full screen background image

பாரதியார் பாடலுக்கு ரொமான்ஸ் காட்டியிருக்கும் ரிச்சர்ட் ரிஷி-யாஷிகா ஆனந்த் ஜோடி!

பாரதியார் பாடலுக்கு ரொமான்ஸ் காட்டியிருக்கும் ரிச்சர்ட் ரிஷி-யாஷிகா ஆனந்த் ஜோடி!

எஸ்குயர் புரொடக்‌ஷன்ஸ் (Esquire Productions UK) நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘சில நொடிகளில்’..!

இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ‘புன்னகை பூ’ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் 5 பாடல்கள் உள்ளன. மேலும், ஒவ்வொரு பாடலுக்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். மசாலா காபி, ஸ்டாகாட்டோ மியூசிக் பேண்ட், ஜார்ன் சுர்ராவ், தர்ஷனா கே.டி & ரோஹித் மாட் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

பின்னணி இசையை பாலிவுட்டின் பிரபல இசை அமைப்பாளர் ரோஹித் குல்கர்னி செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் ஏஎம் ஸ்டுடியோவில் சவுண்ட் டிசைனிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் கலரில் வண்ணமயமாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்கியுள்ளார்.

‘ஜீன்ஸ்’, ‘மின்னலே’ போன்ற பல வெற்றிகரமான திரைப்படங்களைத் தந்த இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘புன்னகை பூ’ கீதாவுக்குச் சொந்தமான மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தற்போது ‘சில நொடிகளில்’ படத்தை வெளியிடுகிறது.

லண்டனில் வாழும் திருமணமான ஒரு தம்பதியைச் சுற்றி  நடக்கும் மர்ம கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. முழுக்க, முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் முக்கோண காதல் கதையாகவும், க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் உருவாகியுள்ளது. மத்திய லண்டனில் இருந்து 2 மணி நேரம் தொலைவில் உள்ள Chelmsford என்ற சிறிய நகரத்தில் முழு படமும் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில்  பாரதியாரின் ‘ஆசை முகம்…’ என்ற பாடலும் இடம் பெறுகிறது. இந்தப் பாடலை தம்பதியினரின் காதல் பாடலாக படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடல் காட்சியை சமீபத்தில் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பாடல் காட்சியில் படத்தில் தம்பதியினராக நடித்திருக்கும் நாயகன் ரிச்சர்ட்டும், நாயகி யாஷிகா ஆனந்தும் நெருக்கமாக நடித்திருக்கிறார்கள். 

இந்தப் படம் குறித்து பேசுவதற்காக தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர், இயக்குநர் வினய் பரத்வாஜ், ரிச்சர்ட் ரிஷி மூவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் பேசும்போது, “ரிச்சர்ட் ரிஷி நல்ல நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதரும்கூட. நான் சினிமாத் துறையில் பல வருடங்கள் பணியாற்றியிருக்கிறேன், பல ஹீரோக்களுடன் பயணித்திருக்கிறேன். ஆனால், நான் பார்த்த நல்ல உள்ளம் கொண்ட, சிறந்த மனிதர் ரிச்சர்ட் ரிஷிதான். அவருக்கு இந்தப் படம் நல்லதொரு எதிர்காலத்தை கொடுக்கும்.

இயக்குநர் விஜய் பரத்வாஜ் இந்தப் படத்தை தொழில் நுட்ப ரீதியாக தரமான படமாக கொடுத்திருக்கிறார். லண்டனில் இந்த படத்திற்கு நான்கு லொக்கேஷன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த நான்கு லொக்கேஷன்களும் ஒரே இடத்தில் கிடைத்தது எங்களுடைய அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.

அது மட்டுமின்றி படத்தில் வரும் ஒரு வீடு மிக அழகாக இருப்பதோடு, கதைக்கு மிக சரியாகவும் பொருந்தியிருக்கிறது. இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். வரும் நவம்பர் 24-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

நடிகர் ரிச்சர்ட் ரிஷி பேசும்போது, “தொடர்ந்து இரண்டு வெற்றிகளை கொடுத்த பிறகும் நான் சிறு இடைவெளி எடுத்துக் கொண்டதற்கு காரணம் கதை தேர்வுக்காகத்தான்.

