“டான்’ திரைப்படம் முதலில் தன்னிடம்தான் வந்தது” என்று அந்தப் படத்தின் வெற்றி விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த ‘டான்’ திரைப்படம் தற்போதுவரையிலும் 100 கோடிக்கும் மேல் வசூலை அள்ளிய நிலையிலும் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது.
இந்தப் படத்தின் வெற்றி விழா இன்று மாலை கிண்டி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது “இந்த ‘டான்’ படம் ‘டாக்டர்’ திரைப்படத்தின் வசூலை முந்தும்…” என்று இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலேயே கூறியிருந்தேன். அது தற்போது உண்மையாகவே நடந்திருக்கிறது. ‘டாக்டர்’ படம் செய்த சாதனையை 3 வாரங்களிலேயே இந்த ‘டான்’ படம் முறியடித்திருக்கிறது.
இது வெற்றி விழா என்பதனால், நிறைய உண்மைகளைக் கூறலாம் என நினைக்கிறேன்.
இந்தப் படத்தை முதலில் எங்கள் நிறுவனத்தில் இருந்து நான்கு பேர் பார்த்தோம். முதல் பாதியைப் பார்த்து இது நகைச்சுவையாக இருக்கிறதா, சிரிப்பு வருகிறதா என்று எங்களுக்குள்ளேயே கேட்டுக் கொண்டு ஒரு மாதிரி ஆகிவிட்டோம்.
பிறகு, இரண்டாம் பாதியைப் பார்த்தோம். அதைப் பார்த்துவிட்டு, “கடைசி ஒரு மணி நேரம் அப்பா, மகன் உறவு மிகவும் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தப் படம் ஓடும்..” என்று சொன்னேன். நான் சொன்னதைப் போலவே தமிழ் சினிமா ரசிகர்கள் இன்றைக்கு இந்தப் படத்தைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். அதற்கு பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னொரு உண்மையையும் சொல்கிறேன். இந்தக் கதையை சிவாவுக்கு முன்பாக வேறொரு ஹீரோ கேட்டு எனக்கு வேண்டாம் என்று சொல்லி நிராகரித்திருக்கிறார். அந்த ஹீரோ வேறு யாருமில்லை.. நான்தான். ஆனால், அது எனக்கு முதலில் மறந்துவிட்டது. பின்பு படத்தைப் பார்த்தபோதுதான் என் நியாபகத்திற்கு வந்தது.
என்னிடம் சொன்னபோது இந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், பள்ளிக்கூட காட்சிகளை மட்டும் என்னால் செய்ய முடியாத சூழல் இருந்தது. அதனால்தான், இந்தக் கதையை நான் நிராகரித்தேன்…” என்றார் உதயநிதி ஸ்டாலின்.
இதன் பிறகு, சிவகார்த்திகேயன் பேசுகையில், “உதய் சார்.. உங்களுக்குக் கதை சொன்னதை இயக்குநர் சிபி என்னிடம் இப்போதுவரையிலும் சொல்லவே இல்லை. மற்றவர்களிடம் கதை சொன்னதையெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால், இதை மட்டும் சொல்லவில்லை…” என்றார்.