“அன்புக்கு நான் அடிமைப்பட்டவன். அதிகாரத்துக்கு அல்ல..!” – பவர்ஸ்டார் சீனிவாசனின் பதில்..!

“அன்புக்கு நான் அடிமைப்பட்டவன். அதிகாரத்துக்கு அல்ல..!” – பவர்ஸ்டார் சீனிவாசனின் பதில்..!

‘தொப்பி’ படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் தயாரிப்பாளர்களை தாக்கிப் பேசி தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் டி.சிவாவுக்கு பதிலளிப்பதுபோல நேற்று நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார்.

பவர்ஸ்டார் நடித்து வெளிவரவிருக்கும் ‘சுட்ட பழம் சுடாத பழம்’ என்கிற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சீனிவாசன் ‘நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்’ என்றார்.

சீனிவாசன் பேசும்போது, “ஒரு ஆண்டுக்கு முன்புவரை நான் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு நானே ரசிகர்களை அழைத்து வருவேன். அவர்களுக்கான எல்லா செலவுகளையும் நானேதான் செய்தேன். ஆனால் இப்போது அதையெல்லாம் செய்வதில்லை. ஆட்களையும் அழைத்து வருவதில்லை. என் ரசிகர்கள் தானாகவே என்னைப் பார்க்க வந்துவிடுகிறார்கள்.

சினிமா என்பது எனக்குக் குடும்பம் மாதிரி. சொன்னால் நம்ப மாட்டீர்கள். இந்தக் குடும்பத்துக்குள்ளே வருவதற்கு கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய்வரையிலும் நான் செலவு செய்திருக்கிறேன். நான் சாதாரணமாக எடுத்த எடுப்பிலேயே இந்த நிலைமைக்கு வரவில்லை. எத்தனையோ தொழில்களை செய்திருக்கிறேன்.. அதெல்லாம் எனக்குக் கை கொடுக்கலை. ஆனால் இந்த சினிமாதான் எனக்குக் கை கொடுத்தது.. அப்படிப்பட்ட இந்த சினிமாவுக்காக எத்தனை கோடிகளை இழக்கவும் நான் தயார்.

நான் எப்படி நடிக்கிறேன் என்று என் ரசிகர்களுக்குத் தெரியும். ‘லத்திகா’ படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில், ‘அண்ணே… நம்ம படத்துக்கு 500 ரசிகர்களை அனுப்பினால் நல்லாயிருக்கும்’ என்று ரசிகர் மன்றத் தலைவர் சொல்வார். ‘ஓகே அனுப்பிரலாம்’னு சொல்லி அவர்களுக்கு டிக்கெட் எடுத்து அனுப்பி வைப்பேன். அப்படி போட்ட விதை இன்றைக்கு விருட்சமாக வளர்ந்து எனக்குக் கனி கொடுத்திருக்கிறது.

முன்பெல்லாம் நடிக்க மட்டுமே செய்தேன். ஆனால் இப்போது பாடவும் ஆரம்பித்துவிட்டேன். இந்தப் படத்திலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறேன். 4 மணி நேரத்தில் பாடிக் கொடுத்துவிட்டேன். ஆட, பாட, காமெடியாக நடிக்க என்னால் முடியும். நீங்க வீட்ல நடிக்கிறீங்க. நான் சினிமால நடிக்கிறேன். அவ்வளவுதான்..

ஆர்வமும், திறமையும் இருந்தால் யாரும் ஜெயிக்கலாம். ரஜினிகாந்த், கமலுக்கு போட்டியாளராக என்னை நானே நினைத்துக் கொள்வேன். அன்புக்கு நான் அடிமை. அதிகாரத்துக்கு அல்ல. யாருக்கும் பயப்படவும் மாட்டேன். என்னை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ‘ஐ’ படத்தில் வரும் டயலாக் போல என்னை கேவலப்படுத்த, கேவலப்படுத்த நான் வளர்ந்து கொண்டேதான் இருப்பேன்..” என்றார்.

இதுக்கு மேலேயும் உங்களை யாரும் கேவலப்படுத்த முடியாது ஸார்..! அப்படி செய்தால் அந்தக் கேவலத்துக்கே அது கேவலமாயிரும்..!

Our Score