‘சிக்ஸர்’ – சினிமா விமர்சனம்

‘சிக்ஸர்’ – சினிமா விமர்சனம்

வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆகியோர் இணைந்து இந்த ‘சிக்ஸர்’ படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் வைபவ் நாயகனாகவும், நாயகியாக பல்லோக் லால்வானியும் நடித்துள்ளனர். மேலும், ராதாரவி, இளவரசு, சதீஷ், ராமர், மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – பி.ஜி.முத்தையா, படத் தொகுப்பு – ஜோமின்,  கலை இயக்கம் – என்.கே. ராகுல், நடன இயக்கம் – சாம், ராம்குமார் பாடல்கள் – ஜி.கே.பி.லோகன், அன்பு. அறிமுக இயக்குநரான சாச்சி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

நாயகன் வைபவ்விற்கு மாலைக்கண் நோய். மாலை 6 மணிக்கு மேல் அவருக்குக் கண் தெரியாது. இந்த நிலைமையிலும் அவர் ஒரு சிவில் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். எங்கே, எப்போது இருந்தாலும் மாலை 5.30 மணியானால் வீடு நோக்கி பறப்பார் வைபவ்.

அவருடைய அம்மா ஸ்ரீரஞ்சனி. அப்பா இளவரசு. வைபவின் அம்மாவுக்கு எப்படியாவது தன் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று ஆசை. அப்பாவோ ‘இவனுக்கு எதுக்குக் கல்யாணம்..? இவனுக்கெல்லாம் கல்யாணமாகி..?’ என்ற விரக்தியில் இருக்கிறார்.

தனக்கு பெண் பார்க்கும் படலமே பிடிக்கவில்லை என்று சொல்லி வீடு தேடி வந்து அமர்ந்திருக்கும் புரோக்கரைக்கூட கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார் வைபவ்.

இந்த நிலைமையில் ஒரு நாள் மாலை தாமதமாக வீட்டிற்குத் திரும்புகிறார் வைபவ். வழியில் கடற்கரை அருகே வரும்போது அவருடைய பைக் மக்கர் செய்து நின்றுவிடுகிறது. உடனேயே தன்னுடைய உயிர் நண்பன் சதீஷூக்கு போன் செய்து தன்னை பிக்கப் செய்து கொள்ளும்படி சொல்கிறார் வைபவ்.

அதே நேரம் கடற்கரையில் ஒரு ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெறுகிறது. பொள்ளாச்சி வழக்கு போன்று ஒரு கேங் ரேப்பில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி மாணவர்களும், பெண்களும் போராட்டம் நடத்துகிறார்கள்.

அவர்கள் கடற்கரை மணலில் அமர்ந்து போராட்டம் நடத்த.. அவர்களுடன் கண் தெரியாத நிலையில் தன்னைச் சுற்றி யார் அமர்ந்திருக்கிறார்கள்.. என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் வைபவ்வும் அப்பாவியாக செல்போனில் வயரை மாட்டி பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்தக் கற்பழிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் நகரின் மிகப் பெரும் புள்ளியான ஆர்.என்.ஆர்.மனோகர். அவருடைய தம்பி கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்கிறார். ஆனால் வைபவ் தெரியாத்தனமாக ‘தோல்வி நிலையென நினைத்தால்’ பாடலை செல்போனில் ஒளிபரப்பி சிதறி ஓடிய கூட்டத்தை திரும்பவும் வரவழைத்து ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய வைக்கிறார்.

மீடியாக்களில் அதிரிபுதிரியாக இந்தப் போராட்டம் காண்பிக்கப்பட்டதால் ஆர்.என்.ஆர்.மனோகரை கைது செய்கிறது போலீஸ். தான் சிறையில் இருந்து ஜாமீனில் வருவதற்குள் போராட்டம் வெற்றியடைய காரணமாக இருந்த வைபவ்வை கொலை செய்ய வேண்டும் என்று தன் தம்பியிடம் சொல்லிவிட்டு, ஜெயிலுக்குள் போகிறார் மனோகர்.

அந்தப் போராட்டத்தை கவர் செய்ய வந்த ஒரு தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரான நாயகி பாலக் லால்வாணி நிஜமாகவே வைபவ் ஒரு போராளி என்று நினைத்து அவர் மீது காதல் கொள்கிறார். தன்னையும் ஒரு பெண் தேடி வந்து காதலிக்கிறாளே என்கிற ஆர்வத்திலும், ஆசையிலும் தனக்கு மாலைக் கண் நோய் இருப்பதை மறைத்து தானும் காதலிக்கிறார் வைபவ்.

அதே நேரம் மனோகரின் தம்பி வைபவ்வை கொலை செய்ய முயல்கிறார். ஆனால், அது நடக்காமல் போகிறது. இடையில் நாயகியுடன் ஒரு மோதல் ஏற்பட்டு காதலும் மரணமடைகிறது.

ஜாமீனில் வெளியே வரும் மனோகர் தானே வைபவ்வை கொல்லப் போவதாகச்  சொல்கிறார். ஒரு பக்கம் கொலைகாரர்கள்.. மறுபக்கம் தனது காதலி.. என்று இரண்டு பக்கமும் அல்லல்படுகிறார் வைபவ். இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்த ‘சிக்ஸர்’ படத்தின் திரைக்கதை.

