full screen background image

26 கோடி மதிப்பில் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் – பொதுக்குழு முடிவு..!

26 கோடி மதிப்பில் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் – பொதுக்குழு முடிவு..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62-வது பொதுக் குழுக் கூட்டம் நேற்று மதியம் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.

இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவர் நாசர், துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்களான ராஜேஷ், ஜூனியர் பாலையா, பூச்சி முருகன், ராம்கி, பசுபதி, ஸ்ரீமன், பிரசன்னா, விக்னேஷ், T.P. கஜேந்திரன், கோவை சரளா, நளினி, நிரோஷா, A.L.உதயா, ரமணா, பிரேம்குமார், நந்தா, பிரகாஷ், தளபதி தினேஷ், அயுப்கான், பாலதண்டபாணி, குட்டி பத்மினி, சிவகாமி, சங்கீதா, சோனியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

RED_6271

மேலும் நியமனக் குழு உறுப்பினர்களான மனோபாலா, சரவணன், அஜய் ரத்தினம், காஜா மொய்தின், மருதுபாண்டியன், ஜெரால்டு மில்டன், வாசுதேவன், காந்தி, காளிமுத்து, ரெத்தின சபாபதி, சரவணன், காமராஜர், ரகுபதி, லலிதாகுமாரி, J.K.ரித்தீஷ், ஹேமச்சந்திரன், ஐசரி கணேஷ், S.V.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

மேலும் பெருந்திரளான நடிகர், நடிகையர்கள் ஆர்வத்துடன் வந்து இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சூர்யா, வடிவேலு, செந்தில், விமல்,  விஷ்ணு, ஜெயம் ரவி, சூரி, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சுந்தர்.C, K.S.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், R.பாண்டியராஜன், அசோக், ஷாம், பரத், ஸ்ரீனிவாசன், சின்னி ஜெயந்த், அப்பு குட்டி, மோகன், நட்டி நடராஜன், A.L.அழகப்பன், சங்கர் கணேஷ், நிழல்கள் ரவி, ரகுமான், வைபவ், சங்கீதா, சுகாசினி, இனியா, ரோகிணி, ரேகா, சச்சு, சுகன்யா, லதா, யுவராணி, சி.ஐ.டி.சகுந்தலா, விஜய் கார்த்திகேயன், டெல்லி கணேஷ், ஆரி, சோனா. எபி குஞ்சுமோன், ஸ்ரீமன், ஜாகுவார் தங்கம், ராமச்சதிரன், R.K.சுரேஷ், நித்தின் சத்யா, ரித்விகா மற்றும் பல முக்கிய நடிகர், நடிகையரும்கலந்து கொண்டனர்.      

மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுபினர்களாக உள்ள மலையாள நட்சத்திரங்களான நடிகைகள் சீமா, வனிதா கிருஷ்ணசந்திரன், மேனகா சுரேஷ், ரஞ்சனி, சபிதா ஆனந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இவர்களுடன் தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்கள் பேருந்தில் வந்து கலந்து கொண்டனர்.

RED_6119

கூட்டத்தின் துவக்கத்தில் சமீபத்தில் காலமான கலைஞர்கள் மனோரமா, குமரிமுத்து, கலாபவன் மணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதாவதாக பழம் பெரும் நடிகர் மறைந்த பி.யூ.சின்னப்பா குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது நூற்றாண்டு விழா வீடியோ மற்றும் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த வீடியோவும் திரையிடப்பட்டது. நடிகர் சங்கத்தின் கையேடு வெளியீடு மற்றும் இணையத்தளமும் துவக்கி வைக்கப்பட்டது.

தங்களது வாழ்க்கையை நாடகத் துறைக்கே அர்ப்பணித்த பழம் பெரும் கலைஞர்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் கலைஞர் விருதும், பொற்கிழியும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடிகர் சங்கத்தின் ஆண்டறிக்கையை நடிகர் கருணாஸ் வாசித்தார். பொதுவாக ஆண்டறிக்கையை வாசித்தல் என்பது சலிப்பூட்டும் அம்சமாக இருக்கும் ஆனால் அதை உணர்ச்சியூட்டும் உரையாக மாற்றி கருணாஸ் வழங்கினார்.

முதலில் நிகழ்ச்சிக்கான உணவு ஏற்பாடு உதவி செய்த ஹன்சிகாவுக்கும் விழாவின் செலவை ஏற்றிருந்த ஒளிப்பதிவாளர் நடிகர் நட்டி நட்ராஜுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது..

1.12.2014 முதல் 31.3.2015 வரையிலான ஆண்டறிக்கையை கருணாஸ்  வாசித்தார். கல்வி, மருத்துவம், திருமணம், மற்றும் இறுதிச் சடங்கு உதவிகள் என இதுவரையிலும் 7,75,500 ரூபாய் வழங்கப்பட்டதைக் கூறினார்.

