தென்னிந்திய நடிகர் சங்கத்தை தொடர்ந்து இப்போது அடுத்த தேர்தல் கலாட்டாக்கள் SICA எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்திலும் தொடர்கிறது.
கடந்த 1971-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2002-2003-ம் ஆண்டுக்கு பிறகு அந்தச் சங்கத்தில் இதுவரையிலும் தேர்தல் நடத்தப்படவேயில்லையாம்.
இதனால் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை அணுகியிருக்கின்றனர். வழக்கம்போல நீதிமன்றம் வழக்கறிஞர் செந்தில்நாதன் என்பவரை அட்வகேட் கமிஷனராக நியமித்து தேர்தலை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 8-ம் தேதியன்று தேர்தலை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
நவம்பர் 8-ம் தேதி காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணிவரையிலும் வடபழனி இசைக் கலைஞர்கள் சங்கத்தில் இந்த வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்டு அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த்த் தேர்தலில் மூன்று அணியினர் நிற்கின்றனர். சங்கத்தின் இப்போதைய செயலாளரும், பெப்சி அமைப்பின் அகில இந்திய தலைவருமான பெப்சி சிவாவின் தலைமையில் ஒரு அணியும், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தலைமையில் ஒரு அணியும், கே.வி.கன்னியப்பன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன.
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்திலும் தேர்தலை ஒத்தி வைக்க சிலர் முயன்று வருகின்றனர். நவம்பர் 10-ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் அதையொட்டி உறுப்பினர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும் என்பதால் தேர்தல் தேதியை தள்ளி வைக்கும்படி நேற்றுகூட ஒரு சமரசக் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால் பலரும் இதற்கு ஒத்துக் கொள்ளாததால் தேர்தல் தேதியில் மாற்றம் செய்யவில்லை.
ஆனால் இன்றைக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தேர்தல் தேதியை தள்ளி வைக்க ஒரு டீம் முயன்று வருகிறதாம். இதன் முடிவு இன்று மாலைக்குள் தெரிய வரும்.
பி.சி. ஸ்ரீராம் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு ராம்னாத் ஷெட்டி போட்டியிடுகிறார்.
துணைத் தலைவர்கள் பதவிக்கு ராஜீவ் மேனனும், ப்ரியனும் போட்டியிடுகின்றனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு நடிகர் இளவரசு, பி.பாலமுருகன், ஜெ.ஸ்ரீதர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு இயக்குநர் ஆர்.வேல்ராஜ், ‘மைனா’ சுகுமாரன், ஆர்.டி.ராஜசேகர், கே.ஏகாம்பரம், அரவிந்த் கிருஷ்ணா, ஆர்.திவாகரன், நடிகர் ஆரோக்கியதாஸ், கார்த்திக் ராஜா, டி.கண்ணன், வி.இளம்பரிதி, என்.அழகப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனராம்.