‘அனேகன்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்..!

‘அனேகன்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்..!

‘அனேகன்’ திரைப்படத்தில் ஆட்சேபணைக்குரிய பகுதிகள் பற்றி மத்திய தணிக்கை வாரியத்திடம் முறையிட்டு பரிகாரம் தேடிக் கொள்ளும்படி மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

‘அனேகன்’ திரைப்படத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தை கிண்டல் செய்யும்விதமாக காட்சிகளும், வசனங்களும் இருப்பதால் அவற்றை நீக்க வேண்டும் என்று சலவைத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் சென்சார் போர்டு ஏற்கெனவே அவற்றுக்கு அனுமதி வழங்கிவிட்டதால் திரைப்படம் நாளை திரைக்கு வரவிருக்கிறது.

இந்த நேரத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் திருக்குறிப்பு தொண்ட நாயனார் மகாசபையின் தலைவர் எஸ்.மாரிச்செல்வம்  தாக்கல் செய்த மனுவில் “நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து, வரும் 13-ம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘அனேகன்’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படத்தில் வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தை தணிக்கை செய்தபோது வண்ணார் சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கப்படாமல் விடப்பட்டுள்ளன.

இதனால் ‘அனேகன்’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரியும், சில காட்சிகளை நீக்கக் கோரியும் தணிக்கை குழு அதிகாரிகளிடம் கடந்த 4-ம் தேதி புகார் மனு கொடுத்தேன். அந்த மனு மீது அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 13-ம் தேதி திரையிட இருக்கும் அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்…” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த்து. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “சென்சார் போர்டு அனுமதியளித்த பிறகு அதில் நீதிமன்றம் தலையிடுவது என்பது சரியானதல்ல. நீங்கள் மத்திய சென்சார் போர்டினை அணுகி பரிகாரம் பெற்றுக் கொள்ளுங்கள்..” என்று தீர்ப்பளித்து வழக்கினை முடித்து வைத்துள்ளார்.

இந்த நிலைமையில் சர்ச்சைக்குரிய சில வசனங்களை ‘அனேகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் இருவருமே ஒருமித்த மனதோடு நீக்கியிருக்கிறார்களாம். இதனால் நாளை வெளிவரவிருக்கும் படத்தில் அந்த வசனங்கள் இருக்காது. எதிர்ப்புகளும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score