RED_6282

‘குருதட்சணை’ திட்டம் பற்றி துணைத் தலைவர் பொன்வண்ணன் உரையாற்றினார். அவர் பேசும்போது, ”குரு தட்சணை’ திட்டம்  என்பது தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கும் நாடக நடிகர்களைப் பற்றித் தகவல்கள் சேகரித்து ஒருங்கிணைக்கும் திட்டமாகும்.

செயற்குழு உறுப்பினர்கள் 10 குழுவாகப் பிரிந்து 2500 பேரில் 2050 பேரை பதிவு செய்ய உதவினார்கள். புகைப்படம், தகவல், வீடியோ, குரல் பதிவு போன்றவை நாடக நடிகர்களுக்கும் வாய்ப்புகளைத் தேடித் தரும். இவற்றைத் தொகுத்து டைரக்டரி உருவாக்கப்படும். சங்கத்தின் இணையதளத்திலும் இந்தத் தகவல்கள் வெளியிடப்படும். தங்களுக்கான நடிகர்களை இயக்குநர்கள் தேடிக் கொள்ள இது பெரும் உதவியாக இருக்கும்…” என்றார்.

அடுத்து மூத்த கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு. பி.யூ.சின்னப்பாவின் மருமகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கொல்லங்குடி கருப்பாயி, ஜெமினி ராஜேஸ்வரி, டி.வி சேகர் போன்ற தமிழக மாவட்டங்கள் தோறும் தலா ஒருவரை தேர்வு செய்து  அவருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

RED_6357

நடிகர் சங்கத்துக்கான இணையதளத்தை எஸ்.எஸ்.ஆரின் பேரன் பங்கஜ் வடிவமைத்து இலவசமாக வழங்கினார்.

நடிகர் சங்கத்தின் கட்டட மாதிரியை நடிகர் சிவகுமார், வசனகர்த்தா ஆரூர்தாஸ் அகியோர் திறந்து வைத்தனர்.  நடிகர் சங்க கட்டட மாதிரி அனிமேஷன் படம் திரையிடப்படது.

அந்தக் கட்டடத்தில் என்னென்ன இருக்கும் என்று அடுத்துப் பேசிய பொதுச் செயலாளர் விஷால் கூட்டத்தினருக்கு விளக்கினார்.

RED_6506

“1. பெரிய ஆடிட்டோரியம். இது 1000 பேர் அமரும் வசதி கொண்டது. 

2. சிறிய திருமண மண்டபம். இது 300 பேர் அமரும் வசதி கொண்டது. 

3. பெரிய திருமண மண்டபம். இது 900 பேர் அமரும் வசதி கொண்டது.

4. சாப்பிடுமிடம். ஒரே நேரத்தில் 400 பேர் அமரும் வசதி கொண்டது.

5. பிரிவியூ திரையரங்கம். 150 பேர் அமரும் வசதி கொண்டது.

6. நடிகர் சங்க அலுவலகம் .

7. நடிகர்களுக்கான உடற்பயிற்சிக் கூடம். இதில் ஒரே நேரத்தில் 200 பேர் பயிற்சி பெறலாம். 

8. அடுத்து கார் பார்க்கிங். இது 165 கார்களுக்கான கார் நிறுத்துமிடம்.

இவ்வளவும் கொண்ட கட்டடமாகக் கட்டப்படும். இதற்கு 26 கோடி ரூபாய் செலவாகும்.

சிறிய திருமண மண்டபத்திற்கான மொத்த செலவையும் திரு. ஐசரி கணேஷ் அவர்களும், பிரிவியூ திரையரங்கத்திற்கான மொத்த செலவையும் திரு.சிவகுமார், சூரியா, கார்த்தி குடும்பத்தினரும் ஏற்று கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்.  

இவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் மாதம் 56 லட்சத்து 20 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 6 கோடியே 74 லட்சம் வருமானம் பெறும் திட்டம் உள்ளது.

இப்போது சங்கத்திற்கு 2 கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது.

இந்தக் கட்டுமானத் தொகையைப் திரட்டுவதற்காக நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி, விஷால், கார்த்தி இணைத்து நடிக்கும் படம் எடுப்பது போன்ற பல திட்டங்கள் உள்ளன.

இதற்காக  வரும் ஏப்ரல் 17-ம் தேதியன்று நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியை நடத்தவிருக்கிறோம். இந்தப் போட்டியின் டிவி ஒளிபரப்பு உரிமை மூலமாக சங்கத்திற்கு இப்போதே 9 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கும்வகையில் நாடகம் நடத்தும் திட்டமும் உள்ளது. இன்றுதான் தான் செயலாளராக பதவி ஏற்பதாக உணர்கிறேன்..” என்றார் முத்தாய்ப்பாக..!

