நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

19-01-2011 – அன்று ஸ்பை சினிமாஸூடனான ஒப்பந்தம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது.

ஸ்பை சினிமாஸுடனான ஒப்பந்தப்படி 29 ஆண்டுகளுக்கு பின்பு வட்டியுடன் திரும்பப் பெற முடிந்த பணமாக ரூபாய் 1 கோடியே 48 லட்சம் ரூபாய் முன் வைப்புத் தொகையாக ஸ்பை சினிமாஸுக்கு வழங்கப்பட்டது.

22-02-2011-ம் தேதியன்று முறைப்படி சென்னை மாநகராட்சியில் அனுமதி பெறப்பட்டது. கட்டிடத்தை இடிக்க சென்னை மாநகராட்சிக்கு 10,42,130 ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட்டது.

2011 ஆகஸ்ட் மாதம், நடிகர் சங்கக் கட்டிடம் முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

2008-ம் ஆண்டு கடன் தொகை அடைக்கப்பட்ட பிறகு சங்கத்தின் நிதியாக 2 கோடியே 44 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இருந்திருக்க வேண்டும். இதில் இருந்து 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் நடிகர் சங்கத்தின் பெயரில் தற்போதைய நடிகர் சங்க நிலத்திற்கு எதிரேயிருக்கும் பிளாட்டில் வீடு ஒன்று வாங்கப்பட்டது. இதன் பிறகு 1 கோடியே 34 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம்.

இப்போது பாண்டவர் அணி ஜெயித்த பின்பு அவர்கள் நடத்திய பிரஸ் மீட்டில் சங்கத்தின் வங்கிக் கணக்கில் 21 லட்சத்து 37 ஆயிரத்து 17 ரூபாயும், 84 காசுகளும் இருப்பதாகவும், நிரந்தர வைப்புத் தொகையாக 87 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Our Score