full screen background image

நடிகை கௌதமியின் அடாவடி – கொதிக்கும் ‘சிவா மனசுல புஷ்பா’ இயக்குநர்..! 

நடிகை கௌதமியின் அடாவடி – கொதிக்கும் ‘சிவா மனசுல புஷ்பா’ இயக்குநர்..! 

ஸ்ரீவாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.

தூத்துக்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரான சசிகலா புஷ்பாவிற்கும், தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி என்.சிவாவிற்கும் இடையிலான உறவை மையமாக வைத்துத்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இதனாலேயே இந்தப் படத்திற்கு பொருத்தமாக ‘சிவா மனசுல புஷ்பா’ என்று பெயர் வைத்தார் இயக்குநர் வாராகி. இப்போது இந்தத் தலைப்பே படத்திற்கு வில்லனாக வந்திருக்கிறது. படத்தின் தலைப்பை மாற்றினால்தான் இந்தப் படம் ரிலீசாக முடியும் என்கிற இக்கட்டான சூழல் இப்போது உருவாகியுள்ளது.

வேறு யாரும் இந்த தலைப்புக்கு உரிமை கொண்டாடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. உண்மையில் தலைப்பை மாற்றச் சொல்லி போர்க் கொடி தூக்கியிருப்பது சென்சார் போர்டுதான்.

Siva Manasula Pushpa Poster 01

இந்தப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதுமே தமிழக அரசியல் அரங்கத்தில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கியது உண்மைதான்.

ஆனால் இந்தப் படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டுக் காட்டியபோது  படத்தை பார்த்துவிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் சில வார்த்தைகளை மியூட் பண்ண சொன்னார்களாம்.

ஆனால் எதிர்பாராத இடியாக டெல்லியில் சென்சார் போர்டின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின்படி படத்தின் தலைப்பையும், படத்தின் மைய கேரக்டர்களான சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச் சொல்லிவிட்டார்களாம்.

இதை எதிர்த்து ரிவைஸிங் கமிட்டிக்கு விண்ணப்பித்திருக்கிறார் இயக்குநர் வாராகி. இதையடுத்து இரண்டு தினங்களுக்கு முன் சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை கௌதமி உள்ளிட்ட சில உறுப்பினர்கள். இந்தப் படத்தை பார்த்திருக்கிறார்கள்.

படத்தில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையை மட்டும் மியூட் பண்ண சொன்ன கௌதமி, கடைசியாக சென்சார் போர்டின் தலைமை அலுவலகம் அறிவுறுத்தியது போலவே படத்தின் தலைப்பையும், மைய கதாபாத்திரங்களின் பெயர்களான சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச் சொல்லி வலியுறுத்தினாராம்.

siva-manasula-puspha-stills-2

இயக்குநர் வாராகி, இது குறித்து கௌதமியிடம் அதற்கான விளக்கம் கேட்டபோது, “படத்தின் டைட்டிலும் கதாபாத்திர பெயர்களும் நிஜத்தில் தற்போது உயிருடன் இருக்கும் சிலரை குறிப்பிடுவதாக” கூறியுள்ளார் கௌதமி.

மேலும், அந்த இரண்டு கதாபாத்திரங்களும் இப்போதுள்ள நிஜ வாழ்க்கையில் யாரை குறிக்கின்றன என்பதையும் அவரே தன் வாயால் கூறினாராம். அதுமட்டுமல்ல, “சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நபர்களிடம் இருந்தும் அவர்கள் பெயரை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ்(NOC) வாங்கி கொடுத்தால் படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை…” என்றும் நிபந்தனை விதித்துள்ளார். 

இது பற்றிப் பேசிய இயக்குநர் வாராகி, “நடிகை கௌதமி இப்படி சொன்னது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் படத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே என நாங்கள் படத்தின் துவக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தும் கௌதமி இவ்வாறு சொன்னது ஆச்சர்யம் தந்தது.

SMP Stills 005

அவர் சொல்வது போல, ‘அந்தப் பெயர்கள் யாரைக் குறிப்பிடுகிறது என்பதை எழுத்துபூர்வமான உத்தரவாக கொடுங்கள்.. நான் அவர்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று தருகிறேன்’ என்று கேட்டபோது அப்படி எழுதித் தரவும் நடிகை கௌதமி நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார்.

அரசியல் கலந்த காதல் கதையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.  இந்தப் படம் தன் கணவனை மாற்றிக் கொள்ளும் ஒரு பெண்ணை பற்றியும் சொல்கிறது. இதற்கு முன் இது போன்ற விஷயத்தை யாருமே, எந்த படங்களுமே சொல்லவில்லையா என்ன..? ஒரு பெண் கணவனை மாற்றிக் கொள்கிறாள் என சொல்லப்பட்ட கதை, கௌதமியை பர்ஷனலாக பாதிக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை.

இதிலிருந்து சென்சார் குழு உறுப்பினராக படம் பார்த்த கௌதமி, சினிமாவையும் தனது பர்சனல் விஷயங்களையும் ஒன்றாக குழப்பிக் கொண்டிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. 

சினிமாவில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, வேறு துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி.. சென்சார் போர்டில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கதையை கதையாகத்தான் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு கேரக்டரையும் இவர் அவராக இருப்பாரோ என தாங்களாக நினைத்துக் கொண்டு தங்களது சொந்தக் கருத்தை முன் வைத்து சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சம் காட்டினால் அது சினிமாவின் அழிவுக்குத்தான் வித்திடும்.

சினிமா உலகத்தில் இருந்து கொண்டே நடிகை கௌதமியும் இப்படி செய்வது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது…” என்றார் வாராகி. 

இதையடுத்து நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதற்கும் தயாராகி வருகிறார் தயாரிப்பாளர் வாராகி.

 

Our Score