full screen background image

‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி.யின் உடல் தகனம் செய்யப்பட்டது..!

‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி.யின் உடல் தகனம் செய்யப்பட்டது..!

இன்று மதியம் 12.24 மணிக்கு ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. பெசண்ட் நகர் இடுகாட்டில் தன் தேகத்தை அக்னியிடம் ஒப்புவித்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக தமிழக்கு மக்களை இசைக் கடலில் மூழ்கடித்த அந்த மாமேதையின் மரணம் இயற்கையினால்தான் என்றாலும், தவிர்க்க முடியாத்துதான் என்றாலும் போறவர் போகின்றபோது மனசு விட்டுவிடுமா என்ன..?

நேற்று அவருடைய சாந்தோம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவருடைய பூதவுடலுக்கு தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது.

msv-3

நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், சரத்குமார், பிரபு, விஜய், விஷால், வடிவேல், நாசர், விவேக், ராஜேஷ், பாண்டியராஜன், சார்லி, சின்னிஜெயந்த், தாமு, நடிகைகள் குஷ்பு, எம்.என்.ராஜம், வடிவுக்கரசி, பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், எஸ்.தாணு, கேயார், கோவை தம்பி, டி.சிவா, பி.எல்.தேனப்பன், பி.டி.செல்வகுமார், டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, வசந்த், இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, ஸ்ரீகாந்த் தேவா, சங்கர் கணேஷ், கங்கை அமரன், விஜய் ஆண்டனி, அனிருத், கார்த்திக் ராஜா, பவதாரணி, பின்னணி பாடகர்கள் ஜேசுதாஸ், எஸ்.பி.சரண், உன்னிகிருஷ்ணன், சீனிவாஸ், பின்னணி பாடகிகள் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், டி.கே.கலா, ‘பெப்சி’ ஜி.சிவா உள்பட ஏராளமான திரை உலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். வி.ஜி.பி. குழுமத்தின் தலைவரும், தொழில் அதிபருமான வி.ஜி.சந்தோசம், அரிமா சங்க தலைவர் மணிலால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன், எடப்பாடி கே.பழனிச்சாமி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, டாக்டர் ஜெயவர்தன் எம்.பி. பா.வளர்மதி ஆகியோர் விஸ்வநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. சார்பில் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., திராவிடர் கழகம் சார்பில் கட்சியின் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத்தலைவர் வானதி சீனிவாசன், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் ந.சேதுராமன் ஆகியோரும் விஸ்வநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்த் திரையுலகத்தினர், ரசிகர்கள் என்றில்லாமல் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வந்து தங்களது அஞ்சலியை செலுத்திவிட்டுப் போனார்கள். அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளும் மெல்லிசை மன்னரின் அஞ்சலி நிகழ்ச்சியை நேற்று இரவு வரையிலும் நேரலை செய்து தங்களை பெருமைப்பட்டுக் கொண்டன.

அவருடைய மகன்களில் ஒருவரான பிரகாஷ் நேற்று மாலைதான் துபாயில் இருந்து வந்தார். ஆகவே எம்.எஸ்.வி.யின் உடல் தகவம் திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது.

msv-funeral-1

காலை 10.20 மணிக்கு அவருடைய பூதவுடல் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த அலங்கார ஊர்தியில் ஏற்றப்பட்டது. ஊர்திக்கு முன்னும், பின்னுமாக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நடந்து வர சாந்தோம் பகுதியில் இருந்து பெசண்ட் நகர் இடுகாடு நோக்கி ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலத்தின் முன்னால் அவரது ரசிகர்கள் பலரும் அவருடைய பாடல்களை பாடியபடியே சென்றார்கள். வழியெங்கும் மக்கள் கூட்டம். கூடியிருந்தவர்கள் மெல்லிசை மன்னருக்கு பிரியாவிடை கொடுத்தார்கள்.

11.40 மணிக்குத்தான் அந்த ஊர்வலம் பெசண்ட் நகர் இடுகாட்டிற்கு வந்து சேர்ந்த்து. இடுகாட்டில் கவிப்பேர்ரசு வைரமுத்து, நடிகர் கமல்ஹாசன், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா,  இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, இயக்குநர் வாசு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இறுதியஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

அங்கே கூடியிருந்த பல்வேறு இசைக் கலைஞர்கள் அவரவர் இசைக் கருவிகளைக் கொண்டு அவருடைய பாடல்களை இசைத்தபடியே இருந்தனர். “இதுதான் எங்களுக்கு இசையைக் கற்றுக் கொடுத்த அந்த மகானுக்கு நாங்கள் செய்கின்ற நன்றிக் கடன்..” என்றனர்..

எம்.எஸ்.வி.யின் உடலுக்கு காரியங்கள் செய்யப்பட்டு 12.24 மணிக்கு அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

பல்வேறு தொலைக்காட்சிகளும் கடைசிவரையிலும் இதனை நேரலை செய்து தமிழகம் முழுவதிலும் இருக்கும் இசை ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்கள்.

தமிழிசை உள்ளவரை, தமிழ் மொழி உள்ளவரை.. தமிழ்ச் சினிமாவுலகம் உள்ளவரை திரையிசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்..!

Our Score