24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனும், கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நடிக்கவுள்ளார்கள்.
இந்த ஜோடி ஏற்கெனவே ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்தப் படம் ஏகப்பட்ட கடன் சிக்கலில் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகும் முன்பேயே ‘இந்த ஜோடி நல்ல ராசி’ என்று நினைத்து புதிய கூட்டணியில் இணைத்துள்ளார்கள். பி.சி.ராம் ஒளிப்பதிவு செய்ய.. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். பாக்யராஜ் கண்ணன் எழுதி, இயக்குகிறார்.
காதல், நகைச்சுவை கலந்த கதை உள்ள படமாக இது உருவாகி வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
இந்தப் படத்திற்கான பாடல் காட்சி ஒன்று, சமீபத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு 4 லட்சம் வீதம், 5 மணி நேரத்திற்கு 20 லட்சம் ரூபாயை கட்டணமாகக் கொடுத்து இந்தப் பாடல் காட்சியை படமாக்கியுள்ளார்களாம்.









