‘மயூரன்’ – சினிமா விமர்சனம்

‘மயூரன்’ – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஃபினாகில்  பிலிம் ஸ்டுடியோ என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன்,  M.P.கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கிறா்கள்.

இந்தப் படத்தில் வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி(லென்ஸ்), அமுதவாணன்(தாரை தப்பட்டை),  அஸ்மிதா(மிஸ் பெமினா வின்னர்)  மற்றும் கைலாஷ்,  சாஷி, பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தில் நடித்திருக்கும் குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் ‘கூத்துப் பட்டறை’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு – பரமேஷ்வர், இசை – ஜுபின், ஜெரார்ட், பாடல்கள் – குகை மா.புகழேந்தி, படத் தொகுப்பு – அஸ்வின், கலை இயக்கம் – M.பிரகாஷ், சண்டை இயக்கம் – டான் அசோக், நடன இயக்கம் – ஜாய் மதி, மக்கள் தொடர்பு  – மணவை புவன், தயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M.P.கார்த்திக், கதை, திரைக்கதை,  வசனம், இயக்கம் –  நந்தன் சுப்பராயன்.

இவர் இயக்குநர் பாலாவிடம் ‘நந்தா’,  ‘பிதாமகன்’  போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

படத்தின் தலைப்பான ‘மயூரன்’ என்பதற்கு ‘விரைந்து உன்னைக் காக்க வருபவன்’ என்றும் ‘வெற்றி புனைபவன்’ என்றும் இரண்டு அர்த்தம் உண்டு.

நட்பு,  அன்பு,  நெகிழ்வு,  குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.

சாதாரண கூழாங்கற்கள் வைரக் கற்களாகவும், வைரக் கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடங்கள் கல்லூரி விடுதிகள்தான்.  

கல்லூரி விடுதிகள் என்பது வெறுமனே தங்கிப் போகும் வாடகை சத்திரங்கள் அல்ல. அவைகள் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்லவிதமாகவோ, மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம்தான் கல்லூரியின் விடுதிகள்.

அப்படியொரு கல்லூரியின் விடுதியில் ஏற்படும் சில பிரச்சனைகள், ஒரு தனி மனிதனின் வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதைப் பற்றிப் பேசும் படம்தான் இந்த ‘மயூரன்’ திரைப்படம்.

கதையின் களம் சிதம்பரம். அங்கேயிருக்கும் ஒரு கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்கள்தான் ‘சேகுவேரா’ என்னும் அஞ்சன், ‘விஜி’ என்னும் அமுதவாணன், ‘முத்துக்குமார்’ என்னும் பாலாஜி ராதாகிருஷ்ணன்.

இதில் அஞ்சன் தன்னுடைய சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். தனது மாமாவின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். ‘முத்துக்குமார்’ என்னும் பாலாஜி ராதாகிருஷ்ணனின் குடும்பம் மிக ஏழ்மையானது. பாலாஜி தான் நன்றாகப் படித்து வேலைக்கு போய் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கொள்கையில் இருக்கிறார். இவர்கள் மூவருமே கல்லூரியின் விடுதியில்தான் தங்கியிருக்கிறார்கள்.

அதே சிதம்பரத்தில் ரவுடிகளின் தலைவனாக இருக்கிறார் ‘பெரியவர்’ என்னும் வேல.ராமமூர்த்தி. இவருடைய அடியாள்களில் முக்கியமானவர் ‘ஜான்’ என்னும் ஆனந்த்சாமி.

பெரியவரிடம் இருந்து கொண்டே வெட்டுக் குத்துக் கொலை என்று செய்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் சப்தமே இல்லாமல் போதை மருந்தையும் சிதம்பரம் முழுவதும் சப்ளை செய்து கொண்டிருக்கிறார் ஜான்.

