full screen background image

எதிர்ப்புகளையும் மீறி மதுரை தியேட்டரில் வெளியானது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்

எதிர்ப்புகளையும் மீறி மதுரை தியேட்டரில் வெளியானது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்

விநியோகஸ்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நேற்று மதுரையில் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

அப்போது கொரோனா வைரஸின் முதல் கட்டப் பரவல் உச்சக்கட்டத்தில் இருந்ததால் இந்தப் படம் தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

இதை எதிர்பார்க்காத தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் சூர்யா மீது கோபமடைந்தனர். இதையடுத்து சூர்யாவின் குடும்பத் தயாரிப்புப் படங்களை இனிமேல் தியேட்டர்களில் திரையிடக் கூடாது என்ற தீர்மானத்தை அவரவர் சங்கத்தின் கூட்டத்தில் முடிவெடுத்தனர்.

இதற்கிடையில் இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சினிமா விமர்சகர்களிடத்திலும், பல்வேறு மாநில திரையுலக பிரபலங்களின் பாராட்டையும் பெற்றது. ஆஸ்கர் விருது போட்டிக்கான முதல் தகுதிப் போட்டியிலும் போட்டியிட்டது.

மேலும் இந்த ‘சூரரைப் போற்று’ பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. இருந்தாலும் தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்து வந்தது.

ஆனால் இப்போது திடீரென்று மதுரையில் இருக்கும் ‘மிட்லண்ட்’ தியேட்டரில் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து முதல் காட்சியே ஹவுஸ் புல்லானது.

இந்தப் படம் தியேட்டருக்கு வருகிறது என்றவுடனேயே மதுரையில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்கள் சங்கத்தினரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். உடனேயே ‘மிட்லண்ட்’ தியேட்டர் உரிமையாளரான கஜேந்திரனிடம் போனில் பேசிய நிர்வாகிகள், “சங்கக் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்ள வேண்டாம். ‘சூரரைப் போற்று’ படத்தை வெளியிட வேண்டாம். மீறினால் அடுத்து எந்த புதிய படமும் ‘மிட்லண்ட்’ தியேட்டருக்குக் கிடைக்காது…” என்றும் மிரட்டியிருக்கிறார்கள்.

ஆனால், எந்த மிரட்டலுக்கும் அஞ்சாத மிட்லண்ட்’ தியேட்டர் உரிமையாளர் படத்தை திட்டமிட்டபடியே நேற்றைக்கு வெளியிட்டுவிட்டார். படம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து கொண்டிருப்பதால் தியேட்டர் உரிமையாளர் சந்தோஷத்தில் இருக்கிறார்.

ஆனால், இனிமேல் ‘மிட்லண்ட்’ தியேட்டருக்கு புதிய படங்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் மதுரை வட்டார விநியோகஸ்தர்கள் சங்கத்தினர்..!

Our Score