விழாவின் இடையில் கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து ‘ஸ்கைப்’ மூலம் பேசி அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறினார். 

சரத்குமார் அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் கூடுவாஞ்சேரியில் உள்ள தனது சொந்த நிலத்தை முதியோர் இல்லம் கட்ட இலவசமாக தருவதாகக் கூறினார்.

IMG_0453

நடிகர் வடிவேலு பேசும்போது, “காணாமல் போன நடிகர் சங்கம் திரும்பவும் கிடைத்துவிட்டது. அதற்குக் காரணம் நீங்கள் எல்லோரும் நல்லவர்களுக்கு ஓட்டு போட்டதுதான். கோவில் மாதிரியிருக்கும் நமது நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் வரும். நாம் அனைவரும் அதில் சந்தோஷமாக இருப்போம்..” என்றார்.

பொருளாளர் கார்த்தி நடிகர் சங்கத்தில் இதுவரையில் ஒப்படைக்கப்பட்ட கணக்கு, வழக்குகளை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். பின்பு மேலும் அவர் பேசும்போது, “இது கனவிலும் நினைத்துப் பார்க்காத மேடை இதை என் பெரிய குடும்பமாக உணர்கிறேன். இனி நாடக நடிகர்களை எதற்கும் யாரிடமும் கையேந்த விடமாட்டோம். மருத்துவ, கல்வி, ஓய்வூதியத் திட்டங்கள் அவர்களுக்கு நிச்சயம் பலன் தரும்.

முந்தைய நிர்வாகம் செய்த குளறுபடிகள், தவறுகள் பற்றி காவல்துறையில் புகார் செய்ய இருக்கிறோம். கணக்கு, வழக்குகளில் குளறுபடிகள் இருந்ததால் மட்டுமே நாங்கள் புகார் அளித்திருக்கிறோம். பழைய நிர்வாகிகள் மீது எங்களுக்கு எந்தவொரு காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. நல்லதே நடக்கும்..” என்றார்.

பின்பு செயலாளர் விஷால் மீண்டும் மைக்கை பிடித்து, “கார்த்தி எங்களுக்குக் கிடைத்த்து பெரிய வரம். நடிகர் சங்கப் பொறுப்பால் தன் குழந்தையைக்கூட அவரால் சரிவர பார்க்க முடியவில்லை. இவர் வீட்டிற்கு போகும்போது குழந்தை தூங்கிவிடுகிறது என்றார். அவர் குடும்பத்தை கடவுள் நல்லபடியாக வைத்திருப்பான்.

80 வயதைத் தாண்டிய அனைத்து கலைஞர்களுக்கும் நல்ல விஷயங்கள் நடக்கும்வரை நாங்கள் ஓய மாட்டோம். அதுவரையிலும் எங்களது கடின உழைப்பு மென்மேலும் தொடரும்..” என்றார்.

தலைவர் நாசர் பேசும்போது, “என்னுடைய 60-வது கல்யாணமும் அடுத்தாண்டு இதே நடிகர் சங்க வளாகத்தில்தான் நடைபெறப் போகிறது. இப்பொதுக் குழு திருமண விழா போல சீரும், சிறப்புமாக தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படி ஒரு பெரிய மாற்றத்துக்காக எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. நம்பிக்கையைவிட அன்பு காட்டியதுதான் அதிகம். அதற்கும் நன்றி. அவச் சொல். அவதூறு, வாக்குவாதம் இல்லாமல் நடக்கும் முதல் கூட்டம் இது. இப்படி கல்யாண வைபவம் போல ஒவ்வொரு கூட்டமும் கொண்டாட்டமாக நடக்கும். எங்களை  நம்புங்கள் அனைவரும் இணைவோம்..” என்றார்.

நிகழ்ச்சியில் அறிமுகவுரை மட்டுமல்ல தொகுப்புரை நன்றியுரை எல்லாமும் துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆற்றினார்.

இந்தக் கூட்டத்தில் சரத்குமார், ராதிகா, வாகை சந்திரசேகர், ராதாரவி, விஜயகுமார் உள்ளிட்ட பழைய நிர்வாகிகள் யாருமே கலந்து கொள்ளவில்லை.

மேலும் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம், ஆர்யா, ஜீவா, சந்தானம் உள்ளிட்டவர்களும் வரவில்லை. நடிகைகளில் தற்போதைய டாப் மோஸ்ட் நடிகைகளான சமந்தா, த்ரிஷா, அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் வரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score