அஞ்சன் தனது கல்லூரியில் உடன் படிக்கும் அஸ்மிதாவைப் பார்த்தவுடன் லவ்வாகிறார். அஸ்மிதாவும் இதனை ஏற்றுக் கொள்கிறார்கள். அஸ்மிதான் அப்பா லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார். அஞ்சனின் மாமாவும் வந்து இவர்களைப் பார்த்துவிட்டு தனக்கும் சம்மதம் என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

இவர்கள் படிக்கும் அதே கல்லூரியின் கேண்டீனை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார் ஜான். இதை வைத்தே கல்லூரிக்குள்ளும் போதை மருந்தை சப்ளை செய்து வருகிறார் ஜான். இந்த போதை மருந்து விவகாரம் தொடர்பாக எழுந்த ஒரு பிரச்சினையில் அஞ்சனின் நண்பனை, ஜான் கொன்று விடுகிறார்.

இடையில் பாலாஜிக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இதற்காக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குப் போக அங்கே பல டெஸ்ட்டுகளை எடுக்கச் சொல்கிறார் டாக்டர். டெஸ்ட்டுகள் எடுத்த பின்பு ரிப்போர்ட்டுகள் மாறியதால் பாலாஜிக்கு ‘கேன்சர்’ என்று தவறுதலாகச் சொல்லப்படுகிறது.

இதைக் கேட்டு அப்செட்டான பாலாஜி அந்த நள்ளிரவில் ஹாஸ்டலில் இருந்து வெளியேறுகிறார். அவரைத் தேடி அஞ்சனும், அமுதவாணனும் அலைகிறார்கள். இந்த அலைச்சலுக்கு நடுவில் ஆனந்த்சாமியுடன் மோத வேண்டிய கட்டாயம் வருகிறது அஞ்சனுக்கு.

இந்த மோதலில் ஆனந்த்சாமியை கொலை செய்கிறார் அஞ்சன். இதனால் கோபமடையும் பெரியவர் அஞ்சனை பழிக்குப் பழி வாங்க போலீஸை ஏவிவிடுகிறார்.

இதையடுத்து நேருக்கு நேராய் போய் பெரியவரைச் சந்தித்துப் பேச திட்டமிட்டு வருகிறார் அஞ்சன். அந்தச் சந்திப்பில் அஞ்சனை படுகொலை செய்யத் திட்டம் போட்டிருக்கிறார் பெரியவர்.

அஞ்சன் – பெரியவர் சந்திப்பு நடந்ததா..? இருவரில் யார் உயிர் பிழைத்தது..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்தில் நடித்திருப்பவர்களில் பெரும்பாலோர் அறிமுகங்கள் என்பதால் பெரிய அளவுக்கு நடிப்புத் திறன் வெளிப்படவில்லை. கதைக்கும், திரைக்கதைக்கும், பேசுகின்ற வசனத்திற்கும் ஏற்றவகையிலேயே அனைவரின் நடிப்பும் அமைந்திருக்கிறது.

நாயகன் அஞ்சன் நடிக்கவே இல்லை எனலாம். மிக இயல்பாகவே தோன்றியிருக்கிறார். கோபப்படும் காட்சிகளில் மட்டும் சினிமாத்தனம் நிரம்பி வழிந்திருக்கிறது. இறுதிக் காட்சியில் அவரது கோபக்கனல் வெளிப்படும் இடத்தில் கைதட்டல்கூட கிடைத்திருக்கிறது. பாராட்டுக்கள்.

பாலாஜி தனது அப்பாவித்தனத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். தன்னுடைய குடும்பம் பற்றியும் தனது ஆசைகள், கனவுகள் பற்றியெல்லாம் பேசுபவர், தனக்கு வந்திருக்கும் நோய் பற்றித் தெரிந்தவுடன் உடைந்து அழுகின்ற காட்சியில் மிகுந்த பரிதாபத்தை ஈட்டுகிறார்.

