சந்தோஷ் சிவன் தயாரித்து, இயக்கியிருக்கும் ‘இனம்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. திரையுலகில் இருக்கும் ஈழ ஆதரவு குழுக்களிடையே குழப்பத்தையும் உண்டு செய்திருக்கிறது.
ஒரு சாரார் ‘படம் எடுத்தவரையிலும் ஓகே’ என்று சொல்ல.. இன்னொரு குழு ‘படம் ஒட்டு மொத்தமாக தவறு.. ராஜபக்சேவின் பணத்தில் எடுக்கப்பட்டுள்ளது… அங்கு நடந்தது இனக் கலவரம் அல்ல. இனப் படுகொலை.. இதனை அழுத்தமாகச் சொல்ல இந்தப் படம் தவறிவிட்டது’ என்றெல்லாம் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஈழ ஆதரவு இயக்கத்தின் தலைவரான கொளத்தூர் மணியின் ஆதரவாளர்கள் நேற்றைக்கு ‘இனம்’ திரைப்படம் வெளியான திரையரங்குகளின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்தப் படம் ஓடிய அனைத்து தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
காவல்துறையே தொடர்ந்து பாதுகாப்பு தர முடியாத நிலை இருப்பதை தயாரிப்பாளரான சந்தோஷ் சிவனுக்கும், வாங்கி வெளியீட்ட இயக்குநர் லிங்குசாமிக்கும் அரசுத் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாம்.
இதனையடுத்து இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக நேற்று காலை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் ஒரு சிறப்புக் காட்சி காட்டப்பட்டது. இக்காட்சியில் படம் பார்த்த சில மூத்த இணை இயக்குநர்கள்.. தமிழ் ஈழ ஆதரவாளர்கள் பலரும், படம் தவறானது என்றே சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் ‘நாம் படைப்பாளிகள். நம்மைப் போன்ற சக படைப்பாளியின் படத்தை நாமே தடை செய்ய வேண்டும் என்றால் நமக்கும் ஒரு நாள் இதே போன்ற நிலைமை வரலாம். ஆகவே நமக்கு ஆட்சேபணையான சில காட்சிகளை நீக்கச் சொல்லலாம்’ என்று பேசி முடித்து அதனையே லிங்குசாமியிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
இதன்படி ‘இனம்’ படத்தில் குறிப்பிட்ட 5 காட்சிகளை நீக்கியிருப்பதாக விநியோகஸ்தர் லிங்குசாமி அறிவித்திருக்கிறார்.
1. பள்ளிக்கூடத்தில் கருணாஸ் இருக்கும் காட்சி.
2. புத்தத் துறவி தமிழ்க் குழந்தைகளுக்கு மாதுளம் பழம் கொடுக்கும் காட்சி.
3. சிங்கள ராணுவ வீரன் ஒருவர் குழந்தையின் போட்டோவை வைத்திருக்கும் காட்சி.
4. தலைவர் கொல்லப்பட்டார் என்ற வசனம்.
5. படத்தின் இறுதியில் 38000 பேர் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லப்படும் தகவல்.
இவையனைத்தும் நேற்றே நீக்கப்பட்டுவிட்டதாக லிங்குசாமி அறிவித்திருக்கிறார்.
இவைகள் தமிழ்த் திரையுலகில் இருக்கும் ஈழ ஆதரவாளர்களை வேண்டுமானால் சற்று அமைதிப்படுத்தலாம். ஆனால் வெளியில் இருப்பவர்களை..?