கோச்சடையானுக்கு பின்பு ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்கப் போவது கே.எஸ்.ரவிக்குமார் என்று உறுதியாகிவிட்டது. படத்திற்குப் பெயர் வைக்காவிட்டாலும் இந்த மாதம் மைசூரில் ஷூட்டிங் என்பதும் உறுதி.
ஒரு ஹீரோயின் அனுஷ்கா என்பதையும் சொன்னவர்கள் இன்னொரு ஹீரோயினை தேடி வருவதாகச் சொல்லியிருந்தார்கள். இப்போது வெளியாகியிருக்கும் தகவல் இதில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா மெயின் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்பதுதான்.
பிரபல பாலிவுட் நடிகரும், ரஜினியின் ஸ்டைல் குருவுமான சத்ருகன் சின்ஹாவின் மகளான இந்த சோனாக்ஷி சின்ஹா 2010-ம் வருடம் டபாங் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானவர். 26 வயதுதான். 60 வயது ரஜினிக்கு இவர் ஜோடியா என்றெல்லாம் பேச்சு வரத்தான் போகிறது.. அனுஷ்காவுக்கு 30 வயது.. அவ்வளவுதான்.. பாதி வயது கொண்ட ஐஸ்வர்யாராயே நடிக்கவில்லையா..? விட்டுத் தள்ளுங்க அது எங்க பிரச்சினை என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்..!
இந்தப் படத்தில் அனுஷ்காவுக்கு செகண்ட் ஹீரோயின் வேஷம்தானாம். ஆனால் அது ஆக்சன் சம்பந்தப்பட்டது என்கிறார்கள். அதனால்தான் அனுஷ்கா நடிக்க ஒத்துக் கொண்டார் என்றும் பேச்சு அடிபடுகிறது..!
இப்போது இதில் சோனாக்ஷி நடிப்பது உறுதியென்றால், இதுவும் அகில இந்திய படமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்பதை இப்போது உறுதி செய்திருக்கிறார்கள். வசனத்தை ‘சாருலதா’ படத்தை இயக்கிய பொன்குமரன் எழுதுகிறாராம். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக சட்டுப்புட்டென்று சொல்லிவிட்டால் ஒரே படத்தைப் பற்றி இத்தனை செய்திகளை திரும்பத் திருப்பச் சொல்ல வேண்டிய அவசியம் பத்திரிகையாளர்களுக்கும் வராது..!