எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவு குறித்து பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இந்த நேரத்தில் தன்னால் சென்னையில் இருக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு தனது முகநூல் பக்கத்தில் இரங்கல் செய்தியை எழுதியிருக்கிறார்.
“எம்.எஸ்.விஸ்வநாதன் எனது ஆசான், எனது தந்தை, எனது இசை. எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்துவிட்டார். அவருக்கு நடந்து கொண்டிருக்கும் இறுதி அஞ்சலியில்கூட கலந்து கொள்ள முடியாத நிலை எனக்கு வர வேண்டுமா? அந்த அளவுக்கு சிறிய நல்லதைக் கூட நான் எனது வாழ்நாளில் செய்யத் தவறிவிட்டேனா என்ன..? இந்த நேரத்தில்தானா நான் அமெரிக்காவில் இருக்க வேண்டும்…?
நானும், இந்திய சினிமாவும் அனாதையாக நிற்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். கண்ணதாசனும், வாலியும் எழுதி வைத்த பாடல் வரிகளுக்கு மேலிருந்து அவர் இசையமைக்க இருக்கும் தெய்வீக இசையை கேட்க முடியுமா?
‘ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ’ வானில் முழு நிலவாக இருக்கிறார் அவர்” என்று தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
மேலும் தனது முகநூல் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.
கடந்த மே மாதம் எம்.எஸ்.விஸ்வநாதனை தான் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை அதில் பதிவிட்டிருந்தார் எஸ்.பி.பி.. அந்தப் புகைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. ஆளே அடையாளம் தெரியாமல் மிகவும் மெலிந்து போய், தளர்வாக இருந்தது பார்ப்போரை கண் கலங்க வைத்துவிட்டது..!