சிவகார்த்திகேயனின் ரஜினி முருகனுக்கு ‘யு’ சர்டிபிகேட்..!

சிவகார்த்திகேயனின் ரஜினி முருகனுக்கு ‘யு’ சர்டிபிகேட்..!

தமிழ் திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சிவகார்த்திகேயனின் 'ரஜினி முருகன்' படத்திற்கு சென்சாரில் 'யு' சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்துள்ளார். இதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்துள்ளார். பொன்ராம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயனின் தொடர்ச்சியான அனைத்து படங்களுமே 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதால், இந்தப் படத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

முதலில் ஞானவேல்ராஜாவின் கிரீன் ஸ்டூடியோ நிறுவனம், ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தோடு இணைந்து இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவதாக இருந்தது. நடுவில் ஏனோ இந்த முயற்சி தடைபட்டுப் போக.. இப்போது வேந்தர் மூவிஸ் இதனை ரிலீஸ் செய்யவிருப்பதாகத் தகவல். தமிழ் விநியோக உரிமை மட்டுமே 40 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.

வரும் செப்டம்பர் 17, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வேட்டைக்கு வருகிறார் 'ரஜினி முருகன்'..!

எல்லாப் புகழும் சிவகார்த்திகேயனுக்கே..!