நடிகர் விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடெக்சன்ஸ் சார்பில் ஒரு படத்தை சத்தமில்லாமல் தயாரித்திருக்கிறார். படத்தின் பெயர் ‘மேற்கு தொடர்ச்சி மலை’.
இந்தப் படத்தில் ஆண்டனி என்ற புதுமுகம் ஹீரோவாகவும், காயத்ரி கிருஷ்ணா என்ற புதுமுகம் ஹீரோயினாகவும் அறிமுகமாகியுள்ளனர்.
மேலும் அபு வளையாங்குலம், ஆறுபாலா, அந்தோணி வாத்தியார், அரண்மனை சுப்பு, செல்வமுருகன், ரமேஷ், மாஸ்டர் சுமீத் ஆகியோரும் நடித்துள்ளனர்.
மக்கள் தொடர்பு – நிகில் முருகன், கலை – எஸ்.ஜெயச்சந்திரன், உடைகள் – எஸ்.ஆர்.ராஜ்மோகன், பாடல்கள் – இசைஞானி இளையராஜா, யுகபாரதி, விவேக், பாடியவர்கள் – இசைஞானி இளையராஜா, ஹரிச்சரண், ரம்யா, இசை – இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர், படத் தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், எழுத்து, இயக்கம் – லெனின் பாரதி. தயாரிப்பு – விஜய் சேதுபதி.
அறிமுக இயக்குநரான லெனின் பாரதி சுசீந்திரனிடம் கதாசிரியராக பணிபுரிந்தவர். விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் சேதுபதி பேசும்போது, “நான் ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் கதாசிரியராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றினார் லெனின் பாரதி. அப்போதே அவர் எனக்கு நல்ல பழக்கம். அதோடு இந்தப் படத்தின் ஹீரோவான ஆண்டனியும் அப்போது அதே படத்தில் என்னுடன் நடித்து வந்தவர்தான்.
இந்த படத்தின் கதையை 2013-ம் ஆண்டே லெனின் பாரதி என்னிடம் சொன்னார். எனக்குக் கதை பிடித்திருந்தது. ஆனால் அப்போது என்னிடம் காசு இல்லை. ‘நான் பணம் சம்பாதித்தவுடன் இந்தப் படத்தைத்தான் முதல் தயாரிப்பாக எடுப்பேன்…’ என்று அப்போதே அவரிடத்தில் சொல்லியிருந்தேன். அவரும் நான்கு வருடங்கள் காத்திருந்தார். அது இப்போதுதான் சாத்தியமாகியிருக்கிறது.
சினிமாவை நன்றாக தெரிந்தவர் லெனின் பாரதி. நல்ல படிப்பாளி. அவர் விருப்பப்பட்ட… அவர் சொல்ல விரும்புகிற கதையைத்தான் இதில் படமாக்கியிருக்கிறார். எனக்கு அவர் மேல் நம்பிக்கை உள்ளது. படம் முடித்த பிறகு போட்டு காண்பித்தார். அருமையாக வந்திருக்கிறது.
இந்த மேற்கு தொடர்ச்சி மலை படம் எளிய சாதாரண மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது. ஒரு சிட்டுக் குருவியின் கூடு போல வீடு கட்ட வேண்டுமென்று ஆசைப்படுகிறான். ஆனால் சுத்தியிருக்கிற அரசியல் மற்றும் மனிதர்களால் அவன் என்னவாகிறான் என்பதுதான் கதை. இந்தப் படத்தில் அந்தப் பகுதி கிராமத்து மக்களையே நடிக்க வைத்துள்ளார் இயக்குநர்.
இசைஞானி இளையராஜா சாரின் இசைக்கு நான் அடிமை. இப்போதும் காரில் நீண்ட தூரம் போகும்போது ராஜா சார் பாடல்களை கேட்டுக் கொண்டேதான் செல்வேன்.. அவரோடு, அவருக்கு அருகில் இந்த மேடையில் நான் அமர்ந்திருப்பதே எனக்கு பெருமையான விஷயம். நிச்சயமாக பெருமைப்படுகிறேன்..” என்றார்.