full screen background image

கோலாகலமாக நடந்த சைவம் பாடல் வெளியீட்டு விழா..!

கோலாகலமாக நடந்த சைவம் பாடல் வெளியீட்டு விழா..!

இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் சைவம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை தி.நகர் ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது..

500 அழைப்பிதழ் அச்சடித்து 5000 பேரை கூப்பிட்டிருப்பார்கள் போலிருக்கிறது.. அப்படியொரு கூட்டம். மான் கராத்தே ஆடியோ விழாவில் நடந்தது போலவே இங்கேயும் பவுன்சர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது..

வாசலிலேயே கிளி ஜோஸியம் பார்ப்பவன்.. பலூன் விற்பனை கடை.. வளையல் விற்பனை கடை.. கூடைகள் விற்பனை கடை.. மண்சட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை என்று விதவிதமான ஒரு கிராமத்தையே செட்டிங்க்ஸாக வைத்து கலக்கியிருந்தார்கள்.

எக்ஸ்ட்ரா செட்டிங்ஸாக கரகாட்டம் ஏற்பாடு செய்திருக்க.. அவர்கள் அடித்த அடியில், அக்கம்பக்கம் குடியிருப்பவர்களெல்லாம் வாசலில் வந்து குவிந்துவிட்டார்கள்.. அப்படியொரு கூட்டம்..!

இயக்குநர் விஜய்யின் தனிப்பட்ட குணம் காரணமாகவே அவர் மரியாதைக்கு அழைப்பு வைத்தவர்களெல்லாம் வந்தே தீருவோம் என்று வந்துவிட.. சிறப்பு அழைப்பாளர்களுக்கு கடைசியில் சீட்டு கிடைக்காமல் அல்லாடிவிட்டார்கள் பாவம்..!

உள்ளே வந்தவர்களை வராந்தாவிலேயே மடக்கி அங்கே வைக்கப்பட்டிருந்த போட்டோ ஷூட்டிங் செட்டிங்கிஸ் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து 5 வினாடிகளில் அதனை பிரிண்ட் செய்து சைவம் புகைப்படம் ஒட்டப்பட பிரேமில் நமது போட்டோவையும் ஒட்டிக் கொடுத்து இனிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்கள்..! செம ஐடியா..

நாசரின் மகன் லுப்தீன் பாஷா, இந்தப் படத்தில் அறிமுகமாவதால் நாசரின் உறவினர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள்.

ஜெயம்ரவி, சமுத்திரக்கனி, ஜெயம் ரவியின் அப்பா, தயாரிப்பாளர்கள் முரளிதரன், பிரமிட் நடராஜன், கே.ராஜன், U TV CEO தனஞ்செயன், தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கிருபாசங்கர், இயக்குநர்கள் வசந்த், பொன்வண்ணன், பாலாஜி மோகன், ஆர்.சுந்தர்ராஜன், கெளதம் வாசுதேவ் மேனன், விக்ரமன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சித்தார்த், பாடகர் கானா பாலா, நடிகைகள் சுஜா ரகுராம், சரண்யா பொன்வண்ணன், ஜனனி ஐயர், அமலா பால், அனுஷ்கா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருமே வந்து குவிந்துவிட்டார்கள்.

இதில் அனுஷ்காவின் வருகை தனக்கு சர்ப்ரைஸாக இருந்தது என்றார் விஜய். தன்னுடைய படத்தின் பிரமோஷனுக்குக்கூட சென்னை பக்கம் தலைவைத்துப் படுக்காத தான் நடிக்காத ஒரு படத்திற்காக ஹைதராபாத்தில் இருந்து வந்திருப்பது விஜய்க்கு பெருமைக்குரிய விஷயம்தான்.

பாடல்களை சித்தார்த் அண்ட் விஜய் சேதுபதி டீமும், ஜெயம்ரவி, சமுத்திரக்கனி டீமும் முன்மொழிந்து வெளியிட்டார்கள்.. மேலும் வந்திருந்த வி.ஐ.பி.க்கள் அனைவருமே நான்கு நான்கு பேராக மேடையேறி வாய் வலிக்குமளவுக்கு விஜய்யை வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்..

கெளதம் வாசுதேவ் மேனன் டிரெயிலரையும் பாடல்களையும் வெளியிட அதனை அனுஷ்காவும், அமலாபாலும் சேர்ந்து பெற்றுக் கொண்டார்கள்.

இதற்கு மேல் ஒரு ஆள் ஏறினால்கூட மேடை உடைந்துவிடும் என்கிற நிலைமைக்கு வந்த பின்புதான் நன்றியுரையாற்றிய இயக்குநர் விஜய் தன் நன்றியுரையை முடித்துக் கொண்டார்..!

வாசலிலும் கூட்டம் எக்குத்தப்பாய் திரண்டிருந்ததால் வந்திருந்த வி.ஐ.பி.க்களை பத்திரமாய் உள்ளே அழைத்துச் சென்று நிகழ்ச்சி முடிந்ததும் திரும்பவும் வெளியில் அழைத்து வந்து காரில் ஏற்றி அனுப்பி வைக்கும் வேலையை பவுன்சர்கள் என்ற துறையினர் பக்குவமாகவே செய்தனர்.

வேறு எங்கேனும், இதைவிட பெரிய அரங்கத்தில் விழாவை நடத்தியிருக்கலாம்.. பத்திரிகையாளர்களில் 95 சதவிகிதம்பேர் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டேயிருந்தது காலத்தின் கட்டாயம் போல..! அமைதி காத்தனர் பத்திரிகையாளர்கள்.. எல்லாம் விஜய்க்காகத்தான்..!

இனிமேல் பத்திரிகையாளர்களுக்கான பிரஸ் ஷோ போல, பிரஸுக்கென்றே தனியாக ஆடியோ ரிலீஸ் நடத்தினால்தான், இதற்கு முற்றுப் புள்ளி கிடைக்கும்.

Our Score