நாயகி அஸ்மிதா மிக அழகு. சில, பல குளோஸப் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். அதிகமான காட்சிகள் இல்லாத காரணத்தினால் இருக்கின்ற காட்சிகளிலேயே தனது பெயரை அழுத்தமாய் பதிய வைத்திருக்கிறார்.

பெரியவராக நடித்திருக்கும் வேல.ராமமூர்த்தியின் கம்பீரமே அவருக்கு தனியான அழகைக் கொடுத்திருக்கிறது. அந்த வில்லத்தனமான நடிப்பை இன்னும் எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்காது போலிருக்கிறது. அப்படியொரு முக இறுக்கத்தை ஒவ்வொரு காட்சியிலும் காட்டியிருக்கிறார்.

அஞ்சனின் மாமாவாக நடித்தவர், கடைசி காட்சியில் தோழராக வரும் நபர், அமுதவாணன், நாயகியின் அப்பாவாக நடித்தவர் என்று இருக்கின்ற கேரக்டர்களும் பெயர் சொல்லும் அளவுக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பரமேஷ்வரின் ஒளிப்பதிவு படத்திற்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. இரவு நேரக் காட்சிகளில் சிதம்பரம் ஜொலிக்கிறது. காதல் காட்சிகளில் மிக அருமையான கோணத்தில் படமாக்கியிருப்பதால் காதலியையும், காதலையும் அனுபவிக்க முடிகிறது. பாடல்கள் முணுமுணுக்க வைக்கவில்லையென்றாலும் ஜுபினின் பின்னணி இசை நன்று.

படத்தின் முதல் பாதி சற்றே மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாவது பாதி விறுவிறுப்பாகச் செல்கிறது. இப்போதெல்லாம் முக்கால்வாசி படங்களில் இதுதான் நிலைமை. முடிச்சு போடும்வரையிலும் மூச்சுத் திணறி பார்க்க வைப்பவர்கள்.. முடிச்சை அவிழ்ப்பதை மட்டும் மிக சுவாரஸ்யமாக காட்டுகிறார்கள்.

படத்தில் மிகப் பெரிய பாராட்டுக்குரிய அம்சம் காதல் போர்ஷன்தான். மிக எளிமையான, அதே சமயம் ஈர்ப்பான திரைக்கதையில் காதலை தோற்றுவிக்கும் மன நிலையில் அந்தக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்கு நாயகியின் அழகும், நாயகனின் நடிப்பும் பெரிதும் உதவியிருக்கிறது.

இதேபோல் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கியிருக்கும்விதமும் அருமை. பெரியவரின் வீட்டுக்குள்ளேயே போய் அஞ்சன் அவரைச் சந்திக்கின்ற காட்சியை மிக அழகாக வடிவமைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர். எதிர்பாராத அந்த கடைசி நேர டிவிஸ்ட் சபாஷ் போட வைக்கிறது.

இயக்குநர் பாலாவின் சிஷ்யன் என்று சொல்லிக் கொண்டு அவர் ஸ்டைல் எதையும் காட்டவில்லையென்றால் எப்படி..? அதைத்தான் இந்தக் கிளைமாக்ஸில் வைத்திருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்..

ஒரு காலத்தில் சிதம்பரத்தை ஆண்டு கொண்டிருந்த வாண்டையார் பிரதர்ஸ் கதையைத்தான் இயக்குநர், இதில் வில்லன்களாக காட்டியிருக்கிறாரோ என்னவோ.. வில்லன்களுக்கு எதிர் கோஷ்டியாக ‘தோழர்’களைக் காட்டியிருப்பதால் இப்படித்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு மிதமான திரில்லிங் அனுபவத்தை இத்திரைப்படம் கொடுத்தாலும் இன்னும் அதிகமாகக் கொடுக்க ஸ்கோப் இருந்தும், இயக்குநர் அதைச் செய்யாமல்விட்டிருக்கிறார் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்..!

நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்..!

Our Score