இந்த ஒரு வருடத்தில் என்னை தேடி நிறைய கதைகள் வந்தன. ஆனால், அவைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவும், இதற்கு முன்பு என் நடிப்பில் வெற்றி பெற்ற படங்களின் சாயலிலும் இருந்தன, அதனால் அந்த கதைகளை நிராகரித்து விட்டேன். வித்தியாசமான அல்லது புதிய ஜானர் கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

அந்த சமயத்தில்தான் வினய் இந்தக் கதையை என்னிடம் சொல்லி திரைக்கதையை கொடுத்தார், படித்து பார்த்ததும் உடனே சம்மதம் சொல்லிவிட்டேன்.

நொடி பொழுதில் ஒருவரது வாழ்க்கை அவர் நினைத்து பார்க்காதபடி மாறிவிடும், அதனால்தான் ‘சில நொடிகளில்’ என்று தலைப்பு வைத்திருக்கிறோம்.

புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் மற்றும் என்னுடைய கதாபாத்திரம் என்று எங்கள் மூன்று பேரை சுற்றிதான் கதை நடக்கும்.

கதை முழுக்க முழுக்க, முழுக்க லண்டனில் நடக்கிறது. இந்தியாவை விட்டுவிட்டு லண்டனை கதைக் களமாக தேர்வு செய்ததற்கு காரணம்,  இந்தக் கதை சர்வதேச அளவில் இருப்பதாலும், என்னுடைய கதாபாத்திரம் காஸ்மெடிக் சர்ஜன், யாஷிகா ஆனந்தின் கதாபாத்திரம் மாடல் என்பதாலும், இது போன்ற துறைகளில் லண்டன், பிரான்ஸ் போன்ற இடங்கள்தான் முன்னிலையில் இருப்பதாலும்தான்…!

நிச்சயம் ஒரு வித்தியாசமான படமாக மட்டும் இன்றி, ரசிகர்களை எண்டர்டெயின் பண்ண கூடிய படமாக இருப்பதோடு, என்னை வேறு மாதிரியாக காட்டும் படமாகவும் இது இருக்கும்..” என்றார்.

இயக்குநர் வினய் பரத்வாஜ் படம் பற்றிப் பேசும்போது, “ரிச்சர்ட் ரிஷி தன் வாழ்க்கையில் பல மாடல் அழகிகளை சந்திக்கிறார். அப்படி ஒருவர்தான் யாஷிகா ஆனந்த், இவருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இந்தப் பழக்கம் ஏற்கனவே புன்னகை பூ கீதாவுடன் மண வாழ்க்கையில் இருக்கும் ரிச்ச்ர்ட் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது, அதனால் வரும் பிரச்சனைகள் என்பதுதான் படத்தின் கதை..!

யாஷிகா ஆனந்த் விபத்துக்கு பிறகு நடிக்கும் படம் இது. அவர் ஒரு மாடல் என்பதால், கிளாமராக நடித்திருப்பதோடு, தன்னை நிரூபிக்கும் வகையிலும் நடித்திருக்கிறார். ரிச்சர்ட், யாஷிகா, புன்னகை பூ கீதா இந்த மூன்று பேரை சுற்றித்தான் மொத்தக் கதையும் நடக்கும். இவர்களை தவிர லண்டனை சேர்ந்த சில நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு மக்கள் திரையரங்கிற்கு வந்து ஒரு படத்தை பார்க்கிறார்கள் என்றால் அது கதையளவில் மட்டும் சிறப்பாக இருந்தால் போதாது, தொழில் நுட்ப ரீதியாகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. திரையரங்கில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புதுவித உணர்வை கொடுக்க வேண்டும், அதுபோன்ற படங்களைத்தான் மக்களும் விரும்புகிறார்கள். அதனால், தொழில் நுட்ப ரீதியாகவும் படம் பேசப்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.

இந்த சில நொடிகள்’ ஸ்டைலிஷான படமாக மட்டும் இன்றி தொழில் நுட்ப ரீதியாகவும் மிகப் பெரிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகத்தில் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். பின்னணி இசையும் பேசப்படும் விதத்தில் இருக்கும்.

பாரதியாரின் ஆசை முகம்’ பாடல் காதல் உணர்வுடன் இருப்பதால்தான், அந்த உணர்வுடன் காட்டப்படும் ரொமான்ஸ் காட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்குமே என்றெண்ணி அந்தப் பாடலை இந்தப் படத்தில் வைத்தோம். விரைவில் இரண்டாவது பாடலையும் வெளியிட இருக்கிறோம். அதைத் தொடர்ந்து படத்தின் முன்னோட்டமும் வெளியாகும்..” என்றார்.

Our Score