full screen background image

கேரளாவின் சரிதா நாயரின் கதை படமாகிறதாம்..!

கேரளாவின் சரிதா நாயரின் கதை படமாகிறதாம்..!

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து படமெடுப்பது மலையாளத் திரையுலகத்தினருக்கு அல்வா சாப்பிடுவது போல..! அது கொலையோ.. தற்கொலையோ.. அரசியல் சம்பவமோ.. அல்லது சமூகச் சீரழிவோ… எதுவாக இருந்தாலும் படைப்பாளிகள் அதனை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு கேரளாவில் கருத்துச் சுதந்திரம் திரையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது..

இப்போது சமீபத்தில் கேரள மாநில காங்கிரஸ் அரசையே ஆட்டம் காண வைத்த காற்றாலை ஊழல் வழக்கும் படமாக்கப்பட்டு வருகிறதாம். காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி பலரிடமும் பணத்தை பறித்துவிட்டு செய்து தராமல் ஏமாற்றிய சரிதா நாயர் என்ற ஒரு ஊழல் பெண்மணி ஒரு நாள் தனது பேச்சுக்கள் அனைத்தும் வீடியோவில் பதிவாக்கப்படுகிறது என்பதையே உணராமல் தனது கொள்ளையை மட்டும் விஸ்தாரமாகச் சொல்லிக் கொண்டே போக.. பொழுது விடிந்ததும் இந்தச் செய்தி வெளியாகி கேரளாவே  கிடுகிடுத்தது.

போதாக்குறைக்கு குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர், தற்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டியை மிக அருகில் இருந்து பார்ப்பது போலவும், அவருடன் பேசுவது போலவும் புகைப்படங்களும் சிக்கிவிட.. அரசியல் களமும் சூடாகிவிட்டது.

சரிதா நாயர் அவரது காதலர் பிஜூ ராதாகிருஷ்ணன்.. இவர்களுக்கு உதவிகளைச் செய்த கேரள அரசின் தலைமைச் செயலக ஊழியர்கள்.. சில அரசு ஊழியர்கள்.. கான்டிராக்டர்கள்.. இவர்களுக்கு விளம்பரம் செய்து கொடுத்த நடிகை ஷாலு மேனன் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று திரும்பியும் வெளியே வந்துவிட்டார்கள். சரிதா நாயர் மீதிருக்கும் வழக்குகள் ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் 46 மோசடி வழக்குகள்..

கடைசியாக கடந்த பிப்ரவரியில் சிறை மீண்ட சரிதா நாயர் உடனேயே பத்திரிகையாளர் மாநாட்டையே கூட்டினார். அந்தக் கூட்டத்தில் தான் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தன்னை போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்றுவதாகச் சொல்லி திருவனந்தபுரம் மஸ்கட் ஹோட்டலுக்கு அழைத்த கன்னூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்  அப்துல்லாகுட்டி, தன்னை கற்பழித்ததாக புகார் கூற.. மீண்டும் கேரள அரசியல் பதைபதைத்தது.

தேர்தல் நெருங்கிய நேரத்தில் இதென்னடா குழப்பம் என்று தவித்த காங்கிரஸ் அரசு சப்தமில்லாமல் அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கை பதிவு செய்துவிட்டு ஒதுங்கிவிட்டது. இப்போது அங்கே வாக்குப்பதிவும் நடந்து முடிந்துவிட.. சரிதா நாயர் சம்பவம் நடந்த தேதியையும், நேரத்தையும் சரியாகச் சொல்லாததால் மேல் விசாரணை செய்ய முடியவில்லை என்று சொல்லி கேஸை நிறுத்தி வைத்திருக்கிறதாம் காவல்துறை.

இவ்வளவு திடுக்கிடும் சம்பவங்கள் நிரம்பியிருக்கும் கதையைச் சும்மா விட்டுவிடுவார்களா..? சரிதா நாயரை, ஹரிதா நாயராக மாற்றியும், பிஜூ ராதாகிருஷ்ணனை அஜய் என்று மாற்றியும் படத்தினைத் துவக்கிவிட்டார்கள்.

‘சோலார் ஸ்வப்னம்’ என்ற தலைப்பு கொண்ட இந்தப் படத்தினை அமெரிக்க கம்பெனி ஒன்று தயாரிக்கிறதாம். ஜாய் ஆண்ட்னி என்ற இயக்குநர் இந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறாராம். தன்னுடைய பத்து வயதில் தன்னை பலாத்காரம் செய்த அரசியல்வாதி கேஆர்பி என்பவரை பழி வாங்குவதுதான் படத்தின் மெயினான கதையாம். இந்தப் பழி வாங்குதலுக்காக சோலார் கம்பெனியைத் துவக்கி அரசியல்வாதிகளை ஹரிதா நாயர் நெருங்குவதாகக் கதையை எழுதியிருக்கிறார்களாம்..!

எடுங்க சாமிகளா.. நீங்களாச்சும் நல்ல சினிமாவை கொடுக்கணும்னு நினைங்க. உங்க ஊர்க்கார மக்களெல்லாம் கொடுத்து வைச்சவங்க. நாங்க இப்பத்தான் பத்து டாடா சுமோ, பத்து அம்பாசிடர் காரெல்லாம் பறக்குற மாதிரி எடுக்க வேண்டியிருக்கு..! இதையெல்லாம் முடிச்சிட்டு நேரமிருந்தா இது மாதிரி உண்மைச் சம்பவங்கள் பக்கம் வரோம்..!

Our Score