தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகிகளான நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் அறக்கட்டளையின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி கையாடல் செய்திருக்கிறார்கள் என்றும், இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான புதிய அணி பொறுப்பேற்றவுடன் ஒரு வாரத்தில் கணக்குகளை ஒப்படைப்பதாகச் சொன்ன சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் இப்போதுவரையிலும் முழுமையாக ஒப்படைக்கவில்லை. இது குறித்து சென்ற முறை நடந்த செயற்குழு கூட்டத்திலேயே சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் பின்பும் சங்கத்தின் கணக்கு வழக்குகளும், அறக்கட்டளையின் கணக்குகளும் முறைப்படி தாக்கல் செய்யப்படவில்லையாம்.
இதனால் தற்போதைய ஆவணங்களை வைத்து புதிய தணிக்கையாளர் உதவியுடன் கணக்குகளை சோதனையிட்டபோது பல லட்சம் ரூபாய் செலவுக்கான கணக்குகள் இல்லை என்று தெரிந்திருக்கிறது.
இதனால் இவர்கள் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளையின் பொறுப்பில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையை அணுகுவது என்று நேற்று நடைபெற்ற நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டதாம்.
இந்த முடிவின்படி இன்று காலை சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், அறக்கட்டளையின் உறுப்பினர்களில் ஒருவருமான பூச்சி முருகன் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பிலான புகார் மனுவை சமர்ப்பித்துள்ளார்.









