சுசீந்திரனின் இயக்கத்தில் நடிகர் ஜெய் இசையமைத்து நடித்திருக்கும் ‘சிவ சிவா’ திரைப்படம்..!

சுசீந்திரனின் இயக்கத்தில் நடிகர் ஜெய் இசையமைத்து நடித்திருக்கும் ‘சிவ சிவா’ திரைப்படம்..!

2002-ம் ஆண்டில் ‘பகவதி’ படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்து தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானவர் நடிகர் ஜெய்.

இதன் பின்பு ‘சென்னை-600028’ படத்தில் நாயகனாக நடித்து, ‘சுப்ரமணியபுரம்’ மூலமாக பிரபலமான நடிகரானார்.

இதுவரையிலும் 30 படங்களில் நடித்திருக்கும் ஜெய், தற்போது நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘சிவ சிவா.’

இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது.  தமிழில் ஜெய்யும், தெலுங்கில் ஆதியும் நாயகர்களாக நடித்துள்ளனர்.

தமிழில் இந்தப் படத்தில் நடித்ததோடு இல்லாமல் இந்தப் படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார் ஜெய். ஜெய் பிரபல இசைமைப்பாளர் தேவாவின் தம்பியான சம்பத்தின் தம்பி என்பதால் இசை பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர். இருந்தாலும் ஜெய் இசையமைக்கும் முதல் படம் இதுதான்.

இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். மேலும் முக்கியக் கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட், பால சரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கவிஞர்கள் வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி ஆகியோர் இந்தப் படத்திற்கான பாடல்களை எழுதியுள்ளனர்.

இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. தற்போது பின் பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் வெளியாகவுள்ளது.

Our Score