பத்து நிமிடங்களுக்கொரு முறை பயமுறுத்தப் போகும் ‘கரையோரம்’ திரைப்படம்..!

பத்து நிமிடங்களுக்கொரு முறை பயமுறுத்தப் போகும் ‘கரையோரம்’ திரைப்படம்..!

ஆர்.ஜே.கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் எல்.ஆனந்த், மற்றும் ஜெ.ராமலிங்கையா இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம் ‘கரையோரம்’.

இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இவருடன் கணேஷ், நிகிஷா பட்டேல், இனியா, ராதாரவி, மனோபாலா, சிங்கம் புலி, முத்துக்காளை, சிசர் மனோகர் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு - ஜெய் ஆனந்த, இசை - சுஜித் ஷெட்டி, படத்தொகுப்பு - ஸ்ரீகாந்த், பாடல்கள் - முத்து விஜயன், கலை - மோகன் கேரி, நடனம் -பிரதீப் அந்தோணி, சண்டை பயிற்சி -  கே.டி.வெங்கடேஷ்,, கணேஷ்குமார், தயாரிப்பு நிர்வாகம் - டி.கண்ணன்  எஸ்.சோமசேகர், ராஜேஷ்.யு. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜெ.கே.எஸ்.

படம் பற்றி பேசிய இயக்குநர் ஜெ.கே.எஸ்., “இந்தக் ‘கரையோரம்’ திரைப்படம் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உங்களை பயமுறுத்தும் வித்தியாசமான த்ரில்லர் திரைப்படமாக இருக்கும். இந்த படத்தை மிகப் பெரிய தொழில் நுட்ப குழுவை கொண்டு உருவாக்கியுள்ளோம். 

கடற்கரையோரம் இருக்கும் ஒரு ரிசார்ட்ஸுக்கு நிகிஷா பட்டேல் தன் காதலன் கணேஷுடன் தங்குவதற்காக வருகிறார். அப்போது அங்கே பேய் உருவத்தில் இருக்கும் இனியா அவர்களை டார்ச்சர் செய்வார். தொடர்ந்து பல மர்மக் கொலைகளும் அந்த ரிசார்ட்ஸில் நடைபெறும். அந்தக் கொலைகளை விசாரிக்க போலீஸ் அதிகாரியா சிம்ரனும் அங்கே வருவார்.  அவர் கொலையாளிகளை எப்படி கண்டறிகிறார் என்பதுதான் கதை.

இந்தப் படத்தை நாங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலுமே தயாரித்திருக்கிறோம். இந்தப் படம் சிம்ரனுக்கு கண்டிப்பாக ஒரு ‘கம் பேக்’ திரைப்படமாக அமையும். அதேபோல் நடிகை நிகிஷா பட்டேலுக்கும் மிக முக்கியமான படமாக இருக்கும். நிகிஷாவிடமிருந்து மிகச் சிறந்த நடிப்பை இந்தப் படத்தில் வெளிக்கொணர்ந்துள்ளேன். இனியா, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்துள்ளார்.

படத்தின் இடைவேளை பகுதி நிச்சயம் எல்லோரிடமும் மிகுந்த வரவேற்ப்பை பெறும். அதற்கு காரணம் இதுவரை யாரும் தொடாத ஒரு விஷயத்தை நாங்கள் இந்தப் படத்தில் கையாண்டுள்ளோம்.. புதுமைகள் அனைத்தையும் வரவேற்கும் தமிழ் ரசிகர்கள் நிச்சயம் இந்தக் ‘கரையோரம்’ படத்தை கரையேற்றுவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்..” என்றார்.