நாயகன் வைபவ்விற்கு பெரிதாக மார்க்கெட் ஏதும் இல்லை. எதிர்பார்ப்பும் இல்லை. ஆனாலும் ‘மேயாத மான்’ படத்தின் வெற்றியால் அதை வைத்துக் கொண்டு தனது அடுத்த பாதையை சரி செய்து கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தை நகைச்சுவையோடு கொடுத்திருப்பதால் கொஞ்சம், கொஞ்சம் ரசிக்க முடிந்திருக்கிறது. வைபவ் தன் பேச்சிலேயே நகைச்சுவை வரும் அளவுக்கு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இவரும் சதீஷும் பேசும் பல காட்சிகளில் சிரிக்க முடிகிறது. சில காட்சிகளில் புன்னகை பூக்கவும் முடிகிறது.

சதீஷ் வழக்கம்போல நண்பன் கதாபாத்திரத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார். இடையிடையே பிக்பாஸ் விஷயங்களைக்கூட நக்கல் அடித்திருக்கிறார். கடைசிவரையிலும் ஹீரோவுடன் இருக்கும்படியான ஒரு கதாபாத்திரம் என்பதால் இந்தப் படம் இவருக்கு மிக முக்கியமான படமாக இருக்கும்.

நாயகி பல்லோக் லால்வாணியை முதல் சில காட்சிகளில் பார்க்கவே முடியவில்லை. எந்தக் கோணத்தில் பார்த்தால் அவர் அழகில்லாமல் தெரிவாரோ.. அதே கோணத்திலேயே காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு டப்பிங்கிலும் உதடுகள் ஒட்டவேயில்லை.  இடைவேளைக்கு பின்புதான் கொஞ்சமேனும் ரசிக்கும்படியாக அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

பாசமே இல்லாத அப்பாவாக இளவரசுவும், பாசமான அம்மாவாக ஸ்ரீரஞ்சனியும் தங்களது நடிப்பைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இளவரசு தனது குறைபாடுள்ள மகன் மீது ஏன் இத்தனை வெறுப்பாகவும், கிண்டல் செய்து கொண்டும் இருக்கிறார். பொதுவாக குறைபாடுள்ள பிள்ளைகள் மீது பாசமாகத்தானே இருக்க வேண்டும். நகைச்சுவைக்காக அப்பா, மகன் மோதலை வைத்திருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாய் கண்டு கொள்ளாத அப்பாவாக இளவரசுவைக் காட்டியிருப்பது தவறான கேரக்டர் ஸ்கெட்ச்சாய் தெரிகிறது.

இதற்கு நேரெதிராக அம்மா ஸ்ரீரஞ்சனி கதாபாத்திரம். மகனையே ஆள்  வைத்துக் கடத்திச் சென்று பெண் பார்க்க வைத்து.. அங்கே படும் அவமானத்தை மகனுக்காக தானே தாங்கிக் கொள்ளும் அன்பான அம்மா கேரக்டர். ஸ்ரீரஞ்சனியின் அழகான நடிப்பால் திரை நிறைகிறது.

ராதாரவி தனது பண்பட்ட நடிப்பை தனது காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்  மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. மது அருந்தினால் மட்டும் உண்மை பேசுவதும்.. மது அருந்தியபோது செய்தவைகளை மயக்கம் தெளிந்தவுடன் மறந்துவிடுவதுமாக நகைச்சுவையைக் கூட்டுவதற்கான தனது பங்களிப்பையும் குறையில்லாமல் செய்திருக்கிறார் ராதாரவி. பாராட்டுக்கள்.

மேலும் தாதா மனோகர், அவருடைய தம்பி, வில்லன் கோஷ்டிகள்.. முட்டாள் ரவுடிகளான ராமரும், அவரது அடியாட்களும் என்று பலருமே நகைச்சுவை படம் என்று தெரிந்து நடித்திருக்கிறார்கள் போலும். பெரிய அளவுக்கான ஸ்கோப்பை இவர்கள் திரையில் காண்பிக்கவில்லை.

படத்தின் வசனங்களை எழுதியவருக்கு தனி பாராட்டுக்கள். சில டைமிங்சென்ஸ் வசனங்களால்தான் தியேட்டரில் கை தட்டல்கள் கிடைக்கின்றன.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு அழகு. வழக்கம்போல பாடல் காட்சிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கவன ஈர்ப்பாக இல்லை என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.

இருந்தாலும், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இதே போன்ற உண்மையை மூடி மறைத்துவிட்டு காதலிக்கும் நல்லவர்களை நாயகர்களாக நாம் பார்ப்பது..? இது தவறென்பதை சமூகத்திற்கு நாம்தானே சொல்ல வேண்டும்..?!

நகைச்சுவை படமாகவே இருக்கட்டும். லாஜிக் பார்க்க வேண்டாம் என்பதாகவே இருக்கட்டும். ஒரு காதலியிடம் தனது உண்மை நிலையைச் சொல்லி “என் காதலை ஏற்றுக் கொள்கிறாயா..?” என்று கேட்பதுதானே ஒரு உண்மையான காதலனின் வேலையாக இருக்க வேண்டும். அதுதானே உண்மையான காதல்.

இப்படி ஏமாற்றிக் காதலித்துவிட்டு, கடைசியில் உண்மையைச் சொல்லிக் கண்ணீர்விட்டு அழுதால் அது உண்மையான காதலாகிவிடுமா..?

என்னமோ போங்க..! படம் பார்க்க வரும் இள வயசுப் பிள்ளைகளை கெடுக்காதீங்கன்னு மட்டும்தான் சொல்ல முடியும்..!

முழுமையான நகைச்சுவை படம் என்று சொல்ல முடியவில்லை என்றாலும் ஏதோ பார்க்கவும், சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

Our Score