full screen background image

‘இந்தியாவின் இசைக் குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்

‘இந்தியாவின் இசைக் குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்

இந்தியாவின் இசைக் குயில்’ என்றழைக்கப்பட்ட இந்தியத்  திரையுலகின் பழம் பெரும் பின்னணிப் பாடகியான லதா மங்கேஷ்கர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மும்பை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 92.

கொரோனா தாக்குதல் காரணமாக கடந்த 28 நாட்களாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கரின் உடல் நிலை நேற்று திடீரென்று மோசமடைந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தார்கள். இருப்பினும் அவர் இன்று காலை 8.16 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் பழம் பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர், பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார். இவர் 1929-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தார்.

இவரது தந்தை பண்டிட் தீனாந்த் மங்கேஷ்கர் மராத்தி இசைக் கலைஞர். அம்மா குஜராத்தி.. நான்கு வயதில் பாட ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். இவரது சகோதரியான ஆஷா போஸ்லேவும் புகழ் பெற்ற பின்னணி பாடகராவார்.

1942 ஆம் ஆண்டு சினிமாவில் பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கர், முதன்முதலாக கிதி ஹசால்’ என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்துவிடவே, குடும்பம் வறுமையில் வாடியது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் ‘மஜ்பூர்’ என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது லதாவின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

1955-ம் ஆண்டு திலீப் குமாரின் நடிப்பில் ‘உரன் கடோலா’ என்ற இந்திப் படம் வெளியானது. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த 9 பாடல்களையும், லதா மங்கேஷ்கரும், முகமது ரஃபியும் பாடியிருந்தார்கள். பின்னர் இந்தப் படம் ‘வான ரதம்’ என்ற டைட்டிலில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. இதில் ’எந்தன் கண்ணாளன்’ என்ற பாடலை கம்பதாசன் வரிகளில் பாடினார் லதா. பாடலுக்கு இசை நெளவ்ஷத்.

1952-ல் இந்தியில் வெளியான ஆண்’ திரைப்படம் ‘ஆண் முரட்டு அடியாள்’ என்ற டைட்டிலில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. அந்தப் படத்தில் ‘இழந்தேன் உன்னை அன்பே’, ‘நகரு நகரு’, ‘பாடு சிங்கார பாடலை’, ‘இன்று எந்தன் நெஞ்சில்’ ஆகியப் பாடல்களையும் லதா மங்கேஷ்கரே பாடியிருந்தார். இந்த ‘ஆண்’ படத்தின் மூலம் 1953-ம் ஆண்டே அவர் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தார். இந்தப் படத்திற்கும் இசை நெளவ்ஷத்துதான்.

1956-ம் ஆண்டிற்குப் பிறகு வேறெந்த தமிழ் படங்களிலும் பாடாமல் இருந்தார் லதா மங்கேஷ்கர். அவரை 1987-ம் ஆண்டு பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்திற்காக மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா. இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலைப் பாடினார் லதா. ஆக, இதுதான் அவர் நேரடியாகப் பாடிய முதல் தமிழ் பட பாடல்..!

அதன் பிறகு 1988-ல், இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான, ‘சத்யா’ படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘வளையோசை’ பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார். இன்றளவும் இந்தப் பாடல் பலரின் ஃபேவரிட் லிஸ்டில் உள்ளது.

பின்பு அதே 1988-ல் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் இடம் பெற்றிருந்த ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலை, பாடகர் மனோவுடன் இணைந்து டூயட்டாகவும், சோலோவாகவும் பாடிருந்தார். இந்தப் படத்திற்கும் இளையராஜாதான் இசை. இதன் பிறகு அவர் தமிழில் வேறெந்த பாடல்களையும் பாடவில்லை. ஆனால் இன்னொரு தமிழ் இசையமைப்பாளருடன் பணிபுரிந்திருக்கிறார் லதா மங்கேஷ்கர்.

2006-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ரங் தே பசந்தி’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘லூகா சூப்பி’ என்ற பாடலை ரஹ்மானுடன் இணைந்து பாடிருக்கிறார் லதா மங்கேஷ்கர்.

மேலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், உதித் நாராயணன் ஆகியோருடன் இணைந்து இந்தியில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள லதா மஞ்கேஷ்கரை, இசைக் குயில்’ என அன்போடு அழைக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா விருது’, ‘பத்ம பூஷன் விருது’, ‘பத்ம விபூஷன்’ விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, ‘தாதாசாகேப் பால்கே’ விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள் என மேலும் பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், இந்தியத் திரையுலகத்தினரும் சமூக வலைத்தளங்களில் தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகிறார்கள்.

நான்கு வயதிலேய பாடத் தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்திய திரையுலகில், மிகச் சிறந்த பின்னணிப் பாடகியாக கோலோச்சிய லதா மங்கேஷ்கருக்கு நமது இதய அஞ்சலிகள்..!

Our Score