நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடைபெறுகிறது..!

நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடைபெறுகிறது..!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் 18-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டாண்டுகளாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல பிரச்சினைகள் எழுந்து கோடம்பாக்கத்தை பரபரப்பாக்கி வருகின்றன.

நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் விவகாரத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பதாகச் சொல்லி விஷால் தலைமையில் ஒரு அணி கடந்த பொதுக்குழுவில் பிரச்சினை எழுப்பியது. கடந்த 10 ஆண்டுகளாக தேர்தலே நடத்தாமல் நடிகர் சங்கத்தை நடத்தி வருவது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

இந்த நிலைமையில் எதிர்ப்பாளர்களைச் சமாளிக்க வேண்டி கடந்த ஜூலை 15-ம் தேதி சங்கத்திற்கு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டார். அவர் நடிகர் சங்க தேர்தல் எங்கே, எப்போது நடத்துவது குறித்து இரு தரப்பினருடனும் ஆலோசனை நடத்தினார். தேர்தலை எங்கு நடத்தலாம் என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதற்கிடையில் தேர்தலில் போட்டியிடவிருக்கும் நடிகர்கள் அணி, அணியாக தமிழகம் முழுவதிலும் சென்று நாடகக் கலைஞர்களையும், நடிகர்களையும் சந்தித்து வாக்கு சேகரித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் தேதியை நீதிபதி பத்மநாபன் இன்று அறிவித்தார்.

actors union election date announced

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சங்க தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 18–ந்தேதி நடைபெறும். மயிலாப்பூர் செயிண்ட்எபாக்ஸ் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இத்தேர்தலில் 3,139 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள்..” என்று கூறியுள்ளார்.

அடுத்து தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுவிட்டால் கோடம்பாக்கத்திற்கு அடுத்த ஒரு மாதத்திற்கு நன்றாகவே பொழுது போகும்..!

Our Score